மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

இந்த உலகத்தின் அவஸ்தையே இதுதான். யாரையும் எதையும் அதனதன் இடத்திலிருந்து அதனதன் விருப்பத்திற்கு இயங்க விடுவதே இல்லை. பாதை வழி பாயும் நதியின் குறுக்கே அணை கட்டித் தடுக்கிறது மனித சுயநலம். பாசனம்தான் நோக்கம் என்றாலும், நதியின் வலி யாருக்குத் தெரியும்?அப்பாவுவும் நதி போலத்தான். ஒவ்வொரு கட்டத்திலும் விதி அவரை திசை திருப்பி விளையாடியது. துறவை நோக்கி நகர யத்தனிக்கும் நேரத்தில் அப்பாவு முன்னால் அங்கமுத்து பெருஞ்சுவராக நின்றார்.

‘‘எங்க கிளம்பிட்டீங்க
அப்பாவு? ரொம்ப தூரமா?’’ - அங்கமுத்து கேட்டார்.
‘‘பழநி வரைக்கும்...’’

‘‘ஓ... எத்தனை நாள் பயணம்... எப்ப திரும்புவீங்க?’’ - இந்தக் கேள்வியை அப்பாவு எதிர்பார்க்கவில்லை. புறப்பட்டது துறவை நோக்கி. திரும்பி வரும் திட்டம் அவர் மனதில் இல்லை. ‘எப்ப திரும்பி வருவ?’ என்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்?
திகைத்து நின்றவர், ‘‘என் முருகன் விருப்பப்படி....’’ என்றார்.

‘‘ரொம்ப சந்தோஷம் அப்பாவு. இப்ப பழநிக்கு போறதுகூட முருகன் விருப்பப்படிதானோ..?’’ என்றபடி, நண்பனின் கண்களை ஊடுருவிப் பார்த்தார் அங்கமுத்து.

‘முருகா... என்ன விளையாட்டு இது?’ என எண்ணியபடி தலையை மேலும் கீழுமாய் அசைத்தார் அப்பாவு. ‘‘அப்ப சரி...’’ என அங்கமுத்து அமைதியாய் விடை கொடுத்தார். 

இது உண்மையல்ல. முருகன் துறவு பூணச் சொல்லவும் இல்லை. ‘பழநிக்கு வா’ என அழைக்கவும் இல்லை. அங்கமுத்துவுக்காக செய்த சின்ன தலையசைவு, அப்பாவுவின் வாழ்வில் மிகப்பெரிய படிப்பினையைத் தந்தது. தன் பொருட்டு, தன்னை முன்னிறுத்தி சொல்லப்பட்ட உண்மையல்லாத விஷயத்தால் கோபமானான், குமரன். அக்கணமே வானத்தில் கடுங்கோபமாய் தோன்றினான். சிரிக்கும் உதடுகள் சினம் பூசிக் கொண்டிருந்தது. கண்களில் கருணை காணாமல் போயிருந்தது. கலங்கினார், அப்பாவு. ‘நான் உன்னை பழநிக்கு வா என அழைத்தேனா?துறவு ஏற்றுக்கொள் என்று உத்திரவிட்டேனா?

ஏன் இப்படி தலையசைத்தாய்? அது நான் சொன்னதாகத்தானே அர்த்தப்படும்? ‘பொய்’ என்றல்லவா பொருளாகும்?அடுக்கடுக்கான கேள்விகள்... அப்பாவு அதிர்ச்சியில் உறைந்தார்.யாரென்றே தெரியாதவர் அடித்துவிட்டால் கூட அரை நாழிகையில் மனம் தேற்றிக்கொள்ள முடியும். மனதுக்கு இனியவன் முகம் கோணினால்... அனிச்ச மலராய்த் துடித்தார், அப்பாவு.

‘துறவின் மீது இருக்கும் காதலும் ஆன்ம பலம் பெற வேண்டுமே என்கிற வேட்கையும் இப்படியொரு செயலுக்குத் தூண்டிவிட்டது. கருணையோடு என்னை மன்னித்தருள வேண்டும்’ என உயிர் கசிந்தார்.

