சரிதாவின் அப்ளாஸ் வசனம்!



நேற்றைய பொழுதில்...

சரிதாவுக்கு இயக்குனர் ஆர்.செல்வராஜ் காட்சியை விளக்க, சுதாகர் வேடிக்கை பார்க்கும் இந்த புகைப்படத்தை ஆர்.செல்வராஜிடம் காட்டியபோது பழைய நினைவுகளில் மூழ்கினார்.

‘‘1979ல் ‘பொண்ணு ஊருக்கு புதுசு’ படப்பிடிப்பில் எடுத்த படம் இது. சரிதா அற்புதமான நடிகை என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தப் படத்தில் அவருக்கு சமூக சேவகி வேடம். சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றி வருவார். ஒரு காட்சியில் சொர்க்கம் - நரகம் பற்றி விவாதம் செய்துகொண்டிருக்கும் இரண்டு ஆண்களிடம் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வது பற்றிப் பேசுவார். அதற்கு அவர்கள் ‘கல்யாணமாகாத நீ இதைப் பற்றி பேசக் கூடாது’ என்பார்கள். உடனே சரிதா, ‘நீங்க இதற்கு முன்பு செத்துருக்கீங்களா?’ என்பார்.

‘உயிரோட இருக்கும் நான் இதற்கு முன்பு எப்படி செத்திருக்க முடியும்?’ என்று அந்த ஆண்களில் ஒருவர் சொல்வார். ‘‘சாவதற்கு முன்பாகவே சொர்க்கம் நரகம் பற்றி அனுபவித்தது போல பேசுறீங்களே... அது மட்டும் எப்படி?’’ என்று கேட்கும் சரிதா, ‘‘உங்களையெல்லாம் இன்னும் பத்து பெரியார் வந்தாலும் திருத்த முடியாது’’ என்று சொல்லிவிட்டு கிளம்புவார். இந்தக் காட்சிக்கு ரசிகர்கள் பெரிய கை தட்டல் கொடுத்து வரவேற்றார்கள்.

எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும் சீனை சொல்லிவிட்டால், பத்தே நிமிடத்தில் உள்வாங்கிக்கொண்டு பிரமாதப்படுத்துவார் சரிதா. இந்தக் காட்சி முடிந்ததும்தான் ‘ஓரம் போ... ஓரம் போ... ருக்குமணி வண்டி வருது...’

 பாடல் எடுத்தோம். அதற்காகத்தான் சரிதாவும், சுதாகரும் தயார் நிலையில் இருந்தனர். ‘சோலைக்குயிலே... காலைக்கதிரே’ உட்பட, இந்தப் படத்துக்காக இளையராஜா போட்ட அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். இந்தக் காட்சியை தேனி சுருளி அருவி அருகே எடுத்தோம்.

நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து 18 மைல் தொலைவில் இருந்தது, லொகேஷன். சுதாகர் படப்பிடிப்புக்கு தாமதமாகத்தான் வருவார். அதனால், மாலையில் ஷூட்டிங் முடிய தாமதமாகிவிடும்.

 ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரே ஒரு கார்தான் கொண்டு செல்வோம். சரிதாவையும், சுதாகரையும் அதில் ஏற்றி அனுப்பிவிட்டு நான், கேமராமேன், உதவி இயக்குனர்கள் எல்லாம் திரும்பி வருவோம். நாங்கள் திரும்பி வரும் பஸ்தான் கடைசி பஸ். டிரைவரையும், கண்டக்டரையும் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கச் சொல்லிவிட்டு, கடைசியாக வந்து பஸ் ஏறுவோம். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு எடுத்த படம், பெரிய வெற்றிப் படமாகவே அமைந்தது எல்லோருக்குமே பெரும் மகிழ்ச்சி!’’

-அமலன்

படம் உதவி: ஞானம்