நடைவெளிப் பயணம்



யதார்த்தமும் புதிய யதார்த்தமும்

இரண்டாம் உலகப் போர் 1945ம் ஆண்டில் முடிவுக்கு வந்தபிறகு, ஓரிரண்டு விதிவிலக்குகள் தவிர ஐரோப்பிய நாடுகள் 95 சதவீதம் பாழடைந்து கிடந்தன. அந்தப் பாழ்நிலத்திலிருந்து ஒரு புதிய புனைவைத் திரையில் காட்ட முயற்சி செய்தவர்கள், யதார்த்தத்தை மீறிய சகிப்புத்தன்மை கொண்ட ஒரு மனிதனையும் பின்னணியில் உலகையும் காட்ட வேண்டி வந்தது.

யுத்தக் காட்சிகள், படையெடுப்பின்போது பாழடைந்த கட்டிடங்களையும் தாறுமாறாகக் கிடக்கும் பிணங்களையும் கவனியாமல் உயிருக்குத் தப்பியோடுதல், மாபெரும் கட்டிடங்களும் பாலங்களும் சிதறி விழுதல் போன்ற காட்சிகளை நடிப்பில் கொண்டு வராமல் இருப்பதை அப்படியே காட்டுதல்...

 இதெல்லாம் புதிய யதார்த்தமாகின. அந்த இயக்கத்தில் முக்கியமான ஒருவராகக் கருதப்படும் ராபெர்டோ ரோசிலினியின் பெயர் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பத்திரிகைகளில் அடிபட்டது. அந்த விஷயத்தில் ஓர் இந்தியப் பெண்ணும் சம்பந்தப்பட்டிருந்தாள். அவள் பெயர் சோனாலி தாஸ்குப்தா.

ராபெர்டோ ரோசிலினி புதுப்பாதை காட்டிய திரைப்படக் கலைஞராக இருக்கலாம். அவரது படமான, ‘பாதுகாப்பற்ற ரோம் நகரம்’ (Rome  Open City) அந்த   நாளில் ஒரு தேவதையாகக் கருதப்பட்ட இங்கிரிட் பெர்க்மனை நிலை தடுமாறச் செய்தது. அவருடைய கணவனையும் ஒரு குழந்தையையும் விட்டு ரோசிலினியோடு ‘ஓடிப் போகச்’ செய்தது.

இருவருடைய சினிமாப் பார்வையும் மிகவும் மாறுபட்டவை. பல வருடங்கள் கடுமையான பயிற்சிக்குப் பிறகு நடிகையான பெர்க்மனுடன் தெருவில் போகும்போது எதிரே வருபவனை நிறுத்தி, அவனை பெர்க்மனோடு ரோசிலினி நடிக்க வைப்பார். ஒரு குழந்தை, நான்கைந்து படங்களுக்குப் பிறகு இருவரும் பிரிந்து விட்டனர்.

அப்போதுதான் நேருவின் விருப்பப்படி ரோசிலினி இந்தியா பற்றி ஓர் ஆவணப் படம் எடுக்க அழைக்கப்பட்டார். இந்தியப் பங்குக்கு ஹரிதாஸ் குப்தா என்பவர் நியமிக்கப்பட்டார். ஹரிதாஸ் குப்தாவின் மனைவி சோனாலி. சமீபத்தில் மறைந்த இவருடைய இரங்கல் பற்றிய பல பதிவுகள், ரோசிலினியுடன் இவர் ‘ஓடி’ப் போக நேரு உதவியது போல இருந்தன. ரோசிலினி வந்த வேலையை முடிக்காமல், ஹரிதாஸ் குப்தாவின் மனைவியான சோனாலியோடு ‘ஓடி’ப் போய் விட்டார்.

பெர்க்மன் போல சோனாலி ஒரு குழந்தையை கணவனுடன் விட்டு, ஒரு வயதுகூட முடியாத இரண்டாவது குழந்தையுடன் இத்தாலி சென்று விட்டாள். பெர்க்மன் ஓர் சர்வதேச நட்சத்திரம். ஆனால் சோனாலிக்கு அப்படி ஏதும் சொல்லக்கூடிய தகுதி இல்லை. ஒரு குழந்தைக்குப் பிறகு ரோசிலினியும் அவளும் பிரிந்துவிட்டார்கள். சோனாலி இத்தாலியிலேயே தங்கி இந்த ஜூன் மாத ஆரம்பத்தில் இறந்து விட்டாள்.

