வீட்டில் போட்ட பணம் வருமா?



தெரிஞ்ச விஷயம்! தெரியாத விஷயம்!

சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு நொறுங்கி பலரது இதயத்தில் விழுந்திருக்கிறது. இந்தக் கொடூரம் பலி கொண்ட பலரது வாழ்க்கை சோகமயமானது. ரத்தமும் சதையுமான உறவுகளை எந்த இழப்பீடும் திரும்பத் தந்துவிடப் போவதில்லை. பல குடும்பங்கள் தங்களுக்காக சம்பாதித்துத் தந்த குடும்பத் தலைவனை இழந்திருக்கின்றன. இது ஒருபுறம் என்றால், வெளியில் தெரியாத இன்னொரு சோகம்... இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியவர்களுடையது!

இங்கு கட்டப்பட்ட 86 அபார்ட்மென்ட்களில் 72 விற்றுவிட்டன. ஒவ்வொன்றின் விலையும் சுமார் 80 லட்ச ரூபாய். பலரும் வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கித்தான் பணம் போட்டிருக்கிறார்கள். அவர்கள் கதி என்ன?

* வீடு கட்டும்போதே இன்சூரன்ஸ் வாங்குவது சாத்தியமா?

தனி வீடு கட்டும்போது அதற்கு சில இன்சூரன்ஸ் பாலிசிகள் உண்டு. அதுவும்கூட தீ விபத்து, தீவிரவாத தாக்குதல், இயற்கைச் சீற்றங்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இழப்பீடு தரும் விதமாகத்தான் இருக்கும். ஒருவர் தன்னுடைய இடத்தில் வீடு கட்டினால், அவர் தன் பெயரில் இந்த பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இதற்கு வழி இல்லை. வீடு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகே, அது வாங்கியவரின் கைக்கு வரும். அதுவரை கட்டித்தரும் புரொமோட்டரின் பெயரில்தான் அந்தக் கட்டிடம் இருக்கும்.

அதனால், கடன் வாங்கி வீடு வாங்கும் யாரும் இன்சூரன்ஸ் செய்துகொள்ள முடியாது. அபார்ட்மென்ட்டில் வீடு வாங்கும் யாரும், அந்த வீடு கட்டி முடிக்கப்படும் வரை அதற்கு இன்சூரன்ஸ் செய்ய முடியாது. குடியிருப்புகளை கட்டும் புரொமோட்டர் இன்சூரன்ஸ் செய்யலாம். இந்த இன்சூரன்ஸ் கூட, தரமற்ற கட்டிடம் இடிந்து விழுந்தால் இழப்பீடு தராது. ஆனால் பெரும்பாலானவர்கள் அப்படி காப்பீடு செய்வதில்லை.

* இப்படி கட்டும்போதே வீடு இடிந்தால், வாங்கியவர்கள் கதி என்ன?

கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு கோருவது முதல் வழி. ஆனால் வழக்கு பல ஆண்டுகள் இழுத்தடிக்கும். ஒருவேளை புரொமோட்டர் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டால் கஷ்டம்தான்.

வீடு கட்டப்பட்ட இடம், ‘அன் டிவைடட் ஷேர்’ என்ற முறையில் ஒவ்வொரு ஃபிளாட் வாங்கியவருக்கும் பத்திரம் செய்து கொடுக்கப் பட்டிருக்கும். இதை வைத்துத்தான் பலர் வங்கிக்கடன் வாங்கி யிருப்பார்கள். இப்படி ஃபிளாட் வாங்கியிருந்த அனைவரும் இணைந்து, யாராவது ஒரு மூன்றாம் நபரை திரும்பவும் வீடு கட்டித் தரச் சொல்லலாம்;

அல்லது அந்த இடத்தை விற்று உரிய முறையில் தங்களுக்குள் பிரித்து இழப்பீட்டைக் குறைத்துக் கொள்ளலாம். எல்லோரும் இணைந்தால்தான் இதெல்லாம் சாத்தியம். அதேசமயம், ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் வாங்கிய வீட்டுக்கடனுக்கு அவரவரே பொறுப்பு.

