திக்ரித்...திக் திக் நிமிடங்கள்!



உயிர் பிழைத்த நர்ஸ் மோனிஷா

நீ... ண்ட போராட்டம்... பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்திருக்கிறார் லெசிமா ஜெரோஸ் மோனிஷா. கடந்த ஒரு மாதமாக ஈராக் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிப் பரிதவித்துப் போன தூத்துக்குடி நர்ஸ். பிழைப்பிற்காக ஈராக் சென்றவர், உயிர் பிழைத்து வந்த கதை, பெரும் சோகம். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த திக்திக் நிமிடங்கள் இன்னும் அப்படியே அவர் கண்களில். உறவினர்களின் வருகை, தொடர்ந்து வரும் உபசரிப்பு போன் கால்கள் என்றிருந்தவரை ஒரு மதியப் பொழுதில் சந்தித்தோம்...

‘‘நான் உயிரோட திரும்பவும் என் வீட்டுக்கு வந்திருக்குறதை என்னாலயே நம்ப முடியல. நிஜமாவே இது மறுபிறவி சார்’’ - அமைதியான புன்னகையோடு ஆரம்பிக்கிறார் மோனிஷா.
‘‘நான் பிறந்து வளர்ந்தெல்லாம் தூத்துக்குடி.

சின்ன வயசுலேயே அப்பா இறந்துட்டார். அம்மா தான் வீட்டு வேலை செஞ்சு, அந்தக் கஷ்டத்திலும் எங்களைப் படிக்க வச்சாங்க. பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் நர்சிங் படிக்க பெங்களூரு போயிட்டேன். மூணு லட்ச ரூபாய் கல்விக் கடன் வாங்கித்தான் படிச்சேன். முடிச்ச உடனே சேலத்துல தனியார் ஆஸ்பிட்டல்ல வேலைக்குப் போனேன். அப்புறம் டெல்லியில வேலை கிடைச்சது. அங்கிருக்கும்போதுதான் ஒரு ஏஜென்ஸி மூலமா ஈராக்ல வேலைக்கு வாய்ப்பு வந்துச்சு.

‘அரசு வேலை... மாசம் 850 டாலர் சம்பளம்... கடனை சீக்கிரமா அடைச்சிடலாம்... குடும்பத்துக்கும் ஒரு உயர்வு கிடைக்கும்’னு கனவோட போனேன். ஆனா, அங்க போக கூடுதலா கடன் வாங்க வேண்டியிருந்தது.

மொத்தமா நர்ஸ் வேலைக்கு இந்தியாவுல இருந்து 85 பேர் பாக்தாத் போனோம். அங்கிருந்து 15 பேர் திக்ரித் நகர்ல இருக்கிற ‘டீச்சிங் ஹாஸ்பிட்டல்’ல பிப்ரவரி 17ம் தேதி வேலைக்கு சேர்ந்தோம். அங்க ஏற்கனவே நம்ம இந்திய நர்ஸ்கள் 31 பேர் வேலையில் இருந்தாங்க. என்னைத் தவிர்த்து மற்ற எல்லாருமே கேரளா.

பொறுப்பா வேலை செய்வோம்ங்கறதால நம்ம நர்ஸ்களுக்கு அங்க டிமாண்டும் அதிகம்... மரியாதையும் அதிகம். தங்குறதுக்கு ஏ.சி ரூம் கொடுத்தாங்க. சாப்பாடும் அருமை’’ என்கிறவரின் முகத்தில் மெல்லப் படர்கின்றன திகில் ரேகைகள்.

 ‘‘ஜூன் 12ம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சிக்காரங்க ஹாஸ்பிட்டல் உள்ள நுழைஞ்சு, ‘இந்தப் பகுதி எங்க கட்டுப்பாட்டுக்கு வந்தாச்சு’ன்னு சொன்னாங்க. திக்ரித் நகர்ல இந்த ‘டீச்சிங் ஹாஸ்பிட்டலும்’, ‘சதாம் உசேன் மாளிகை’யும் ரொம்ப முக்கியமான இடங்கள். ரெண்டையும் அவங்க கைப்பற்றிட்டாங்க.

 ‘இனி நாங்க தான் உங்களுக்கு அரசாங்கம். பிடிச்சிருந்தா வேலை பார்க்கலாம். இல்லன்னா ஊருக்குக் கிளம்பலாம்’னு சொன்னாங்க. எங்களுக்கு ஒண்ணுமே பிடிபடல. திடீர் திடீர்னு குண்டுகள் வெடிக்கும். எங்க பார்த்தாலும் ஒரே புகை மண்டலம்.

மரண பயத்துல மக்கள் எழுப்பற அலறல் ஓலமும், துப்பாக்கியால சுடற சத்தமும், குண்டுகள் வெடித்து கட்டிடங்கள் நொறுங்கும் சத்தமுமே எப்பவும் கேட்கும். இதனாலயே நோயாளிங்க யாரும் ஹாஸ்பிட்டலுக்கு வரல. நாங்களும் வேலைக்குப் போகாம ஹாஸ்டல்லயே பயத்தோட இருந்தோம்.

தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஈராக்கிற்கான இந்திய தூதர் அஜய்குமார்னு எல்லார்கிட்டயும் பேசினோம். ‘பயப்படாதீங்க’ன்னு அவங்க தைரியம் சொல்லும்போது ஆறுதலா இருக்கும். ஆனா, திரும்ப குண்டு வெடிக்க ஆரம்பிச்சதும் பயத்தோட உச்சத்துக்கே போயிடுவோம்.

