கடைசி பக்கம்



தினமும் இரவு வீட்டுக்குக் கிளம்புவதற்கு முன்பாக தன் மனைவிக்கு போன் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார் அந்த டாக்டர். அன்றும் வழக்கம் போல போன் செய்தார். நீண்ட நேரம் மணியடித்தது; மனைவி எடுக்கவில்லை.

 ரீடயல் செய்தார். பலனில்லை. வீட்டில் வயதான மனைவியைத் தவிர யாருமில்லை; பாத்ரூம் போயிருப்பார் என நினைத்து சில நிமிடங்கள் கழித்து ரீடயல் செய்தார். அப்போதும் பதில் இல்லை. லேசாக கவலை எட்டிப் பார்த்தது. எப்போதும் இப்படி ஆனதில்லை. அவசரமாக கிளினிக்கை பூட்டிக் கொண்டு கிளம்பினார். காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பாக தனது செல்போனிலிருந்து ஒருமுறை முயற்சித்தார். முதல் ரிங்கிலேயே போனை எடுத்து, ‘‘கிளம்பிட்டீங்களா?’’ என்றார் மனைவி.

‘‘ஏற்கனவே போன் செய்தேனே... ஏன் எடுக்கலை?’’‘‘இங்க ரிங் சவுண்ட் கேக்கலையே!’’ என்றார் மனைவி. கிளினிக் லேண்ட்லைனில் ஏதோ ராங் நம்பரை அழைத்தது அவருக்குப் புரிந்தது. மறுநாள் காலை கிளினிக்கை திறந்ததுமே ஒரு போன். ‘‘நேற்று இரவு நான்கைந்து முறை போன் செய்திருந்தீர்கள். காலர் ஐ.டி.யில் நம்பர் பார்த்தேன்’’ என்றது ஒரு ஆண் குரல்.
டாக்டர் நடந்ததைச் சொல்லி, ‘‘என்னை மன்னிச்சிடுங்க’’ என்றார்.

அந்த முனையில் இருந்தவர் அழ ஆரம்பித்தார். ‘‘என்னாச்சு?’’ என்றார் டாக்டர் பதறி!‘‘தொழிலில் நஷ்டம்... ஊரைச் சுற்றிக் கடன்... நேற்று தற்கொலை செய்துகொள்ள இருந்தேன். ‘நான் வாழ வாய்ப்பிருந்தால் தயவுசெய்து ஒரு சிக்னல் கொடு’ என கடவுளிடம் வேண்டிவிட்டு கழுத்தில் சுருக்கை மாட்டும்போது நீங்கள் போன் செய்தீர்கள். புது நம்பர் என்பதால் எடுக்கவில்லை. மறுபடியும் முயற்சிக்கும்போது மீண்டும் போன். இப்படி ஐந்து முயற்சி களையும் கடவுளின் குரலாக இருந்து தடுத்தீர்கள். நன்றி!’’ தவறுகளுக்கு திட்டாதீர்கள். அது கடவுளின் விருப்பமாக இருக்கலாம்!

நிதர்ஸனா