அவன் அவள் unlimited



நமீதா ஹன்சிகாவை தமிழகம் விரும்புவது ஏன்?

‘நம்ம பரம்பரை என்ன! பாரம்பரியம் என்ன! நாமெல்லாம் எப்படி வாழ்ந்தோம்!’ என அடிக்கடி நாம் நம் தமிழ்ச் சமூகத்தை நினைத்துப் புலம்புவதுண்டு. கிட்டத்தட்ட அப்படித்தான் நமது இடை ரசனையையும் நினைத்து வருந்த வேண்டும் போலிருக்கிறது.சிறு பூச்சியின் சிறகசைவில் கூட துவண்டுவிடும் அளவுக்கு ஸ்லிம் இடை தமயந்திக்கு இருந்ததாகச் சொல்கிறார் புகழேந்திப் புலவர்.

சீதையை, ‘பொய்யோ எனும் இடையாள்’ அதாவது, இல்லாத இடையழகி என்கிறார் கம்பர். அப்படியெல்லாம் இடையை வர்ணித்த தமிழன், இன்று ‘நாட்டுக்கட்ட... மாட்டிக்கிட்ட’ என்று பாட்டெழுதுகிறான். இடுப்பையும் ஒபிசிட்டியால் அதன் மேல் விழும் மடிப்பையும் கவர்ச்சிப் பொருளாகப் பேசுகிறான். ஏன் நேர்ந்தது இந்த விபத்து?

‘சேச்சே... இங்கேயும் அசின் இல்லையா? த்ரிஷா இல்லையா? அந்தக் காலத்தில் ஸ்ரீதேவி இல்லையா?’ என விதிவிலக்குகளைச் சொல்லி தப்பிக்க முடியாது. உலகம் முழுவதுக்குமே தெரிந்து போய்விட்டது... தமிழ் மக்களின் கொழுக் மொழுக் ரசனை. பாலிவுட் நடிகைகள் கொஞ்சம் டயட்டை விட்டுக் கொடுத்து தடித்தால் போதும்... அடுத்த பிரஸ் மீட்டிலேயே கேட்பார்கள் ‘சவுத் இண்டியன் சினிமாவுக்குப் போறீங்களா?’

இங்கே குஷ்புவுக்கு இருந்த க்ரேஸ், இந்தியாவின் எந்த மொழி நடிகைக்கும் இருந்திருக்க முடியாது. நக்மா, ஜோதிகா, நமீதா, ஹன்சிகா என தமிழர்களின் கொழுக் மொழுக் ரசனை இன்றும் தொடர்கிறது. இவர்கள் அளவுக்கு பருமன் இல்லை என்றாலும் நம்மைப் பொறுத்தவரை கொஞ்சம் உயரம் குறைவாக இருப்பது அந்தக் ‘குறையை’ பேலன்ஸ் செய்யும். மார்பு, இடை, இடுப்பு (bust waist  hip) ஆகியவை அருகருகே அமையப் பெற்ற பெண்களின் வடிவம், ஓரளவு கொழுக் மொழுக் தோற்றம் தரும். இந்த வகைக்குள் கிட்டத்தட்ட அந்தக் கால தமிழ் ஹீரோயின்கள் எல்லோரையும் அடக்கலாம். அம்பிகா, ராதா, ராதிகா மாதிரியானவர்களுக்குக் கூட தமிழ்நாட்டில் மட்டுமே ஹிட் ஆகக் கூடிய, இந்த வகை உடற்கட்டுதான்.

நதியா, அமலா என சில ஸ்லிம் நடிகைகள் அவ்வப்போது வாய்த்தாலும் அவர்களை நாம் ஹோம்லியாகத்தான் பார்த்தோமே தவிர, கவர்ச்சியாக அல்ல. நம்மைப் பொறுத்தவரை கவர்ச்சி என்றால், கொழுக் மொழுக்தான். சமீப காலமாக ‘ஜிங்கு ஜிங்கு ஜிமிக்கி போட்டு’ டைப் பாடல்களில் வரும் கவர்ச்சி நடனங்கள், அந்த கொழுக் மொழுக் அளவைக் கூட தாண்டிவிடுகின்றன. நடிகைகளைப் பற்றி நாம் ஏன் இவ்வளவு விவாதிக்க வேண்டும்? ஒரு சமூகத்தில் உள்ள ஆண்களின் ரசனைக்கு நடிகைகள் ஓரு குறியீடு.

