காந்தக் கண்ணில் காதல் ரசம் சொட்டும் பிந்துமாதவி..!



பத்து ரூபாய் ரீ-சார்ஜ் தொடங்கி, பரபரக்கும் புகார் வரை எதற்காக நம் நெட்வொர்க்கை தொடர்பு கொண்டாலும் கூலாக கேட்கும் குரல், ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’. இதையே படத்தின் தலைப்பாக்கி கவனம் ஈர்த்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ராம் பிரகாஷ். தினேஷ், பிந்துமாதவி ரொமான்ஸ் ஏரியாவில் கோணம் பார்த்துக்கொண்டிருந்தவருடன் பேசினோம்... ‘‘ தலைப்பைப் பார்த்தால், செல்போனால் ஏற்படும் தீமைகள் பற்றி அட்வைஸ் பண்ற படம் மாதிரி தெரியுதே?’’

‘‘15 வருடங்களுக்கு முன் நாம எல்லோரும் செல்போன் இல்லாமல் இருந்தோம்... எதுக்கும் குறைவில்லாத வாழ்க்கை இருந்துச்சு. இப்போ எல்லா மனிதர்களும் அதுக்கு அடிமையாகி இருக்காங்க. நம்ம நேரத்தை அதுதான் தீர்மானிக்குது; நம்ம வேலைகளை, நம்ம உறவுகளை, நம்ம தூக்கத்தை...

 எல்லாத்தையும் முடிவு செய்யற அதிகாரம் படைச்சதா செல்போன் இருக்கு. ஒரு போன்காலை எடுக்காம விட்டதால இழந்த காதல்கள் இங்கு நிறைய... இன்றைய இளைஞர்களை செல்போன் இல்லாம ஒருநாள் இருக்கச் சொன்னா, அவங்களுக்குப் பைத்தியம் பிடிச்சிடும். ஆனா, இதையெல்லாம் அறிவுரையா இல்லாமல் போகிற போக்கில் தொட்டுச் சென்றிருக்கிறோம்.

காதல், காமெடி என்று பக்கா கமர்ஷியல் மசாலாதான் இந்தப் படம். படம் எடுப்பதைவிட மக்களோட கவனத்தை ஈர்ப்பதுதான் இன்றைக்கு பெரிய விஷயம். அடிக்கடி மக்கள் கிராஸ் பண்ணும் விஷயமாகவும் இருக்க வேண்டும்; அதே சமயம் படத்துக்கும் தொடர்புடையதாக இருக்க வேண்டும்... இப்படி யோசித்து வைத்த தலைப்புதான் இது!’’
‘‘தினேஷ், நகுல், பிந்துமாதவி இருக்காங்களே... முக்கோணக் காதல் கதையா?’’

‘‘நோ... நோ... படத்தில் இன்னொரு ஹீரோயினா புதுமுகம் ஐஸ்வர்யா இருக்காங்க. வெட்டியா ஊரைச் சுற்றும் நகுலுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஒரு காதல். சின்ன அளவில் ரியல் எஸ்டேட் பண்ணும் தினேஷுக்கு பிந்துமாதவி மீது காதல். கால்டாக்ஸி டிரைவராக வரும் ‘எதிர்நீச்சல்’ சதீஷுக்கு ஒரு காதல் என்று மூன்று காதல் உள்ள படம்.

இரண்டு ஹீரோக்கள் என்றாலும் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்துக்கொள்ள மாட்டார்கள். கிளைமேக்ஸில் இவர்கள் சந்திக்கிற காட்சி செம சுவாரஸ்யமா இருக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் தினேஷ் செய்யும் டகால்டி வேலையும் ‘இவனெல்லாம் வேஸ்ட்’ என்று நினைத்த நகுல், வேலை கிடைச்ச பிறகு விபரமாக மாறுவதும் படத்தை சலிப்பில்லாமல் ரசிக்க வைக்கும்.’’

‘‘இரண்டு ஹீரோக்களை சமாளிப்பது சிரமமா இருக்கா?’’‘‘இந்தக் கதையை முதல்ல வேற சில ஹீரோக்களுக்கு சொன்னேன். இரண்டு ஹீரோ கதையில் நடிப்பதை சிலர் குற்றமாவே நினைக்கிறாங்க. சிலர் ‘இன்னொரு ஹீரோ யார்? கதையை மாற்று’ என இயக்குனர் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறாங்க. இதையெல்லாம் தாண்டி இந்தப் படத்தில் கமிட் ஆனவங்கதான் தினேஷும் நகுலும். தினேஷ் இன்னைக்கு நம்பிக்கைக்குரிய நட்சத்திரம்.

வெற்றிக்காக கடுமையா உழைக்கத் தயாரா இருக்கார் நகுல். இவர்கள் இருவரும் ஈகோ இல்லாமல் கொடுத்த ஒத்துழைப்பு, படத்துக்கு பெரிய ப்ளஸ். தினேஷ்கிட்ட முதலில் கதையைச் சொல்லி முடிச்சிட்டு ‘இதுல இன்னொரு ஹீரோவும் இருக்கார்’னு சொன்னதும் ‘எப்படிங்க சாத்தியம்’னு ஷாக்காகிட்டார்.

பிறகு, ‘இதில் நான்கு ஹீரோக்கள் நடிச்சாலும் என்னோட கேரக்டர் வெயிட்டா இருக்கு’ன்னு சொல்லி நம்பிக்கையோட நடிச்சுக் கொடுத்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் உதவி இயக்குனர் போல அக்கறையோடு வேலை செய்து நகுல் கொடுத்த ஒத்துழைப்புக்கும் நன்றி!’’
‘‘பிந்துமாதவி எப்படி பண்ணியிருக்காங்க?’’

‘‘அடிச்சி தூள் பண்ணியிருக்காங்க. இந்தப் படத்துக்காக ரெண்டு படங்களை மிஸ் பண்ணிட்டு நடிச்சுக் கொடுத்திருக்காங்க. ‘இந்த மாதிரி கேரக்டர் கிடைப்பது கஷ்டம்’னு சொல்லி கால்ஷீட் கொடுக்க முன்வந்தாங்க. அவ்வளவு கனமான கதாபாத்திரத்தில் கலக்கியிருக்காங்க. அவங்களோட காந்தக் கண்களில் வழியும் காதல் ரசம் இளசுகளின் இதயம் பறிக்கும்.’’

- அமலன்