‘உனக்கு எதை எப்போது தர வேண்டும் என்பது எனக்குத் தெரியாதா? ஆன்ம பலம்தான் இலக்கு என்றாலும் இந்தத் தலையசைப்பு உன்னை உலகத்தின் முன்னால் உண்மை இல்லாதவனாக்கி விடுமே. அதை என்னால் பொறுத்துக்கொள்ள இயலுமா? வெள்ளரிப் பழம் கனிந்த பிறகு காம்பு தானாகவே விலகி விடுவது போல, உனக்கு உலக பந்தம் இனி இல்லை என்ற தருணத்தில் நானே அழைத்துக் கொண்டுவிட மாட்டேனா?

ஏன் இந்த அவசரம்? இந்த அவசரத்திற்கு இதோ தண்டனை... என் அனுமதி இன்றி பழநி மண்ணை நீ மிதிக்கக் கூடாது’ எனக் கட்டளையிட்டான் முருகன். ‘‘அப்படியே சுவாமி... உங்கள் வார்த்தை என் வாழ்க்கை. உங்கள் அனுமதி இல்லாமல் பழநி மண்ணை மிதிக்க மாட்டேன்’’ என நிலம்பட விழுந்தார்,
அப்பாவு.

குழந்தைக்கு பொம்மைகளைப் பிடிக்கும். அவற்றோடு பேசும். விளையாடும். தன்னை மறக்கும். ஆனால் எவ்வளவு நேரம் பொம்மையால் குழந்தையை விளையாட்டில் கட்டிப் போட்டு வைக்க முடியும்? சற்று நேரத்திற்கெல்லாம் பொம்மைகளைத் தூக்கிப் போட்டுவிட்டு அம்மாவைத் தேடி ஓடுவதுதானே குழந்தையின் இயல்பு? அப்பாவுவால் உலகத்தில் விளையாடிக் கொண்டிருக்க முடியவில்லை. குமரனுக்காகத் தவித்தார். ‘குகனே... குகனே...’ என மனசு முருகன் பின்னால் நாய்க்குட்டி போல ஓடியது. முருகனின் நினைவு அவருக்கு இளங்காற்று. அவன் பேச்சு சாரல். அவனைப் பற்றிய பேச்சுமயிலிறகு.

‘‘பழநிக்கு வராதேன்னு சொல்லிட்ட இல்ல..? என் முனைப்பு தவறுதான். ஆனா, என் மனசு ஏன் உனக்குப் புரியல? உன்னைவிட எனக்கு எதுவுமே பெரிதா தெரியலையே. இந்த வாழ்க்கை எனக்கு தண்ணீருக்குள்ள மூழ்கிக்கிட்டு இருக்கற மாதிரி இருக்கே. மனசு துறவு காற்றுக்காக தவிக்குது. இங்க எப்படி நான் இன்னும் இருக்க முடியும்?

போதும்... என்னை இங்கிருந்து நகர்த்திடு. கருணையோட என்னை உன்னோட சேர்த்துக்கோ’’ என மனதுள் முருகனோடு அந்தரங்கமாய்ப் பேசினார். ‘என்னதான் தண்டித்தாலும் நீ என்னவன்’ என அரன்மகனும் அன்பால் உணர்த்தினான்.

சாத்தப்ப பிள்ளையின் மறைவுக்குப் பிறகு வியாபாரத்தோடு தோப்புத் துரவுகளையும் சேர்த்துப் பார்க்கும் கட்டாயம் அப்பாவுவுக்கு. அப்பாவு தன் தென்னந்தோப்பை பார்த்துவர புறப்பட்டார். உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது. தோப்பிற்குச் செல்லும் வழி, மணல் காடு. மணலில் புதையும் பாதம், சூடு தாங்காமல் தவித்தது.