‘இப்படித்தான் இருக்க வேண்டும்’ என நடிகைகள் மூலமாக சாதாரணப் பெண்களையும் கட்டாயப்படுத்துகிறது அந்த ரசனை. இயல்பாய் வந்த தளதள ரசனையும் உலகமயமாக்கல் கொண்டு வந்த ஜீரோ சைஸ் ரசனையும் கலந்ததொரு கலாசாரத்தில் இன்று நாம் இருக்கிறோம். ஒரே விளம்பர இடைவேளையில் உடல் எடையைப் பெறவும், குறைக்கவும் மருந்து விற்கப்படு வது இங்கே மட்டும்தான். இந்தக் குழப்பத்துக்கு விடை காண வேண்டாமா? இந்தியாவே இலியானாவை ‘இடையழகி’ என்றாலும் தமிழ்நாடு அவரிடம் ‘ஏதோ’ குறை கண்டு ஒதுக்கி வைப்பது ஏன்? அது தெரிய வேண்டாமா?

இதற்கு சமூகக் காரணங்களைக் காட்டுகிறது சைக்காலஜி. பாலியல் இச்சைகளும் ரசனைகளும் கட்டுப்படுத்தி வைக்கப்பட்ட சமூகத்தில், ‘கிடைத்ததை ரசிக்கும்’ நிலை வந்துவிடும் என்பது பொது விதி. அதன்படி, பரிதாப உணர்ச்சியை மட்டுமே தூண்டக் கூடிய ஷகிலாவின் உடல் கூட, இங்கே பாலியல் உணர்ச்சியைத் தூண்டியது, சோக வரலாறு. ஆனால், பாலியல் வடிகாலுக்கு வேண்டுமானால் இது பொருந்தலாமே தவிர, நம் தமிழ்ச் சமூகத்தின் ‘சதைப் பற்று’க்கு இதை மட்டுமே காரணமாக ஏற்க முடியாது.

பருமனானவர்கள் மட்டும்தான் இங்கே கவர்ச்சி காட்ட முன்வந்தார்களா என்ன? எத்தனை ஆப்ஷன் இருந்தாலும் நமது ரசனை தளதள பெண்கள்தான். இதற்கு என்ன காரணம்? நமக்காக இந்த ஆராய்ச்சியை டேனியல் நெட்டில் என்பவர் செய்திருக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த மனிதப் பண்பியலாளரான இவர், ‘‘அந்தந்த ஊரின் பொருளாதார நிலைக்கும் ஆண் பெண் அட்ராக்ஷனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு’’ என்கிறார்.

‘‘பொருளாதாரத்தில் உயர்ந்த பணக்கார நாடுகளில் பெண்கள் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் கொஞ்சம் பூசினாற்போன்ற பெண்களையே விரும்புகிறார்கள். காரணம், பணக்கார வர்க்கத்தில் பெண் ஸ்லிம்மாக இருப்பது அவள் மனக்கட்டுப்பாட்டைக் காட்டுகிறது. ஆனால், ஏழை வர்க்கத்துப் பெண்ணின் ஜீரோ சைஸ் இடை, அவளின் வறுமையைக் காட்டுகிறது’’ என்கிறார் டேனியல்.

அதாவது, மக்கள் வாய்க்கும் வயிற்றுக்குமே கஷ்டப்படும் ஏரியாக்களில், கொழுக்மொழுக் பெண்ணைப் பார்க்கும் இளைஞன், அவளை வளமான வாழ்வின் குறியீடாகக் கொள் கிறான். ‘தளதள’வென்றிருக்கும் அவளின் சந்ததியில் தன்னையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறான். இந்த ஆதிகால உள்ளுணர்வுதான் நம்மை குஷ்புவுக்கு கோயில் கட்டத் தூண்டியிருக்கிறது.

