Like and Share




‘கிபீ’டடா!


பேருந்தில் ஓர் அழகான இளம்பெண். அவளுக்குப் பக்கத்தில் அமர இடம் இருக்கிறது. போகலாமா வேண்டாமா என ஒவ்வொரு நாளும் பின்புறம் நின்று தயங்குகிறான் இளைஞன் ஒருவன். அவளும் ஆர்வமாய் இவனைத் திரும்பிப் பார்க்கிறாள். அதற்குள் யாராவது பெண்கள் அவளருகே இடம்பிடித்து விடுகிறார்கள். ஒருநாள், வேறொரு இளைஞன் அங்கு அமரப் போய் ஏமாந்து நகர்கிறான். அப்போதுதான் தெரிகிறது, இவனுக்காக அந்தப் பெண் தினமும் தன் பக்கத்தில் கைக்குட்டை போட்டு இடம் பிடித்து வைத்திருப்பது. ‘எதற்குமே அவகாசம் தேவைப்படும்’ என்ற வாக்கியத்தோடு முடியும் இந்த டொகோமோ விளம்பரம், நீண்ட வேலிடிட்டி ரீசார்ஜுக்கானது. இளைஞர்களின் இதயத்தை அள்ளிச் செல்கிறது!

வெல்டன்

16! உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும் ஜெர்மனியின் முன்கள வீரர் மிராஸ்லாவ் குளோஸ் அடித்த கோல்களின் எண்ணிக்கை. இந்த விஷயத்தில், ரொனால்டோ, பீலே ஆகியோரை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை படைத்துவிட்டார் இந்த மனிதர். இதுவரை ஜெர்மனி அணிக்காக 71 கோல்கள் போட்டிருக்கும் குளோஸ்க்கு இப்போது வயது 36. கடந்த 2006 உலகக் கோப்பையில் அதிக கோல்கள் போட்டதற்காக ‘கோல்டன் ஷூ’ வாங்கியவர்.

நான்கு முறை உலகக் கோப்பையில் பங்கேற்றிருக்கும் இவர், போலந்து நாட்டில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘‘மனைவி, இரண்டு குழந்தைகளுடன் ஜெர்மனியில் வசித்தாலும் வீட்டில் ‘போலிஷ்’ மொழியே பேசுவார் குளோஸ்’’ என்கிறது ஒரு ஜெர்மன் பத்திரிகை. இவரின் சாதனை உதவியோடு ஜெர்மனி அணியும் 8வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. வாவ்!

ரீடிங் டேபிள்

அரசர் ஒருவர், நான்கு அறிஞர்களை அழைத்தார்.‘‘என்னிடம் விஞ்ஞானக் கணித முறைப்படி செய்யப்பட்ட பூட்டு உள்ளது. அதை நாளை காலை உங்களில் யார் திறக்கிறாரோ அவரே முதலமைச்சர்’’ என அறிவித்தார்.நால்வரும் விஞ்ஞானச் சுவடிகளைப் புரட்டினர். ஒருவர் மட்டும் சிறிது நேரத்தில் தூங்கச் சென்றுவிட்டார். மற்றவர்கள் இரவு முழுவதும் படித்து விடை கிடைக்காமல் அரசரிடம் வந்தனர். மூவரும் பின் வாங்கியபோது, நன்றாகத் தூங்கியவர் அமைதியாக வந்து பூட்டைத் தொட்டு இழுத்துப் பார்த்தார்.

என்ன ஆச்சரியம்! பூட்டு திறந்தே இருந்தது. பிரச்னையைத் தீர்க்க வேண்டுமானால், முதலில் அதை தைரியமாக அணுக வேண்டும். அதற்கு மனம் பதற்றமின்றி சம நிலையில் இருக்க வேண்டும். நெருங்கிப் பின் ஆய்தல் வேண்டும்.
(‘சென்னை நலத் தகவல்’ இதழிலிருந்து...)

