கமல் - ஸ்ரீதேவி போல...



மறுபடி சேரும் மலையாள காம்பினேஷன்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கமே பெற்றுத் தந்த ‘செம்மீன்’ படத்தை மறக்க முடியுமா? அந்த ப்ளாக் பஸ்டர் படமும் அதன் நாயகன் மதுவும் மலையாள சினிமா உலகுக்கு எப்போதுமே ஸ்பெஷல்தான்.

கறுப்பு வெள்ளை காலத்தில் தொடங்கி, இன்று வரை... 50 வருடங்களைத் தாண்டி இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் மது. நம்மூர் ரஜினி மாதிரி எப்போதும் மது அங்கே பரபர பர்சனாலிட்டி. சமீபத்தில் மல்லுவுட்டில் பரவியிருக்கும் மது பற்றிய பரபரப்பு, அவரும் நடிகை சாரதாவும் 34 வருடங்களுக்குப் பின் ஜோடி சேர்வதுதான்!

70களின் சூப்பர் ஹிட் ஜோடி யார் என்று மலையாள மண்ணில் கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும் ‘மது - சாரதா’ என்று. புரொடியூசர்களைப் பொறுத்தவரை இவர்கள் அதிர்ஷ்ட ஜோடியும் கூட! அந்தக் காலங்களில் இவர்கள் ஜோடி சேர்ந்த ‘அர்ச்சனா’, ‘தெக்கன் காற்று’, ‘அபிஜாத்யம்’, ‘இதா இவிடெவரே’, ‘இதானென்டெ வழி’, ‘அஸ்தமயம்’, ‘காக்கத்தம்புராட்டி’, ‘தீர்த்த யாத்ரா’, ‘ஆராதனா’, ‘காந்தர்வ சேத்திரம்’, ‘‘சொசைட்டி லேடி’ உட்பட ஏராளமான படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடின. இருவரும் கடைசியாக ஜோடி சேர்ந்தது ‘அகலங்களில் அபயம்’ படத்தில். ஜேஸி இயக்கிய இந்தப் படம், 1980ல் பம்பர் ஹிட்டானது.

இதற்குப் பிறகு 34 வருடங்களாக இவர்கள் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. மது கூட தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அந்தக் காலத்தில் இரண்டு முறை சிறந்த நடிகைக்கான ‘ஊர்வசி’ விருது பெற்ற அற்புத நடிகையான சாரதா பல வருடங்களாக லைம் லைட்டில் இல்லை.

இத்தனை வருடம் கழித்து இவர்கள் இணைவது என்பது கிட்டத்தட்ட நம்மூர் கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் இணைவது மாதிரி. இந்த மேஜிக் காம்பினேஷனை சாத்தியமாக்கி இருப்பது, பழம் பெரும் இயக்குனரான ஸ்ரீகுமாரன் தம்பி. இவரும் 21 வருட இடைவேளைக்குப் பிறகு இயக்க வந்திருக்கிறார் என்பது இன்னொரு ஹைலைட்!

நடிப்பிலும் இறங்கி ‘வீராசாமி’ ரேஞ்சுக்கு ரிஸ்க் எடுக்கவில்லையே தவிர, மற்றபடி நம்மூர் டி.ஆர் போல, சகலகலா வல்லவனாகப் பேரெடுத்தவர்தான் ஸ்ரீகுமாரன் தம்பி. இயக்கம் தவிர்த்து, பாடலாசிரியர், இசையமைப்பாளர், கதாசிரியர் என இவர் திறமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ‘‘முன்னணி இயக்குனராக இருந்தும் ஏன் இந்த இடைவெளி?’’ - அவரிடமே கேட்டோம்... படபடவென பொரிந்து தள்ளுகிறார் மனிதர்.

‘‘மலையாள சினிமாவில் நடிகர்களின் கட்டுப்பாட்டுக்குள் இயக்குனர்கள் வந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால்தான் மனம் வெறுத்து ஒதுங்கினேன். 90களில் தியேட்டர் உரிமையாளர்கள் கூட மோகன்லால், மம்முட்டி இல்லாத சினிமாவை திரையிட தயக்கம் காட்டினார்கள். முன்னணி நடிகர்களுக்காக ஓட்டல் அறை முன் கதையோடு காத்துக் கிடந்து கால்ஷீட் வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் என் கவனத்தை சின்னத்திரை பக்கம் செலுத்தினேன்.

20 ஆண்டுகளாக தூர்தர்ஷன், சூர்யா டி.வி உட்பட பல சேனல்களில் எனது தொடர்கள் வெற்றிகரமாக வந்தன. இப்போது நியூக்ளியர் குடும்பங்கள் அதிகரித்து வருவதால் ஏராளமானோர் மன அழுத்தத்தால் அவதிப்படுவதை கண்கூடாகப் பார்க்கிறேன். பணமும், ஈகோவும்தான் இப்போது குடும்பங்களை ஆட்டிப் படைக்கிறது. பணத்துக்காக ஓடும் இளைய தலைமுறையினருக்கு முதியவர்களின் கவலைகளை கவனிக்க நேரமில்லை.

கஷ்டப்பட்டு வளர்க்கும் குழந்தைகள் பெரியவர்களான பிறகு பெற்றோரை உதாசீனப்படுத்துவது சகஜமாகி விட்டது. இந்த சமூக அவலத்தை மாற்றும் ஒரு படைப்பைத் தரவே மீண்டும் சினிமாவுக்கு வருகிறேன். என் படத்தின் முக்கிய கரு இதுதான்’’ என்கிற ஸ்ரீகுமாரன் தம்பி, தனது படத்திற்கு ‘அம்மத்தொட்டில்’ என பெயர் வைத்துள்ளார். இந்தப் படத்திற்கான கதை, பாடல்களை இவரே எழுதி இயக்குகிறார்.

‘‘இத்தனை வருடம் கழித்து பழைய இயக்குனர், காம்பினேஷன்... எப்படியிருக்கிறது?’’ - இந்தக் கேள்வி நடிகர் மதுவிடம்... ‘‘பல வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீகுமாரன் தம்பி சினிமாவுக்குத் திரும்புகிறார் என்று கேள்விப்பட்டதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் மாதிரி ஒரு இயக்குனருடன் பணிபுரியும்போது எந்த நடிகனாலும் சிறப்பாக நடிக்க முடியும். அவருடைய எட்டு படங்களில் நான் நடித்துள்ளேன்.

எனது அந்தக் காலத்து வெற்றி ஜோடி சாரதாவுடன் மீண்டும் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததிலும் பெரிய சந்தோஷம். எங்கெல்லாமோ அலைந்து திரிந்து மீண்டும் சொந்த கிராமத்துக்கு திரும்பும்போது வருமே ஒரு குதூகலம்... அதை இப்போது உணர்கிறேன்’’ என்கிறார் மது பூரிப்புடன்.

‘‘எனக்கு இது இன்ப அதிர்ச்சி! இந்தப் படத்தின் கதையும் ரொம்ப அருமை. பல வருடங்களுக்குப் பிறகு மது சாருடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட யாருக்குமே கிடைக்காத அரிய வாய்ப்பு இது. நீண்ட நாட்களாக நடிப்பை விட்டு ஒதுங்கியிருந்த எனக்கு, இது இரண்டாவது ஜென்மம்!’’ - மகிழ்ச்சி பொங்கப் பேசுகிறார் நடிகை சாரதா.
இது பழசல்ல... பாரம்பரிய காம்பினேஷன்!

- ஏ.கே.அஜித்குமார்