அப்படியானால்..? நம்ம தமிழ்நாடு வறுமை நாடா? சோழ நாடு சோறுடைத்து என்பார்களே அதெல்லாம் சும்மாவா? சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் எல்.வெங்கடாசலத்திடம் கேட்டோம்...

‘‘இருக்கும் வளத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதில் நாம் சிறந்தவர்கள். ஆனால், இயற்கை கொடுத்த வளங்களைப் பொறுத்தவரை, வட மாநிலங்களை விட தமிழகத்துக்குக் கிடைத்திருப்பது குறைவுதான். இமயத்தில் இருந்து வழியும் வற்றாத நதிகள் அங்கே பிரமாண்டமான நீர்வளத்தைத் தருகின்றன. இங்கே நமக்கு நீர்வளம் போதவில்லை என்பதால்தான் இந்திய நதிகளை இணைப்பதைப் பற்றிப் பேசுகிறோம். அதே மாதிரி ஆதி மனிதனுக்கு வாழ்வாதாரமாக இருந்தது காட்டு வளம். அதுவும் அசாம், மணிப்பூர், மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் தமிழ்நாட்டை விட அதிகம்’’ என்றார் அவர்.

அப்போ, தளதள பெண்களை நாம் ரசிக்க வறுமைதான் காரணமா? சங்க இலக்கியத்தில் இடை வர்ணனை மூலம் மறைமுகமாக நாட்டு வளமும் சொல்லப்பட்டதா? அப்படியென்றால் எப்போதும் பனிமூட்டம் கொண்ட மேலை நாடுகளில் மட்டும் என்ன வளம் இருக்கிறது? அங்கெல்லாம்  இடை மெலிந்த பெண்கள் ரசிக்கப்படுகிறார்களே ஏன்?
அந்த ரசனையே ஒரு மாயை என்கிறார்கள் நிபுணர்கள். அதற்கு எதிர்ப்பு இயக்கங்கள் எல்லாம் கூட அங்கே துவங்கிவிட்டன. 

அடடா! இந்த ஃபிகர் இன்னும் கொஞ்சம் ஸ்லிம் ஆனா, செம அழகா இருக்கும்!

சே...பொண்ணு இன்னும் கொஞ்சம் பூசினாப்ல இருந்தா அப்படியே அள்ளும்!

கடைசியா என்னதான்டா சொல்ல வர்றீங்க?

அழகைத் தேடி...

‘ஆணுக்கு எப்படிப்பட்ட பெண்ணைப் பிடிக்கும்?’ என்பது நிஜமாகவே மில்லியன் டாலர் கேள்வி. எந்த மாதிரி நடிகை உலகம் முழுக்க ஹிட் ஆவாள் என முன்கூட்டியே உளவியல் உலகம் அறிவித்தால், அவள் மீது பல கோடி டாலர்களை முதலீடு செய்ய கம்பெனிகள் காத்திருக்கின்றன. அதற்காகவே பல இணையதளங்கள் ஆண்களின் ‘பெண் ரசனையை’ அறிய முற்படுகின்றன. அதில் முக்கியமான ஆய்வுத் தளம் www.app.uniregensburg.de/Fakultaeten/PPS/Psychologie/Beautycheck/

திரையில் தெரியும் ஒரு பெண்ணின் உடல் எவ்வளவு அகலத்தில் இருக்கலாம், மார்பு, இடை, இடுப்பு, கால்களின் நீளம் போன்றவை எவ்வளவு இருக்கலாம் என்பதையெல்லாம் இந்தத் தளத்தில் நாமே மாற்றி வைக்க முடியும். நமக்குப் பிடித்த வடிவத்தில் அந்தப் பெண்ணை உருவாக்கிவிட்டு நெக்ஸ்ட் அழுத்தினால், உங்கள் ரசனை அந்த ஆய்வில் சேர்த்துக்கொள்ளப்படும்!

 தேடுவோம்...

கோகுலவாச நவநீதன்