ஈவென்ட் கார்னர்

பழங்குடிகளின் வாழ்வாதாரம் பல வழிகளில் சூறையாடப்படும் காலம் இது. வனமும், மலையும், சமவெளியுமற்ற அந்தரப் பரப்பில் நின்று கொண்டிருக்கும் அம்மக்களின் பண்பாடு, கலை, கைவினை என அனைத்தும் அழிவு நோக்கி நகர்ந்து வருகிறது. இச்சூழலில், ஜூன் 25 முதல் ஜூலை 7ம் தேதி வரை சென்னை, ஆழ்வார்பேட்டை சங்கரா ஹாலில் நடந்த ‘ஒடிஸா பழங்குடி மக்களின் கைவினைப் பொருள் கண்காட்சி’ சிறந்த ஆவணப்படுத்தலாக அமைந்தது.

பழங்குடிகளின் ஓவியங்கள், ரசாயனம் தோயாத பருத்தியில் இயற்கை வர்ணம் பூசி நெசவு செய்யப்பட்ட உடைகள், மண்ணால் செய்யப்பட்ட நகைகள், சிற்பங்கள், சணல் கலைப்பொருட்கள், பைகள் எனக் குவிந்திருந்த பொருட்கள் ரசனைக்கு விருந்து. பனை ஓலைகளில் உருவாக்கப்பட்ட சுவடி ஓவியங்கள், வியப்பின் உச்சம்.

கிளிக்கானந்தா

தண்ணிதான் சார் எங்க கோல்!
சென்னை திருவான்மியூரில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் வாட்டர் டேங்க்!

‘படி’த்துறை

உளமுற்ற தீ
கலாப்ரியா
விலை: ரூ.95/-
சந்தியா பதிப்பகம், புதிய எண்: 77, 53வது தெரு, 9வது அவென்யூ,
அசோக்நகர், சென்னை-83, போன்: 044-24896979
‘நீங்கள் உங்கள் மொழியுடன் அளவளாவிக்  கொண்டிருங்கள் எனக்கும்
நிழல்களுக்கும் சூரியனை மேற்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையிருக்கிறது’’

- இதுதான் கலாப்ரியாவின் தனித்துவம். வடிவத்திலும் உள்ளீடுகளிலும் எவராலும் எட்டிப் பிடிக்க முடியாத பரீட்சார்த்தங்களை எல்லாம் செய்து மொழிக்கு வளம் சேர்த்தவர். அவரது புதிய நூலான ‘உளமுற்ற தீ’, கவிதையையும், மொழியையும் பல்வேறு அடுக்குக் காட்சிகளில் நிறுத்திப் பாடுகிறது. அழகியலும், எளிமையும் பொருந்திய சிறுசிறு கவிதைகள் மனதுக்குள் அகன்ற காட்சிகளை விரிக்கின்றன. கலாப்ரியாவின் பங்களிப்பில் ‘உளமுற்ற தீ’ முதன்மையானது.

ரசனை சினிமா

நியூ வேர்ல்ட்
மொழி: கொரியன்
இயக்குநர்: பார்க் ஹூன் யூங்
வலிமையான மாஃபியா கும்பல் ஒன்றை அழிப்பதற்காக, இளம் போலீஸ் அதிகாரிகள் அதற்குள் ஊடுருவுகிறார்கள். இது எப்படியோ தெரிந்து போக, ஒவ்வொரு போலீஸாக களையெடுக்கப்படுகிறார்கள். மிச்சமிருக்கும் ஒருவன், ‘என்னை இந்த ஆபரேஷனில் இருந்து விடுவியுங்கள்’ என்று கதறியும் காவல்துறை அவனை பலி கொடுக்கத் துணிந்து விடுகிறது. விரக்தியும் வெறியுமாக அந்த இளைஞன் மாஃபியா கும்பலில் உள்ள போட்டியாளர்களையும் காவல்துறை அதிகாரிகளையும் போட்டுத் தள்ளிவிட்டு மாஃபியா தலைவனாகிறான். கொரியாவிலும், ஹாலிவுட்டிலும் ஹிட் அடித்த ‘ஐ சா தி டெவில்’ படத்தின் திரைக்கதையை வடித்த பார்க் ஹூன் யூங், தானே இயக்கிய படம் இது. நம்மூர் கேங்ஸ்டர் படங்கள் பலவற்றின் சாயமும் இந்தப் படத்தைப் பார்க்கும்போது வெளுக்கிறது!