47 ரூபாய் செலவழித்தால் நீங்கள் ஏழை இல்லை!



இந்தியாவில் இதுவரை நடக்காத சாதனை நிகழ்ந்திருக்கிறது. ஓவர் நைட்டில் நம் நாட்டின் கோடிக்கணக்கான ஏழைகள் பணக்காரர்களாக ப்ரமோஷன் வாங்கியிருக்கிறார்கள். யெஸ்... இந்தியாவின் வறுமைக் கோடு எது எனத் தீர்மானிக்கக் கிளம்பிய சி.ரங்கராஜன் கமிட்டி, ‘‘நகரத்தில் 47 ரூபாய்க்கு மேல் செலவழித்தால் அவர்கள் ஏழை அல்ல!’’ என்று அடித்துச் சொல்லியிருக்கிறது. இதுவே கிராமம் என்றால் 32 ரூபாய்.

இதன் அடிப்படையில் இந்திய ஏழைகளின் எண்ணிக்கை, ஒரே ஆண்டில் ஒன்பது கோடி குறைந்துவிட்டதாம். ‘‘எதுக்கு இந்த கஷ்டமான கணக்கெல்லாம்? பேசாம இந்தியாவில் ஏழையே இல்லைனு அறிவிச்சிட வேண்டியதுதானே’’ என விரக்தியில் இருக்கிறார்கள் அடித்தட்டு மக்கள்.

லாரன்ஸ் குடும்பத்தினர்


வசிப்பது: சென்னை, பட்டினப்பாக்கத்தில் ஒரு ஆஸ்பஸ்டாஸ் குடிசை வீடு
பிள்ளைகள்: 2
தொழில்: காய்கறிக் கடையில் லோடுமேன் (மனைவி இல்லத்தரசி)
மாத வருமானமும் செலவழிப்பதும்: ரூ. 10,000/- (நான்கு பேர் கொண்ட நகர்ப்புற குடும்பத்தில் வறுமைக்கோட்டின்படி, மாதம் ரூ. 5640/- செலவழித்தால்தான் ஏழைகள்)
கூடுதலாக செலவழிப்பது: ரூ. 4,360/-
‘‘ஒரு லிட்டர் பாலே 42 ரூபாய் விக்குது. மேற்கொண்டு 5 ரூபா செலவு பண்ணா, நாங்க பணக்காரங்களா? பொண்ணு அஞ்சாவது படிக்கிறா... பையன் ஒண்ணாவது படிக்கிறான். இந்த வருஷம் ஸ்கூல் ஃபீஸே 20 ஆயிரம் ஆச்சு. வீடு கட்டி வாழணும்னெல்லாம் எங்களுக்கு ஆசை இல்ல. இந்த குடிசை வீட்டுல இருந்து ஒரு வாடகை வீட்டுக்குப் போகணும். இந்தச் சின்ன ஆசையே நிறைவேறின பாடில்ல... நாங்க பணக்காரங்களாம். சும்மா வெறுப்பேத்தாதீங்க சார்.’’

அண்ணாமலை குடும்பத்தினர்

வசிப்பது: சென்னை, மயிலாப்பூரில் ஓர் ஒண்டுக்குடித்தனம்
பிள்ளைகள்: 2
தொழில்: தண்ணீர் கேன் சப்ளை (மனைவிக்கு ஹார்டுவேர் கடையில் வேலை)
மாத வருமானமும் செலவழிப்பதும்: ரூ. 20,000/- (நான்கு பேர் கொண்ட நகர்ப்புற குடும்பத்தில் வறுமைக்கோட்டின்படி, மாதம் ரூ. 5640/- செலவழித்தால்தான் ஏழைகள்)
கூடுதலாக செலவழிப்பது: ரூ. 14,360/-
‘‘வீட்டு வாடகையே 7000 ரூபாய் வந்துடும் சார். நம்ம பொழப்பு ராயப்பேட்டை, மயிலாப்பூர்லதான். இதை விட்டு எங்கேயும் போக முடியாது. பொண்ணு காலேஜ் படிக்கிறா. பையன் ஒம்பதாவது. ஒவ்வொரு வருஷமும் பழைய கடனை அடைக்காமலேயே புதுக் கடன் வாங்கித்தான் ஃபீஸ் கட்டுறோம். தண்ணி வண்டியக் கூட கஷ்டப்பட்டு இழுத்துடலாம்... இந்த குடும்ப வண்டியத்தான் இழுக்க முடியல. ஏழ்மையை ஒழிக்கச் சொன்னா, ஏழைகளை ஒழிக்கிற பழக்கம் நம்ம அரசாங்கத்துகிட்ட இருந்து எப்போ போகுமோ!’’

