அணைகளை அபகரிக்க முயற்சிக்கும் கேரளா!



இன்னொரு வஞ்சனை

பல நிபுணர் குழுக்கள் ஆராய்ந்து அறிக்கை அளித்து விட்டன. உச்ச நீதிமன்றம் தெள்ளத் தெளிவாக தீர்ப்பு எழுதிவிட்டது. ஆனாலும் கேரளா அடங்கவில்லை. அடுத்தடுத்து ஏதாவது ஒரு விவகாரத்தைக் கிளப்பி தமிழகத்தை வஞ்சிக்கவே முன்நிற்கிறது. ஏகப்பட்ட தப்பாட்டங்களை ஆடி குட்டுப்பட்டு நிற்கிற கேரளா லேட்டஸ்டாக தொடங்கியிருப்பது ‘உரிமைப் போர்’. தமிழகத்துக்குச் சொந்தமான, தமிழகத்தின் நிர்வாகத்தில் உள்ள முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைக்கட்டுகள் கேரளாவுக்கே சொந்தமாம். இதை சட்டசபையிலேயே அறிவித்து மகிழ்ந்திருக்கிறார் கேரள முதல்வர் உம்மன்சாண்டி.

2012க்கு முன்பு வரை தேசிய அணைகள் பதிவேட்டில் மேற்கண்ட 4 அணைகளும் தமிழகத்துக்கே சொந்தம் என்று இருந்ததாகவும், தங்கள் கோரிக்கையை ஏற்று கேரளாவுக்கே சொந்தம் என்று மாற்றப்பட்டதாகவும் சொல்லியிருக்கிறார் உம்மன் சாண்டி. உண்மையில் இந்த அணைகள் யாருக்கு சொந்தம்?

ஒப்பந்தங்கள் என்ன சொல்கின்றன? மேற்கண்ட அணைகளில் பணியாற்றி அனுபவம் உள்ளவரும், தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான அ.வீரப்பன், ‘‘1886ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தொடங்கி சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரை எல்லாவற்றிலும் இந்த அணைகள் தமிழகத்துக்குத்தான் சொந்தம் என்று அழுத்தமாக நிலை நாட்டப்பட்டுள்ளது’’ என்று ஆதாரங்களை அள்ளிக் கொட்டுகிறார்.

‘‘1886ல் பிரிட்டிஷ் அரசுக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையில் முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அதில் 8591 ஏக்கர் நிலம் 999 வருடங்களுக்கு தமிழகத்தின் சொத்தாக மாற்றப்படுவதாக தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நிலத்தை குத்தகைக்கு விடுவது வேறு.

 உரிமையை மாற்றுவது வேறு. குத்தகைக்கு விடும்போது   Leased out அல்லது On Lease என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஒப்பந்தத்தில் Demised   என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் Transfer of property. ஒப்பந்தத்தில் 32 இடங்களில் இந்த வார்த்தை உள்ளது.

1956ல் சமஸ்தானங்கள் கலைக்கப்பட்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மிக முக்கியமான முடிவொன்று எடுக்கப்பட்டது. அதாவது, சமஸ்தானங்களோடு போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தும் நடைமுறையில் இருக்கும். முக்கியமாக, நதிநீர் ஒப்பந்தங்கள்! 1886 ஒப்பந்தத்தின் அடிப்படையில் கேரளாவும், தமிழகமும் 1970ல் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டன.

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும், அணையில் கேரளா மீன் பிடிக்கவும் அந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது. மேலும், அணைக்காக தமிழக அரசு வழங்கும் குத்தகைத் தொகை ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இன்றுவரை இந்த குத்தகைத் தொகை வழங்கப்படுகிறது.

பிரிட்டிஷ் அரசும், திருவிதாங்கூர் சமஸ்தானமும் 1886ல் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் செல்லாது என்று கூறுகிற கேரளா, பிறகெப்படி அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1970ல் புதிய ஒப்பந்தத்தை செய்து கொண்டது? 27.2.2006 அன்று வழங்கிய தீர்ப்பிலும், 7.5.2014ல் வழங்கிய தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் ‘1886 ஒப்பந்தமும், 1970 ஒப்பந்தமும் முழுமையாக செல்லுபடியாகும்; அணைக்கட்டின் உரிமை தமிழகத்துக்கே உரியது’ என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது. பல ஆண்டுகள் நடப்பில் உள்ள ஒரு ஒப்பந்தத்தை நிராகரித்து விட்டு நேற்று உருவாக்கப்பட்ட ஒரு பதிவேட்டில் உரிமை நிலைநாட்டப்பட்டதாக கேரளா சொல்வது வேடிக்கை.

