அஞ்சலி... புரூஸ் லீ!



கருங்கோழி இறைச்சியில் உள்ள சத்துகளை பட்டியலிட்டு வியப்பில் ஆழ்த்தி விட்டீர்கள். நம்மூருக்குப் புதிது என்றாலும் பிராய்லர் சிக்கனுக்கு சரியான மாற்றுதான் இந்தக் கருங்கோழி!
- பி.ஜெயராஜ், சென்னை-91.

ப்ரைவஸி என்கிற வார்த்தைக்கு எதிர்கால அகராதியில் இடமிருக்காது என்கிற திட்டவட்டமான முடிவை கணினிப் புழுக்கள் தந்துவிட்டனவே! காலத்தின் கோலத்துக்கு இளைய தலைமுறை எப்படித்தான் ஈடு கொடுக்கப் போகிறதோ!
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

தன்னைப் பற்றிய வதந்திகளை எல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு மீண்டு(ம்) நடிக்க வந்திருக்கும் அஞ்சலியின் செம ‘தில்’ பேட்டி, அருமை! அவர் அஞ்சலி அல்ல... ‘அஞ்சா’லி! பெண் புரூஸ் லீ...
- மு.மதிவாணன், அரூர்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கலந்துகொள்ளாவிடினும் பிரேசில் நாட்டிற்கு ‘காண்டம்’ ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் கனெக்ஷன் பற்றிய தகவல் ‘ஏ’ ஒன்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘மனக்குறை நீக்கும் மகான்கள்’ தொடரில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் வரலாறு பக்திப் பரவசத்துடன்     ஆனந்த கண்ணீர் வர வைக்கிறது!
- ஜெ.பி.ரத்னமாலா குமார், சிவகங்கை.

‘ஃபைல்களில் தொலையும் வரலாறு’ கட்டுரை மிக நேர்த்தி! பிரதமராக இருந்து, சம்பளம் வாங்க மறுத்த லால் பகதூர் சாஸ்திரி பற்றிய தகவல் நெகிழச் செய்தது. இது போன்ற உண்மையான மனம் யாருக்குத்தான் வரும்?
- எச்.பவளக்கொடி, தேனி.

‘இழப்பு’ எனும் விலை மதிக்க முடியாத எரிபொருளை ஊற்றினால்தான் அரசு எந்திரம் இயங்குமோ என்கிற ஐயத்தை பன்மாடிக் கட்டிடத்தின் பேரிடர் கவரேஜ் உணர்த்திவிட்டது!
- கவியகம் காஜுஸ், கோவை.

‘விஷாலுடன் செம லவ்’ - ஸ்ருதியின் மயக்கும் பேட்டி, ஏதோ கமலஹாசன் பேட்டி போலவே சும்மா ‘நச்!’ தந்தை எட்டடி பாய்ந்தால் மகள் பதினாறடி பாயுது சாமி!
- லெட்சுமி மணிவண்ணன், சிக்கல்.

வாகன இன்சூரன்ஸ் பற்றி தெரியாத பல விஷயங்களைத் தெளிவுபடுத்திவிட்டது ‘தெரிஞ்ச விஷயம்... தெரியாத விஷயம்’ பகுதி. இனிமேல், ‘எதுக்கு இந்த இன்சூரன்ஸ்?’ எனப் புலம்பவே மாட்டோம்!
- கே.மன்சூர், நாகை.

‘அந்தக் காலத்தில் ராஜராஜன் எந்த வசதியும் இல்லாமல் கட்டிய கட்டிடத்தின் நிழல்கூட கீழே விழுவதில்லை! இப்போ கட்டினால் கட்டிடமே விழுது’ என்ற வலைப்பேச்சு கருத்து சிரிக்க மட்டும் வைக்கவில்லை. ரொம்ப நேரம் யோசிக்க வைத்துவிட்டது!
- எஸ்.முருகேசன், சாத்தூர்.