ஒரு கட்டத்துல எமர்ஜென்சி வார்டு, மார்ச்சுவரின்னு ஹாஸ்பிட்டல் உள்ளேயே குண்டு போட்டாங்க. இந்திய நர்ஸ்கள் இருந்த இடத்தை மட்டும் ராணுவம் விட்டு வச்சது. இதை சாதகமா பயன்படுத்திக்கிட்ட கிளர்ச்சிக்காரங்க, எங்களை ரெண்டாவது மாடியில இருந்து கீழ்ப்பகுதிக்கு கொண்டு வந்து, எங்க கூடவே இருந்தாங்க. முகமூடி போட்டுக்கிட்டு கையில துப்பாக்கியோட நிக்கிற அவங்களைப் பார்த்தாலே குலை நடுங்கும்.

ஜூலை 2ம் தேதி திடீர்னு அவங்க, ‘இங்கிருந்து உங்களை மொசூல் நகருக்குக் கொண்டு போறோம். இந்த பில்டிங்ல ‘பாம்’ போடப் போறாங்க’னு சொன்னாங்க. நாங்க கிளம்ப ‘டைம்’ வேணும்னு கேட்டோம். கொஞ்ச நேரத்துல திடீர்னு நாங்க தங்கியிருந்த ரெண்டாவது மாடியில குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுச்சு. உடனே, எல்லோரும் பதறியடிச்சு வெளியேறினோம். பஸ்ல ஏறும்போது மறுபடியும் குண்டு வெடிப்பு. நிறைய பேருக்கு கை, கால், முகம்னு காயங்கள் ஏற்பட்டுச்சு.

நாங்க அங்கிருந்து நகர நகர, அந்தக் கட்டிடமே குண்டுவெடிப்புல நொறுங்கி விழுந்துச்சு. அப்பதான் எல்லோருமே பதறி அழ ஆரம்பிச்சோம். இந்த குண்டுகளைப் போட்டது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிங்கதான். ஒருவேளை நாங்க வெளியே வர மறுத்திருந்தா அங்கேயே எல்லோரும் செத்திருப்போம்’’ சொல்லும்போதே மோனிஷாவின் கண்களில் நீர் கோர்க்கிறது. 

‘‘ரெட் க்ராஸ், இந்திய ராணுவம்னு யாராவது வந்து எங்களைக் காப்பாத்த மாட்டாங்களா? கடவுளேன்னு வேண்டிக்கிட்டே இருந்தோம். அங்க ஜெயில் மாதிரி ஒரு இடத்துல எங்களை அடைச்சு வச்சாங்க. ‘எங்களை விட்டுருங்க’ன்னு நாங்க அவங்ககிட்ட கதறி அழுதோம். இடையில என்ன நடந்துச்சுன்னு தெரியல.

மறுநாள் மதியம் 3 மணிக்கு அவங்களே எங்களை மொசூல் நகர் எல்லை வரை கொண்டு வந்து விட்டுட்டுப் போயிட்டாங்க. அதுக்கப்புறம் இந்திய அரசு எங்களை சொந்த ஊருக்கு அழைச்சிட்டு வந்துச்சு’’ என்கிறவரை பதற்றத்தோடு தொடர்கிறார் அவர் அம்மா, எட்விஜம்மாள்.

‘‘இனி, என் பொண்ணு எந்த நாட்டுக்கும் போக வேண்டாம். அவ என்னோட இருந்தா போதும். அவளைக் காப்பாத்திக் கொடுத்த அந்தக் கடவுளுக்கு நன்றி’’ எனக் கை கூப்பி வணங்குகிறார். ஆனால், இன்னமும் அந்தக் குடும்பம் முழு நிம்மதியை அடைந்ததாகத் தெரியவில்லை. ‘‘நான் அங்க வேலை பார்த்த 4 மாசமும் ‘எலெக்ஷன் முடிஞ்சு இப்பதான் புது அரசு வந்திருக்கு. பட்ஜெட் போட்ட பிறகு சம்பளம் தருவோம்’னு காரணம் சொன்னாங்க. கடைசிவரை எனக்கு சம்பளம் வரல.

கடன் பிரச்னையாலதான் நான் இப்படிப்பட்ட இடத்துக்குப் போனேன். இப்ப மறுபடி விட்ட இடத்தில் இருந்து தொடங்கின மாதிரி ஆகிடுச்சு. இப்ப எனக்கு எட்டு லட்ச ரூபாய் கடன் இருக்கு. எப்படி அடைப்பேன்னு தெரியல. கேரளா அரசு, ‘மீண்டு வந்த 45 நர்ஸ்களுக்கு அரசு வேலையும், உதவித் தொகையும் தரப்படும்’னு சொல்லியிருக்கு.

 அது மாதிரி தமிழக அரசும் எனக்கு உதவினா, நல்லா இருக்கும்.’’ என பவ்யமாக முடிக்கிறார் மோனிஷா. மரண பயத்துல மக்கள் எழுப்பற அலறல் ஓலமும், துப்பாக்கியால சுடற சத்தமும், குண்டுகள் வெடித்து கட்டிடங்கள் நொறுங்கும் சத்தமுமே எப்பவும் கேட்கும்.

பேராச்சி கண்ணன்
படங்கள்: ம.பெலிக்ஸ்