தனுஷ் பேட்டிவெளியாகும் படங்களுக்கிடையே இடைவேளை இருக்கிறதே தவிர, இடைவேளை இன்றி சினிமா ஆடுகளத்தில் தடதடத்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். சொந்தப் படமான ‘வேலையில்லா பட்டதாரி’ ரிலீஸ் டென்ஷன் ஒரு பக்கம் இருந்தாலும், அடுத்தடுத்த படங்களின் ஷூட்டிங்கில் செம பிஸி.
தனுஷ் பேட்டி கொடுப்பதே குதிரைக் கொம்பாகிவிட்ட நிலையில் நாம் பிடித்தோம். ‘‘பேசுறத்துக்கு நேரமே இல்லை பாஸ்... ஓடிக்கிட்டே இருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துடுங்களேன். பேசலாம்’’ என அழைக்கிறார். திருக்கழுக்குன்றம் மாட்டுச் சந்தையில் ‘அனேகன்’ படப்பிடிப்பில் டிஷ்யூம் போட்டுக் கொண்டிருந்தவரை லஞ்ச் பிரேக்கில் சந்தித்தோம்...
‘வேலையில்லா பட்டதாரி’ உங்க 25வது படம்... எப்படி வந்திருக்கு?‘‘இரண்டு நாள் சும்மா இருந்தாலே எனக்கு போரடிச்சிடும். பல கமிட்மென்ட்களுக்கு கால்ஷீட் கொடுத்தது போக, பத்து நாள் பத்து நாள் என்று இடையில் எனக்குக் கொஞ்சம் தேதிகள் இருந்த சூழ்நிலை. இந்த டைமில் ஒரு படம் பண்ணலாமேன்னு நினைத்து வேல்ராஜிடம் கேட்ட கதைதான் இது. பக்கத்து வீட்டுப் பையன் மாதிரியான இமேஜ் எனக்கு இருக்கு.
அதனால குழந்தைகள், ஃபேமிலி ஆடியன்ஸ், ரசிகர்கள் எல்லோருக்கும் பிடித்த படமா இருக்கணும்னு யோசிச்சு எதார்த்தமான கேரக்டரில் நடிச்சிருக்கேன். மற்றபடி டைட்டிலே என்னோட கேரக்டரைச் சொல்லிடும். படத்தில் என் கேரக்டர் பெயர் ரகுவரன். கிரேட் ஆர்ட்டிஸ்ட், நல்ல மனிதர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்ப தால் அவரது பெயரில் நடிக்கிறேன். என்னோட 25வது படத்தில் அது அமைந்ததில் இன்னும் சந்தோஷம்.’’
படத்தில் வேறென்ன ஸ்பெஷல்?‘‘25வது படம் என்பதே ஸ்பெஷல்தான். முன்பெல்லாம் சினிமாவுக்குள்ள வருவதே பெரிய கஷ்டம்; வந்துட்டா இங்கேயே நிம்மதியா இருக்கலாம். இப்போ நிலைமையே வேற... உள்ள வர்றது ரொம்ப சுலபம். ஆனா நிலைக்கிறது ரொம்ப கஷ்டம். வருஷத்துக்கு புதுசா இரண்டு ஸ்டார்கள் சாதாரணமா உருவாகுறாங்க. இப்படிப்பட்ட களத்தில், 14 வருஷமா சினிமாவில் டிராவல் பண்ணி 25வது படத்தைக் கடந்திருப்பதையே ஸ்பெஷலா நினைக்கிறேன்.
படத்தில் அமலாபால், சுரபின்னு இரண்டு ஹீரோயின்கள். என்னோட அப்பாவாக சமுத்திரகனியும், அம்மாவாக சரண்யா மேடமும் நடிச்சிருக்காங்க. ஸ்பாட்டில் சமுத்திரகனி வந்து நின்னார்னா எனக்கு அண்ணன் மாதிரிதான் இருப்பார். அவரை அப்பாவாகக் காட்டுவதற்குள் போதும் போதும்னு ஆயிடுச்சு. ஹீரோ, ஹீரோயினுக்குள் கெமிஸ்ட்ரி என்ற வார்த்தையே இப்போ காமெடி ஆகிடுச்சு. எனக்கும் தம்பி கேரக்டருக்கும் இடையிலும், எனக்கும் அம்மா கேரக்டருக்கு இடையிலும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தால்தான் படத்தில் ஒரு ஃபீல் கிடைக்கும். ‘வேலையில்லா பட்டதாரி’யில் அந்த ஃபீலை உணர முடியும்!’’