கணவன் - மனைவியாக கடைசிவரை வாழா விட்டாலும் பெர்க்மனுக்கு ரோசிலினி மீது அக்கறை குறையவில்லை. ரோசிலினியின் ‘துரோக’த்துக்காக, அவர் எடுத்த திரைப்படச் சுருள்களை இந்திய அரசு பறிமுதல் செய்து விட்டது. ஒரு முறை நேரு லண்டன் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்க பெர்க்மன் அனுமதி கேட்டாள். ஒரு பிற்பகல் விருந்து. விருந்தின்போது பெர்க்மன் நேருவிடம் சொன்னாள்...

 ‘‘உண்மை. நீங்கள் கொடுத்த வேலையை ரோசிலினி செய்யவில்லை. அதை மன்னிக்கக் கேட்கவில்லை. ஆனால் சினிமாதான் அவன் உயிர், ஜீவன் எல்லாம். அவன் எடுத்த சுருள்களை உங்கள் அரசு முடக்கி வைத்திருக்கிறது. அதை அவனிடம் திருப்பிக் கொடுக்கக்கூடாதா? அதை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்ய
முடியும்?’’

அடுத்த நாளே நேரு உத்தரவுப்படி, ரோசிலினி இந்தியாவில் எடுத்த சுருள்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இது நடந்தபோது பெர்க்மனும் ரோசிலினியும் பிரிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அதே போல ரோசிலினியின் ஒரு பிறந்த நாளை அவள் வீட்டில் விருந்து கொடுத்துக் கொண்டாடினாள். அப்போது உதவியாளன் போல இருந்த ஒரு பையன் பரிமாறினான். பெர்க்மன் சிரித்துக்கொண்டே கேட்டாள்: ‘‘இந்தப் பையனை அடையாளம் தெரியவில்லையா? இவன் உன் மகன் ராபெர்டோ!’’

ரோசிலினி இறந்தபோது பெர்க்மன்தான் முன்முயற்சி எடுத்து அவருடைய முதல் மனைவி, சோனாலி மற்றும் நண்பர்கள், உறவினர்களுக்குத் தகவல் அனுப்பினாள். ரோசிலினியிடம் சில அபூர்வமான குணங்கள் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெர்க்மன் போன்ற ஒரு நட்சத்திரம் இவ்வளவுதூரம் இறங்கிவந்து அக்கறை எடுக்க வாய்ப்பில்லை.

சோனாலி இத்தாலியிலேயே தங்கி விட்டதற்கு இந்தியச் சமூகம் ஒரு காரணமாக இருக்க வேண்டும். என்ன சமாதானங்கள் கூறினாலும், அவள் ஓர் அயலானை இழுத்துக் கொண்டு ஓடியவள்.

இக்கட்டுரையைப் படிக்கும் பெரும்பாலானோருக்கு 1937 தொடங்கி 1980 வரை பெர்க்மனின் செல்வாக்கின் தரத்தையும் அளவையும் புரிந்து கொள்வது கடினம். அநேகமாக அனைத்து அமெரிக்கர்களாலும் ஐரோப்பியர்களாலும் உண்மையிலேயே ஓர் லட்சியப் பெண்ணாக நினைக்கப்பட்டவள் பெர்க்மன். அவளுடைய முதல் கணவர் டாக்டர் லிண்ட்ஸ்டார்ம் மிகவும் மதிக்கப்பட்டவராக இருந்தார். ஒரு குழந்தை.

 நாஜிகள் பெர்க்மனை எப்படியாவது ஜெர்மனியிலேயே வசிக்க வைத்துப் பிரசாரத்துக்குப் பயன்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்படிப்பட்ட தேவ கன்னிகை, மனித மதிப்பீடுகளில் குறை காணப்படும் ஓர் இத்தாலியனோடு எப்படி ‘ஓடி’ப் போக முடியும்? 

யார் மன்னித்தாலும் அமெரிக்கா மன்னிக்கத் தயாராக இல்லை. ரோசிலினியுடன் போனவுடன் பெர்க்மனுடைய இரு முக்கிய படங்கள் வெளியாகின. ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் எடுத்த ‘அண்டர் காப்ரிகார்ன்’. பெர்க்மனே பொருளாதார அக்கறை கொண்டு எடுத்த ‘ஜோன் ஆஃப் ஆர்க்’ இரண்டும் படு தோல்வி அடைந்தன. பெர்க்மன் திரையில் தோன்றும்போது பார்வையாளர்கள் ஏளனமாகக் கூச்சலிட்டார்கள். ‘ஜோன் ஆஃப் ஆர்க்’, பெருமதிப்பு வாய்ந்த நாடகாசிரியர் மாக்ஸ்வெல் ஆண்டர்ஸன் எழுதியது. அதில் வந்த காட்சிகள் பல இந்தியப் படங்களில் பிரதியெடுக்கப்பட்டன. (இதில் ‘மொகல் ஏ அஜ’மும் அடங்கும்.)