 பழகிய பாதைதான் என்றாலும் வயசாகிறதே... சிரமப்பட்டு நடந்தார், அப்பாவு. மணலில் புதைந்திருந்த ஒரு முள் பாதத்தில் ஆழமாய்த் தைத்தது. பிடுங்கி எறிந்த பின்னும் குருதி கொப்பளித்தது. விந்தி விந்தி நடந்து தோட்டம் பார்த்து, வீடு வந்து சேர்ந்தார், அப்பாவு.மறுநாள்...

யாரோ கதவு தட்டினார்கள்.
‘‘யாரப்பா நீ? என்ன வேண்டும்?’’
‘‘சாமி... இதுதான அப்பாவு அய்யா வூடு?’’
‘‘ஆமாம்பா. நான்தான் அப்பாவு.’’

‘‘நீங்களா... கடவுளே! உங்களப் பாத்தது நான் செஞ்ச புண்ணியம்’’ என்றபடி அப்பாவுவின் பாதத்தில் விழுந்தான் அவன்.‘‘முருகா... முருகா...’’ - கண்மூடி முணுமுணுத்தார்.

‘‘சாமி. நமக்கு தச்சு வேல. பக்கத்து கிராமம். நேத்து ராத்திரி வூட்டுல தூங்கிட்டிருந்தேன். கனவுல முருகன் வந்தாரு. எம் பக்தன் அப்பாவு காலில் போட்டு நடக்க பாதணி இல்லாமல் கஷ்டப்படுகிறான்.

அவனுக்கு ஒரு காலணி செஞ்சி கொண்டு போய் கொடுன்னாரு. பதறிப் போய் எழுந்தேன். அந்த முகத்தை இப்பக் கூட என்னால மறக்க முடியல. சாமி சொன்னபடி பாதணி செஞ்சிட்டு வந்துட்டேன். தயவு செஞ்சு ஏத்துக்கணும்’’ என்று மரத்தால் செய்யப்பட்ட அந்த பாதக்குறடுகளை அப்பாவு சுவாமிகளிடம் நீட்டினான்,தச்சன்.

கை நீட்டி வாங்கும்போதே உடல் நடுங்கியது. ‘இத்தனை அன்பா என் மீது?’ என மனசு குழைந்தது. கண்ணீர் நன்றி சொன்னது. காலில் போட்டுப் பார்த்தார். சரியாக இருந்தது. தன் வேலை முடிந்தது என்று கை கூப்பி நகர்ந்தான், தச்சன். மெய் மறந்து நின்றார், அப்பாவு. முருகனின் அன்பினுள் தொலைந்திருந்தார். கொடிய கோடையிற் சுடும் மணற்கணே குருதி பாயவெ னடியி லேறு முள் வடிக னீரிலே நனைத லுள்கியம் மழவ னுக்கணி குறட ளித்தியென் - என குமாரசுவாமியத்தில் பாட்டாக்கினார்.

அன்று பௌர்ணமி. வானத்தில் நிலா பொன் தட்டு போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. அமுதமான நிலவொளி யில் அந்தப் பிரதேசமே ரம்மியமாகக் காட்சியளித்தது. தூரத்து ஏரியில் தவளைகளின் ஹர்ர ஹர்ர ஓசை தொடங்குவதும் முடிவதும் ஒரு தாளம் போல லயம் தப்பாமல் இருக்க... கயிற்றுக் கட்டிலை வாசலில் போட்டுப் படுத்திருந்த அப்பாவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவரது மனசு ‘சொர்க்கம் என்றால் என்ன? நரகம் என்றால் என்ன?’

என்கிற கேள்வியுள் சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்த தருணத்தில் இரண்டையும் காட்டி விட முருகன் முடிவு செய்தார். ஒரு கடும் பாலை அப்பாவு மனதில் படமாய் விரிந்தது. அவர் மனம் படபடவென அடித்துக் கொண்டது. நெற்றியில் வியர்வை பொங்கியது. என்ன ஆகிறது என யோசிக்கும் முன்னே அவரது மனம் உள்ளே நழுவத் தொடங்கியது. முருகன் கூர்மையானான்.

(ஒளி பரவும்)
படங்கள்: புதூர் சரவணன்
எஸ்.ஆர்.செந்தில்குமார்