* வீடு கட்டும் புரொமோட்டர் கட்டிடத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டால் என்ன செய்வது?

சில பேர் நான்கைந்து இடங்களில் ஒரே நேரத்தில் அபார்ட்மென்ட்களைக் கட்டுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் முடித்துத் தருவதாகச் சொல்பவர்கள், அப்படி முடிப்பதில்லை. கட்டுமானப் பொருட்களின் விலை அடிக்கடி மாறுவதால், சிலர் சிக்கிக் கொள்கிறார்கள். எனவே வீடு வாங்குபவர்கள், ஆரம்பத்திலேயே முழுத் தொகையையும் தராமல் தவிர்ப்பதே புத்திசாலித்தனம். கட்டுமானப் பணிகள் ஒவ்வொரு கட்டமாக முடிய முடிய, அதற்கேற்ற அளவில் தொகையைக் கொடுக்கலாம்.

இப்போது ரிசர்வ் வங்கியே, ‘வீட்டுக்கடனை மொத்தமாகத் தராமல் ஒவ்வொரு கட்டப் பணி முடிந்ததும் அதற்கேற்ற விகிதத்தில் தாருங்கள்’ என வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. புரொமோட்டர் கட்டுமானப் பணிகளை பல மாதங்கள் நிறுத்திவிட்டால், வீடு வாங்கியவர்கள் இணைந்து வேறொரு கான்ட்ராக்டரை வைத்து மீதிப் பணிகளை முடித்து குடியேறலாம். ஆனால் இதற்கு சட்டபூர்வமான உரிமைகளை தங்கள் பெயரில் வாங்குவது அவசியம்.

* சில அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும்போது ‘.... வங்கி யின் அப்ரூவல் பெற்றது’ எனப் போடுகிறார்களே... அது என்ன?

அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு வங்கிகள் அப்ரூவல் தர முடியாது. சில பில்டர்கள் எங்காவது ஒரு இடத்தை வாங்கி, அங்கு பல அடுக்குமாடி வீடுகளைக் கட்டுவதற்கு ஒரு திட்ட அறிக்கை தயார் செய்து, அதன் அடிப்படையில் வங்கியில் கடன் பெற்றிருப்பார்கள். அதோடு, வீடு வாங்குபவர்களுக்கும் அந்தக் குறிப்பிட்ட வங்கியில் கடன் பெற ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். இதைத் தவிர வங்கிகளின் பங்கு எதுவுமில்லை.

அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும்போது, அதன் உறுதித்தன்மைக்கு சில விஷயங்கள் முக்கியம். கட்டிடப்பணி நடக்கும்போது, ஒவ்வொரு கட்டத்திலும், பிளான்படி கட்டப்
படுகிறதா, கட்டிடம் உறுதித்தன்மையோடு இருக்கிறதா என சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அதிகாரிகள் பரிசோதித்து சான்றளிப்பார்கள். பெரிய குடியிருப்புகளுக்கு வெறும் ‘கம்ப்ளீஷன் சர்டிபிகேட்’ மட்டும் போதாது. இப்படி ஒவ்வொரு ஸ்டேஜிலும் சான்றிதழ் வாங்குகிறார்களா என பார்ப்பது நல்லது.

* கட்டிடம் நம் கைக்கு வந்தபிறகு ஏதாவது ஆனால்?

நம்பகமான கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனங்கள், கட்டுமானக் கோளாறுகளை விற்பனைக்குப் பிறகும் சரி செய்து தருகின்றன. கட்டிடத்தில் இருக்கும் எல்லா அபார்ட்மென்ட்வாசிகளும் இணைந்து, வீடுகளுக்கு மொத்தமாகக் காப்பீடு செய்துகொள்ளலாம்.

- அகஸ்டஸ்