இலக்கியம், திரைப்படம் ஆகிய சாதனங்களில் நிரந்தரமாக உள்ளவை அடிப்படை மனித காருண்யம், தியாகம், வீரம் ஆகிய மிகச் சிலவே. வடிவம் மாற்றங்களுக்கு உட்பட்டது. ரோசிலியின் எல்லாப் படங்களையும் பார்த்த நிபுணர்கள் ஒருமித்த கருத்து கூறுவதில்லை. இது ‘சைக்கிள் திருடர்கள்’ எடுத்த விட்டொரியா டிசிகாவுக்கும் பொருந்தும். திரும்பத் திரும்ப அவர்களுடைய பழைய படங்களில் ஒன்றிரண்டைத்தான் விவாதிப்பார்கள்.

ஹாலிவுட் படங்களை ‘தொழிற்சாலை’ படங்கள் என்று ஏளனமாகக் கூறுவார்கள். ஆனால் ஒரு ஹாலிவுட் திரைப்பட டைரக்டருக்கு பத்து படங்கள் இருபது வருட இடைவெளியில் வருவது பெரிய விஷயம். ஹிட்ச்காக் எடுத்த ‘அண்டர் காப்ரிகார்ன்’ படத்தை அவருடைய மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகக் கூறுகிறார்கள். நான் அப்படத்தைப் பார்த்திருக்கிறேன். அதில் பெர்க்மன் நடிப்பு மிகவும் உருக்கமானதாக இருக்கும்.

பெர்க்மன் போன்ற அகில உலக நட்சத்திரங்கள் புனர்ஜென்மம் எடுக்க முடியும். ரோசிலினி விபத்துக்குப் பிறகு அவர் இருமுறை ஆஸ்கர் பரிசு பெற்றார். அவளுடைய ஒரு லட்சியம், இங்மார்  பெர்மனின் படம் ஒன்றில் நடிப்பது. அதுவும் அவர் இறப்பதற்கு முன்பு நிறைவேறியது. ‘ஆடம் சொனாட்டா’. ஆனால், சோனாலி தாஸ்குப்தா? இந்த யதார்த்தத்தை எதனுடன் சேர்ப்பது?

இப்படிப்பட்ட தேவ கன்னிகை, மனித மதிப்பீடுகளில் குறை காணப்படும் ஓர் இத்தாலியனோடு எப்படி ‘ஓடி’ப் போக முடியும்? யார் மன்னித்தாலும் அமெரிக்கா மன்னிக்கத் தயாராக இல்லை.

படிக்க...

கிடைக்காத புத்தகத்தை சிபாரிசு செய்து என்ன பயன்? இங்க்ரிட் பெர்க்மன் ஒரு நல்ல எழுத்தாளருடன் இணைந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சுயசரிதை எழுதியிருக்கிறார். அது இன்று கிடைக்க வழியில்லை. அதன் (விரிவான) சுருக்கம் நான் எழுதிய ‘இருட்டிலிருந்து வெளிச்சம்’, நூலில் உள்ளது. (பக்.320; ரூ.240; நற்றிணை பதிப்பகம், சென்னை-5. தொ.பேசி: 044-43587070.)

என் நண்பர் மு.ஸ்ரீனிவாசன் ‘தமிழகத்திற்கு வெளியே உள்ள திருத்தலங்கள்’ என்றொரு நூல் எழுதியிருக்கிறார். பழங்காலத்தில் மார்க்கோ போலோ, ஃபாஹியான் என்ற பயணிகளைப் பற்றிக் கூறுவார்கள். ஸ்ரீனிவாஸன் இருமுறை கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் கோயிலைப் பார்த்திருக்கிறார்.

அலெக்ஸாண்டர் டூமாவின் ‘கவுண்ட் ஆஃப் மாண்டி கிரிஸ்டோ’ நாவலில் வரும் தீவுக் கோட்டையைப் பார்க்க பிரான்ஸ் சென்றிருக்கிறார். இந்த நூல் அவருடைய இதர நூல்களைப் போலவே பல வியக்கத்தக்க அதிசயங்கள் கொண்டது. (தமிழகத்திற்கு வெளியே உள்ள திருத்தலங்கள், அருள் பதிப்பகம், பெரியார் தெரு, சென்னை -600078; தொ.பேசிகள்: 9789072478; 044-65383000)


(பாதை நீளும்...)

அசோகமித்திரன்