ஜீவா குடும்பத்தினர்

வசிப்பது: சேலம் மாவட்டம் பனைமரத்துப்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த காட்டூர் பகுதியில் வாடகை வீடு
பிள்ளைகள்: 2 (ஜீவாவின் தாயார் குப்பம்மாளும் இவர்களோடு வசிக்கிறார்)
தொழில்: டிராக்டர் ஓட்டுனர் (மனைவி இல்லத்தரசி)
மாத வருமானமும் செலவழிப்பதும்: சுமாராக ரூ. 5,500/- (ஐந்து பேர் கொண்ட கிராமப்புற குடும்பத்தில் வறுமைக்கோட்டின்படி, மாதம் ரூ. 4800/- செலவழித்தால்தான் ஏழைகள்)
கூடுதலாக செலவழிப்பது: ரூ. 700/-
‘‘வீட்டு வாடகையே 1000 ரூபாய் ஆகிடுது. முதல் பையன் ஒண்ணாங்
கிளாஸ் படிக்கிறான். ரெண்டாவது பையனுக்கு 2 வயசாகுது. எனக்கு ஒரு நாளைக்கு 350 ரூபா கூலி. ஆனா, வேலை தினமும் இருக்காது. கைக்குழந்தை வச்சிருந்தா பாலுக்கும் ‘கால்பாலு’க்குமே வருமானம் பத்த மாட்டேங்குது. ஆனா, ஒண்ணு சார். அடுத்த வருஷமே நாங்க ஏழையாகிடுவோம். ஏன்னா, வீட்ல இப்ப மாசமா இருக்காங்க. குடும்பத்துல இன்னொரு ஆள் வந்தா இன்னொரு 960 ரூபா வறுமைக்கோட்டுல ஏறிடும்ல! 32 ரூபா செலவழிச்சு வாழலாம்னு சொல்றவங்களைக் கூட்டி வந்து எங்க வாழ்க்கையை வாழ வைக்கணும். அப்ப தெரியும் கூத்து!’’

பண்டாரம் குடும்பத்தினர்

வசிப்பது: நெல்லை அருகே ராமையன்பட்டி கிராமத்தில் ஒரு கூரை வீடு
பிள்ளைகள்: 5
தொழில்: இட்லி கடை
மாத வருமானமும் செலவழிப்பதும்: சுமாராக ரூ.7000/- (ஏழு பேர் கொண்ட கிராமப்புற குடும்பத்தில் வறுமைக்கோட்டின்படி, மாதம் ரூ. 6720/- செலவழித்தால்தான் ஏழைகள்)
கூடுதலாக செலவழிப்பது: ரூ.280/-
‘‘1952ம் வருஷத்துல தமிழ்நாட்டுல ஒரு ரூபாய்க்கு 64 இட்லி கிடைக்கும். இப்போ, ஒரு இட்லி 5 ரூபா. அவ்வளவு விலைவாசி ஏறியிருக்கு. இந்த கிராமத்துல நாங்க இட்லியை ரெண்டு ரூபா அம்பது காசுக்குத்தான் விக்க முடியும். அதுக்கு ஏத்த மாதிரிதான் லாபம். இன்னிக்கு எந்த குக்கிராமத்துலயும் 5000 ரூபாய்க்குக் குறைஞ்சு வருமானம் இருந்தால் குடும்பம் நடத்த முடியாது. ஒரு கிலோ அரிசியே குறைஞ்சது 30 ரூபா. அதைக் கூட ரேஷன்ல வாங்கிக்கலாம். காய்கறி, பருப்பு, எண்ணெய், விறகு, கடுகு முதற்கொண்டு எல்லாத்தையும் 32 ரூபாய்க்குள்ள வாங்கிக் காட்டுங்க பார்க்கலாம்!’’

-டி.ரஞ்சித், ஸ்ரீதேவி, எஸ்.மாசானமுத்து
படங்கள்: புதூர் சரவணன், பரமகுமார், அந்தோணி