ஜோசியம்



‘‘மாரி... உங்களுக்கு சகோதரி தோஷம் இருக்கு... அதான் பொண்ணு, பையன் கல்யாணம் தட்டிப் போகுது. உடனே உங்க அக்காவைப் போய்ப் பார்த்து, மஞ்சள், பூ, பழம், புடவை வாங்கிக் கொடுத்து, நல்லபடியா ரெண்டு வார்த்தை பேசினா தோஷம் நீங்கிடும். சுபகாரியங்கள் கைகூடும்.’’ -

ஜோசியர் மணியன் ஆலோசனை சொல்லி அனுப்பினார். ‘‘என்னங்க... சகோதரி தோஷம்னு புதுசா ஒண்ணைக் கிளப்பி விடுறீங்க..? உங்களை நம்பி வர்றவங்களை இப்படி ஏமாத்தலாமா?’’ - மணியனின் மனைவி கோபமாகவே
கேட்டாள்.

‘‘போன வாரம்தான் இதே மாரியோட அக்கா குடும்பம் வந்திருந்தது. ‘ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு சண்டை போட்டுக்கிட்டு, தம்பி எங்களோட பேசறதில்லை... அவன் மனசு மாற பரிகாரம் பண்ணணும்’னு அவங்க கேட்டாங்க. அவங்க பக்கத்தில், மாரியோட பையனுக்கும் பொண்ணுக்கும் ஏற்ற மாதிரி பெண்களும், மாப்பிள்ளைகளும் இருந்தாங்க. அக்காவும், தம்பியும் சமாதானமா போயிட்டா, அப்புறம் ‘டும்... டும்... டும்...’தான்.

இதைவிட வேறென்ன பரிகாரம் வேணும்? நான் ஜாதகக் கட்டங்களை மட்டும் வச்சு எல்லாத்தையும் சரி பண்ணிட முடியாது. கண்ணுக்குத் தெரியிற சில விஷயங்களைப் பார்த்து அதுக்கு ஏத்த ஆலோசனையும் சொல்லணும்’’ என்ற மணியனை பெருமையாகப் பார்த்தாள் மனைவி.                    
                                     
எஸ்.ராமன்