வேணாட்டு மன்னர்களின் தலைநகராக இருந்த பத்மநாபபுரம், மொழிவாரிப் பிரிவினை வந்தபோது தமிழகத்துக்குள் வந்துவிட்டது. அப்போது கேரளா, ‘பத்மநாபபுரம் அரண்மனையின் உரிமையை எங்களுக்குத் தரவேண்டும்’ என்று கேட்டது. தமிழகம் அதை ஏற்றுக்கொண்டது. இன்றுவரை அந்த அரண்மனையை நிர்வகிப்பது, காவல் காப்பது, பராமரிப்பது கேரளாதான். உம்மன் சாண்டியின் வாதப்படி முல்லைப் பெரியாறுக்கு பொருந்தாத ஒப்பந்தம் பத்மநாபபுரத்துக்கு மட்டும் எப்படிப் பொருந்தும்?’’ - அழுத்தமான கேள்வியை முன்வைக்கிறார் வீரப்பன்.

தமிழகத்தின் டாப்சிலிப் பகுதிக்கு மேலே கேரள எல்லையில் இருக்கிறது பரம்பிக்குளம் அணை. பரம்பிக்குளத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் தூணக்கடவு அணை உள்ளது. அங்கிருந்து 8 கி.மீ தொலைவில் பெருவாரிப்பள்ளம் அணை இருக்கிறது. இந்த அணைகளும் தமிழகத்துக்கே உரியவை என்பதற்கும் ஆதாரம் கொடுக்கிறார் வீரப்பன். ‘‘29.5.1970ல் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையில் பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை ‘பி.ஏ.பி. அக்ரிமென்ட்’ என்பார்கள்.

பாரதப்புழா, சாலக்குடி, பெரியாறு ஆகிய கேரள நதிகளின் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருக்கும் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய அணைக்கட்டுகள் தமிழகத்துக்கே உரிமையானவை என்று தெளிவாகச் சொல்கிறது அந்த ஒப்பந்தம். இங்கும்   Demised என்ற வார்த்தையே போடப்பட்டுள்ளது.

மேலும், ‘பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைக்கட்டுகளின் பராமரிப்பு மற்றும் உரிமை தமிழகத்துக்கு உரியவை என்றும், நீர்ப்பங்கீட்டை தமிழகமும், கேரளாவும் இணைந்து மேற்கொள்வது’ என்றும் அதில் இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுவரை அதற்கான குத்தகைப் பணம் கேரளாவுக்கு வழங்கப்படுகிறது.

கேரளாவுக்கு ஆண்டுக்கு 2500 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கிறது. அதில் அவர்கள் பயன்படுத்துவது வெறும் 350 டி.எம்.சி மட்டுமே. 2020ல் அவர்களின் தண்ணீர் தேவை 500 டி.எம்.சியாக அதிகரிக்கலாம். மீதி தண்ணீர் முழுவதும் கடலுக்குத்தான் போகிறது. இந்த நான்கு அணைகளின் மூலம் தமிழகத்துக்கு 15 டி.எம்.சி தண்ணீர்தான் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கான டிஎம்சியை கடலில் விடுகிற கேரளா, தமிழகத்துக்குக் கிடைக்கும் வெறும் 15 டி.எம்.சி தண்ணீரை தடுக்க கங்கணம் கட்டி செயல்படுகிறது.

இதற்குப் பின்னால் கேரள அரசியல்வாதிகள், பணமுதலைகளை உள்ளடக்கிய ஒரு பின்னணி இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணைக்காக தமிழகத்துக்கு உரிமை மாற்றப்பட்ட நிலம் 8591 ஏக்கர். அணையில் 136 அடி தண்ணீர் இருந்தால் சுமார் 4477 ஏக்கர் நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கியிருக்கும். மீதமுள்ள 4114 ஏக்கர் நிலம் காலியாக கிடக்கும். 1979 முதல் 136 அடி தண்ணீர்தான் அணையில் தேக்கப்படுகிறது.

இந்த 35 ஆண்டுகளில் கேரளாவின் முன்னணி அரசியல்வாதிகளும், பிரபல தொழிலதிபர்களும் காலி இடங்களில் எல்லாம் ரிசார்ட்கள், லாட்ஜ்கள், ஹோட்டல்கள், கமர்ஷியல் கட்டிடங்களை கட்டிக் குவித்து விட்டார்கள். 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தினால் அவர்கள் தொழிலுக்கு இடி விழும். தங்கள் தொழிலையும் செல்வத்தையும் பாதுகாக்கவே கேரள அரசியல்வாதிகள் ‘அணை உறுதியாக இல்லை’ என்று ஒரு சேரக் குரல் கொடுக்கிறார்கள்.

 ‘அணை உடைந்தால் 35 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்று தூண்டி விடுகிறார்கள். தமிழகம் ஓரணியில் திரண்டால்தான் நம் உரிமையைத் தக்க வைக்க முடியும். பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முடியும்’’ என்கிறார் வீரப்பன். உம்மன் சாண்டியின் வாதப்படி அணைகளுக்குப் பொருந்தாத ஒப்பந்தம் பத்மநாபபுரம் அரண்மனைக்கு மட்டும் எப்படிப் பொருந்தும்?

- வெ.நீலகண்டன்