அத்தை



ஊரிலிருந்து வந்து தங்கியிருக்கும் மாமியாரை மீண்டும் ஊருக்கே அனுப்பி வைப்பதுதான் எவ்வளவு பெரிய சோதனை. அந்தச் சோதனையில் ஜெயித்துவிட்டாள் அகிலா. எடுத்ததற்கெல்லாம் குற்றம் சொல்லி பிரச்னைகளை வளர்த்து அத்தனை பழியையும் அத்தை மேல் போட்டு... ‘ஹப்பா, போதும்டா சாமி!’ என்ற எண்ணத்தை எல்லோருக்கும் ஏற்படுத்தியாச்சு. மாலை ரயிலுக்குப் போவதாக இருந்தார் அகிலாவின் மாமியார்.

மதியம் சாப்பாடு முடிந்ததும், ‘‘எதிர் வீட்டுக்குப் போய் ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடறேன்மா!’’ என்று கிளம்பியவர், ரொம்ப நேரம் வரவேயில்லை. அகிலா தவித்துப் போய்விட்டாள்.

‘‘ரயில் கிளம்பிப் போயிடப் போகுது...’’ என்று குரல் கொடுத்து மாமியாரை வரவழைத்தாள். ‘‘இதோ வந்துட்டேன்... போனா லேசிலே அனுப்பறாளா? தன்னோட வீட்டுச் சண்டையை எல்லாம் கதை கதையா சொல்லிட்டே இருக்கா... அப்படித்தான் பாரு அகிலா...’’ என்றபடியே கைப்பையைத் தூக்கினாள் அத்தை.

‘‘அத்தை பையைக் கீழே வைங்க..! இவரை அனுப்பி டிக்கெட்டை கேன்சல் பண்ணிடச் சொல்றேன்... இன்னொரு நாள் ஊருக்குப் போனா போதும்.’’‘‘உம்... அப்புறம்?’’ ‘‘எதிர்வீட்டுக் கதையை முழுக்கச் சொல்ல ஆரம்பிங்க!’’ என்று பரபரத்த அகிலாவை வளைத்த பெருமையில் அழுந்த உட்கார்ந்தாள் அத்தை.                  

பம்மல் நாகராஜன்