பாலிவுட் பயணம் எப்படி இருக்கு?‘‘தமிழ்ப் படம், இந்திப் படம்னு பிரிச்சுப் பார்க்க விரும்பல. நாம இருப்பது இந்தியாவில். இந்தியப் படம்தானே பண்றேன். எங்க எடுத்தாலும் சினிமாதான். எங்க நடிச்சாலும் அதே நடிப்புதான். அதே உழைப்பைத்தானே கொடுக்கணும்! ‘ராஞ்சனா’வுக்கு பிறகு ஐம்பது கதைகளாவது கேட்டிருப்பேன். நான் கேட்ட கதைகளில் முழு திருப்தி ஏற்பட்டு கமிட் ஆன படம்தான் ‘ஷமிதாப்’. இதில் அமிதாப் சாருடன் நடிப்பது பெருமைக்குரிய விஷயம். அடுத்த வருஷத்தின் முதல் பாதியில்தான் ரிலீஸ் ஆகும். ரொம்ப சிரமமான கதாபாத்திரம் அது. கண்டிப்பா நாம எல்லோரும் பெருமைப்படக்கூடிய ஒரு படைப்பா அது இருக்கும்!’’
அமிதாப் என்ன சொன்னார்?‘‘ஷாட் ரெடின்னு என்னைக் கூப்பிட்டு நான் போறதுக்கு முன்னாடியே அமிதாப் சார் ஸ்பாட்டில் நிற்பார். எந்த ஈகோவும் அவர்கிட்ட இல்லை. வெரி சிம்பிள்... ரொம்ப டிசிப்ளின்... அவர்கிட்ட நிறைய கற்றுக்கொண்டேன். ரஜினி சாரோட நண்பர் அவர். நண்பரோட மருமகனாச்சே என்று ஒரு நிமிஷம்கூட எங்கிட்ட பேசினதில்லை. என்னை சக நடிகனாகத்தான் பார்க்கிறார். கூட நடிக்கிற எல்லாரையும் அவருக்குச் சமமாகவே நினைக்கிறார். இந்த குணம்தான் அவரை இந்த உயரத்தில் வச்சிருக்கு.’’
ரஜினி சார் உங்க பயணத்தை ஈஸி ஆக்கிடறாரோ?‘‘சூப்பர் ஸ்டார், லெஜண்ட்... எல்லாத்தையும் தாண்டிய உயரத்தில் ஒரு இடம் இருந்தால், அது அவருக்குப் பொருந்தும். அவருடைய பெயரிலோ உதவியிலோ நான் வளர்ந்தால், அது அவருக்கும் பெருமை இல்லை; எனக்கும் பெருமை இல்லை. என்னை ஆடுகளத்தில் ஆட விட்டு ரசிக்கத்தான் அவர் விரும்புகிறார்.’’
ஜூனியர் தனுஷ்கள் என்ன பண்றாங்க?‘‘ம்... ஸ்கூலுக்கு போறாங்க; படிக்கிறாங்க. எப்போதாவது அவங்களை ஸ்கூலுக்கு அழைத்துப் போவதுண்டு. ஆனால் பிள்ளைகளுடன் நிறைய நேரம் செலவு செய்ய முடியாமல் சுற்றிக்கொண்டே இருக்கேன். மாசத்தில் இரண்டு, மூன்று நாட்கள்தான் அவர்களுடன் இருக்க முடியுது. அவர்களின் உலகத்தில் என்னையும் ஒரு உறுப்பினராக்கி விளையாடி மகிழவேண்டும் என்ற ஆவல் வர வர பேராசையாகி வருகிறது. இனி படங்களைக் குறைத்துக்கொண்டு அவர்களுக்கான நேரத்தை ஒதுக்குவேன். வருஷத்துக்கு ஒரு படத்தில் ரசித்து ரசித்து நடித்தால் போதும் என்று நினைக்கிறேன்.’’
தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்துக்கான போட்டி கடுமையாகிட்டு இருக்கே?‘‘நடிப்பது, மக்கள் விரும்பும் படங்களைக் கொடுப்பதுடன் எங்கள் வேலை முடிந்தது. இதில் நம்பர் 1, நம்பர் 2 என லிஸ்ட் போடுவது நடிகர்களின் வேலை இல்லை. இந்த விளையாட்டு ஏன் உருவாகுது என்றே தெரியல. அதுவே ஒரு பொழுதுபோக்கு என்பது மாதிரி ஆகிவிட்டது. அது தேவையில்லாத விஷயம்.
ஒரு நடிகருக்கு இரண்டு படங்கள் ஓடினால் மார்க்கெட் ஏறும். இரண்டு படங்கள் சரியா போகலைன்னா மதிப்பு சரியும். இந்த 14 வருஷத்தில் நிறைய வெற்றி, தோல்விகளை சந்திச்சிட்டேன். எதையும் தலையில் ஏத்திக்கிட்டது இல்லை. மக்களுக்குப் பிடிக்கிற மாதிரி நல்ல சினிமா கொடுத்தோமா... அவங்களுக்குப் பிடிக்கலைன்னா அதில் செய்த தவறுகளை சரிசெய்து கொண்டு நடிச்சோமா என்பதோட நிறுத்திக்கொண்டால் நல்லதுன்னு நினைக்கிறேன். இதுல கிடைக்கற நிம்மதி தனி!’’
அமலன்