சிபாரிசு



இன்டர்வியூ அறை...‘‘மிஸ்டர் விக்னேஷ்... உங்க படிப்பு, தகுதி எல்லாம் ஓகே. ஆனா...’’ - எம்.டி ராஜசேகர் இழுத்தபோது, அந்த இளைஞன் ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். பிரித்துப் படித்தவர், ‘‘நான்சென்ஸ்... என் ஆபீஸ்ல சிபாரிசு கடிதமா? அனுபவம் இல்லாட்டியும் உன்னை நம்பி பெரிய பதவியைக் கொடுக்கலாம்னுதான் இருந்தேன். ஆனா, இப்போ வேணாம்னு முடிவெடுத்துட்டேன்!’’ - கறாராக சொல்லி அனுப்பிவிட்டார் ராஜசேகர்.

அன்று மாலை எம்.டி ராஜசேகருக்கு வீட்டிலிருந்து அவசர போன்... அவர் மனைவி பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக தகவல் வந்தது.‘‘கமலா, என்னாச்சு உனக்கு!’’ - பதை பதைத்தபடி வீட்டுக்கு வந்தார் ராஜசேகர். ‘‘ஒண்ணுமில்லைங்க... அவசரத்துக்கு டாக்டரைப் பார்க்க முடியாமதான் கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டேன்.

நான் போன கிளினிக்ல ‘டாக்டர் தினம் 25 பேஷன்ட்டைத்தான் பார்ப்பார்’னு சொல்லி அனுப்பப் பார்த்தாங்க. அப்புறம் அங்கிருந்த ஒரு தம்பிதான் எனக்காக சிபாரிசு பண்ணி சீக்கிரம் பார்க்க வச்சான். அவன் மட்டும் சிபாரிசு பண்ணாட்டி ரத்தக்கட்டு பெருசாகியிருக்கும்! அவனைத் தேடிப் பிடிச்சு ஒரு தேங்க்ஸ் சொல்லணும்ங்க!’’ என்று ஒரு விசிட்டிங் கார்டை நீட்டினாள் அவள்.அதில், ‘விக்னேஷ்’ என்று பெரிதாக எழுதியிருந்தது.   
            
ஜெயா மணாளன்