அரிமா நம்பி



வெறுங்கையோடு காதலர்கள் ஒரு பக்கம். ஒட்டுமொத்த காவல்துறையும் அதிகார பலமும் இன்னொரு பக்கம். இருவரையும் மோதிப் பார்க்க விட்டிருக்கும் துணிச்சலான ஆக்ஷன் த்ரில்லர்தான் ‘அரிமா நம்பி.’சேனல் 24 டி.வியின் முதலாளி மகள் ப்ரியா ஆனந்த். அந்த சேனல் வைத்திருந்த ரகசிய கேமரா ஒன்றில், மத்திய அமைச்சரான ஜெ.டி.சக்ரவர்த்தி செய்த கொலை பதிவாகி விடுகிறது.

அந்த வீடியோ - மெமரி கார்டைக் கேட்டு பிளாக் மெயில் செய்ய ப்ரியா ஆனந்த் கடத்தப்படுகிறார். ஒரே நாள் பப் பழக்கத்தினால் இந்தச் சிக்கலில் விக்ரம் பிரபுவும் சேர்ந்துகொள்ள, தொடங்குகிறது மெமரி கார்டு கண்ணாமூச்சி. எதிர்ப்புகள் அனைத்தையும் எதிர்கொண்டு, குமரியையும் மெமரி கார்டையும் விக்ரம் பிரபு காப்பாற்றுகிறாரா என்பதே க்ளைமேக்ஸ்!

‘இதெல்லாம் சி சென்டருக்குப் புரியாது’ என ஒதுங்காமல், இத்தனை இளமையாக டெக்னாலஜி பேசும் சப்ஜெக்ட்டைத் தொட்டதற்காகவே இயக்குனர் ஆனந்த் ஷங்கருக்கு ஹேட்ஸ் ஆஃப். எடுத்ததுமே ப்ரியா ஆனந்த் விக்ரம் பிரபுவோடு நெருங்கி விடுகிறார்... இது ஏதோ வில்லங்கம் என்று பார்த்தால், நம் தலையில் தட்டி வேறு ரூட் பிடிக்கிறது திரைக்கதை.  ஹீரோவின் பர்சனல் தகவல்கள் அனைத்தையும் போலீஸ் தேடி எடுத்துப் பட்டியலிடும்போது, ‘‘அடிக்கடி போகும் வெப்சைட்ஸ், கூகுள், விக்கிபீடியா...’’ என்பதோடு ஒரு பலான சைட்டையும் சேர்த்துச் சொல்வது க்ளாப்ஸ்!

விக்ரம் பிரபு செம மேன்லி. ப்ரியா ஆனந்துக்கு ஆறுதல் சொல்ல கரம் பிடிக்கும்போதும் நரம்பு தெறிக்கிறது மனிதருக்கு. போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கேள்விக்கு வாய் பதில் சொன்னாலும், ‘பிரச்னையை விட்டுட்டு என்னைப் பத்தி ஏண்டா விசாரிக்கிறீங்க?’ என முகம் பேசுவது, பாட்டன் சொத்து!

மத்திய அமைச்சராக ஜெ.டி.சக்ரவர்த்தி கன்னிங் + கணினி வில்லனாக கலக்குகிறார். கொஞ்ச நேரமே வந்து ‘மறைந்தாலும்’, எம்.எஸ்.பாஸ்கர் மனதில் நிற்கிறார். ஹை கிளாஸ் பெண் என்பது ப்ரியா ஆனந்துக்கு அளவெடுத்துத் தைத்த மாதிரிப் பொருந்துகிறது. புல்லட் வேக ஆங்கிலம், அவர் உதட்டில் பிறக்கும்போது அத்தனை இயல்பு. கொலை நடந்திருக்கும் டி.வி அலுவலகத்துக்குள் விக்ரம் பிரபு கேஷுவலாக நுழைந்து பாஸ்வேர்டு டைரியை எடுத்துத் திரும்புவதெல்லாம் காதில் மாட்டிய வாழைப்பூ!

மற்றதெல்லாம் கூட ஓகே... ஆனால், ஒரு மெமரி கார்டைத் தேடி இவ்வளவு துரத்தல் நடக்குமா? அதைத்தான் சுலபமாக காப்பி எடுத்து வைத்துக்கொண்டு கொடுத்துவிடலாமே என்ற கேள்வி, மெல்லிய இழையாக மனம் முழுக்கப் பரவுவதைத் தவிர்க்க முடியவில்லை. விக்ரம் பிரபு ஒரு முறை போனிலும் இன்னொரு முறை லேப்டாப்பிலும் அதை இணைக்கிறார். ஆனாலும் ஒரு பிரதி எடுத்து வைக்காமல், நேரடியாக ‘யூ டியூபில் ஏற்றுகிறேன்... மீடியாவிடம் கொடுக்கிறேன்...’ என்று பறப்பானேன்? கடைசியில் மெமரி கார்டு உடைந்து பரிதவிப்பானேன்?

இது ஆர்.டி.ராஜசேகர் செய்த ஒளிப்பதிவு என்பது ஃப்ரேமுக்கு ஃப்ரேம் பளிச்சிடுகிறது. குறிப்பாக, ‘இதயம் என் இதயம்’ பாடலில் நீச்சல் குளம் போல அந்த அருவி, அடடா! இசை ‘டிரம்ஸ்’ சிவமணி... பின்னணியில் மனிதர் பின்னியிருக்கிறார். ஆனால், பாடல்கள் வெறும் பாஸ் மார்க்தான். இளமையையும் புதுமையையும் நம்பி ‘அரிமா நம்பி!’

 குங்குமம் விமர்சனக் குழு