நியூஸ் வே



*‘மாஸ்’. வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்திற்கு இதுதான் டைட்டில் என உறுதி செய்யப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு இதில் நயன்தாரா, எமி ஜாக்ஸன் என இரண்டு ஜோடிகள்.

*தொடர்ந்து நடிப்பாரா மாட்டாரா என்று இப்போதைக்கு அமலா பாலுக்கே தெரியாது. கணவரின் விளம்பரப் பட நிறுவனத்தில் இணைந்து நிர்வாகம் செய்யும் யோசனை மட்டும் இப்போதைக்கு இருக்கிறது.

*சார்மி, ரொம்ப நாளைக்குப் பிறகு கோலிவுட்டுக்கு வருகிறார். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் சார்மியும் ஒரு நாயகி
என்கிறார்கள்.

*ஆரூடமா, நிஜமா, கணிப்பா, கற்பனையா... தெரியவில்லை. ‘‘அடுத்த நட்சத்திர தம்பதி சிம்பு-ஹன்சிகாதான்’’ என நிகழ்ச்சி ஒன்றில் ப்ரியா ஆனந்த் லூஸ் டாக் விட்டது சம்பந்தப்பட்ட இருவரையும் கடுப்பாக்கியுள்ளது. ‘சிம்புவே இப்படி சொல்லச் சொல்லியிருக்கலாம்’ என்ற செய்தியும் வட்டமடிக்கிறது.

*கடந்த வாரம் தனது 84வது பிறந்த நாளைக் கொண்டாடிய பாலசந்தரின் காலில் விழுந்து ஆசி பெற்றார் கமல். அவருக்கு ‘நினைத்தாலே இனிக்கும் இனித்தது’ என்ற வாசகம் பொறித்த தனது உருவப்படத்தை சர்ப்ரைஸ் பரிசாக வழங்கினார் பாலசந்தர்.

*‘லிங்கா’வின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில்தான். ரஜினி நான்கு கெட்டப்களில் தோன்றும் ஸ்பெஷல் பாடல் காட்சி ஒன்று பிரமாண்ட செட்டுக்குள் படமாகவுள்ளது. என்னென்ன கெட்டப்புகள் என்ற ரகசியத்தில் கௌபாய், கடல் கொள்ளையன் ஆகிய இரண்டு கெட்டப்புகளில் ரஜினி அதகளம் செய்யப் போகும் செய்தி மட்டும் கசிந்துள்ளது.

*‘தம்’மடிப்பது போல நடிக்கச் சொன்னால் தலை தெறிக்க ஓடும் ஹீரோயின்கள் மத்தியில், ‘‘சிகரெட் பிடிக்கும் சீன்தானே’’ என்று அசால்ட்டாக ஊதித் தள்ளியிருக்கிறார் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ புகழ் விசாகா சிங். ‘ரவுடி ஃபெல்லோ’ தெலுங்குப் படத்தில் இந்தக் காட்சி இடம் பெறுகிறது.

*‘ராஜபாட்டை’க்குப் பிறகு தமிழில் வாய்ப்பில்லாமல் போன தீக்ஷா சேத் இப்போது உற்சாகமாக இருக்கிறார். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று... அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் ‘லெகர் ஹம் தீவானா தில்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையால் மிரட்டியிருப்பது; இரண்டு... வித்யா பாலன் அவரை போனில் கூப்பிட்டு வாழ்த்துச் சொன்னது!

*தமிழ்ச்சங்கம் நடத்திய விழாவில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க சென்றிருந்த த்ரிஷா, தனக்கு பிடித்த நடிகர்கள் பெயரை அஜித், சூர்யா, விக்ரம், கமல், விஜய் என பட்டியலிட்டது வில்லங்கமாகி இருக்கிறது. ‘‘எங்கள் தளபதிக்கு 5வது இடம்தானா?’’ என விஜய் ரசிகர்கள் கொதிக்கிறார்கள்.

*கங்கனா ரணாவத் நடித்த ‘குயின்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பரபரவென ரீமேக் ஆகிறது. நான்கு மொழிகளிலுமே ஹீரோயினாக நடிக்க அசினைக் கேட்டார்கள். பாலிவுட்டில் ஒரே ஒரு படம் மட்டுமே கைவசம் இருந்தாலும், ‘இங்கிருந்து திரும்ப தென்னிந்தியா போனால் அப்புறம் மறந்துவிடுவார்கள்’ என்ற பயத்தில் மறுத்து விட்டார்.

சைலன்ஸ்

உச்ச நடிகரும் பிரமாண்ட இயக்குனரும் இன்னொரு முறை கைகோர்ப்பது உறுதி ஆகிவிட்டது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்டத்தைக் காட்டும் முயற்சி இது. தியேட்டரும் வைத்திருக்கும் இனிஷியல் தயாரிப்பு நிறுவனம் ஆர்வமாக இயக்குனரை அணுகி பட்ஜெட் கேட்டிருக்கிறது. ‘‘அதெல்லாம் இப்போதைக்கு சொல்ல முடியாது’’ என இயக்குனர் சொல்ல, அவர்கள் பின்வாங்கி விட்டனர்.  

நடிகையின் கணவர் இயக்கும் பெரிய பங்களா படத்தில் ‘‘எனக்குத்தான் முக்கியத்துவம். விரல் நடிகரின் காதலிக்கு தம்மாத்துண்டு கேரக்டர்தான்’’ என மங்களகரமான குதிரை நடிகை வாயாடி வருகிறார். விஷயத்தைக் கேள்விப்பட்ட அவர், ‘‘உன்னைவிட மூணு மடங்கு சம்பளம் வாங்குறவ நான். எங்கிட்ட வாலாட்டினா, எந்தப் படத்திலும் உனக்கு வாய்ப்பு கிடைக்காதபடி செஞ்சிடுவேன்’’ என உறுமி யிருக்கிறார்.