பேசும் சித்திரங்கள்



தமிழ் ஸ்டுடியோ  15 அருண்

கல்வி எனும் சுமை ஏன் ஆசிரியர்  மாணவர் உறவு பாதிக்கிறது? வகுப்பறையில் கொலை நிகழ்கிறது ?‘‘குழந்தைகள் பேச அனுமதிக்கப்படாத ஒரு கல்வி முறை இப்படித்தான் போய் முடியும். ங்கே குறைந்தபட்ச உரையாடலுக்கும் இடமில்லாமல் இருக்கிறது. எப்போதும் ‘கையைக் கட்டு.. வாயைப் பொத்து’தான்.

வீட்டிற்குப் போனால் அப்பா அம்மா இருவருமே வேலைக்குப் போய்விட்ட தனிமை. குழந்தைகள் விளையாடும் மரத்தடிகளும், குதூகலிக்கும் வீதிகளும் இன்று காணக் கிடைப்பதில்லை. கிராமப்புறங்களில்கூட இன்று இதுதான் நிலைமை. குழந்தைகள் பேச விரும்புகின்றன... சொல்ல விரும்புகின்றன. வகுப்பறையில் ஆசிரியரின் அதிகார ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. ‘கீப் கொயட்... கவனி’. ஆனால், குழந்தைகள் சொல்ல விரும்புகின்றன ‘...நாங்கள் சொல்வதை கவனியுங்கள்...’

எப்போதெல்லாம் கல்வி குழந்தைகளை மையப்படுத்தாமல் வெகு தூரம் விலகுகிறதோ, அப்போதெல்லாம் மீண்டும் தங்களை மையப்படுத்துவதாய் ஆக்கிட அவர்களது குரல் கேட்கும். அவர்கள் மொழி வேறு, வழிமுறை வேறு. செய்தி ஒன்றுதான்... ‘நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்.’ சிலர் பள்ளிக்கு கட் அடிக்கிறார்கள். ஊரைவிட்டே ஓடுகிறார்கள் சிலர். வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்கிறார்கள் சிலர். ஒரு மாணவன் பள்ளிக்கு எடுத்துப் போக கத்தி வாங்குவதென முடிவு செய்கிறான். செய்தி ஒன்றுதான்... ‘நாங்கள் சொல்வதைக் கேட்பீர்களா இல்லையா?’ எனும் குழந்தைகளின் வழி அது.

- ‘கருக்கல் விடியலை நோக்கி’ இதழில் வெளியான ஒரு நேர்காணலில், சிந்தனையாளர், எழுத்தாளர் இரா.நடராசனின் பதில் இது. செயல்முறைக் கல்வி குறித்தும், மாணவர்களின் உளவியல் குறித்தும் தொடர்ச்சியாகப் பேசி வரும் நடராசன், குழந்தைகளுக்கான அறிவியல் கதைகளையும் எழுதி வருகிறார். அவரது மிக முக்கியமான குறு
நாவலான ‘ஆயிஷா’, குறும் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

தான் எழுதிய விஞ்ஞான கேள்வி - பதில் நூல் ஒன்றிற்கான முன்னுரையை எழுதத் தொடங்குகிறார் ஆசிரியை ஒருவர். அந்த நூல் எழுதுவதற்கான ஆதாரப்புள்ளி யார் என்பதை ஆசிரியை, தனது மனவெளிக்குள் விவரிக்கும்போது, அந்த வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக காட்சிகளாக விரிகின்றன. தாயை இழந்து, சித்தியின் அரவணைப்பில் வளரும் ஆயிஷா, பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். தொடர்ச்சியாக எல்லா ஆசிரியர்களையும் கேள்விகளால் துளைத்தெடுக்கிறாள்.

பத்தாம் வகுப்பு மாணவர்களால் தீர்க்க முடியாத கணக்குகளுக்கு ஆயிஷா விடை கொடுக்கிறாள். காந்தவியல் பற்றி நூலகத்திலிருந்து புத்தகமெடுத்து படித்து, அது பற்றி அறிவியல் ஆசிரியரோடு விவாதிக்க விரும்புகிறாள். தங்களால் ஆயிஷாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்ற கோபத்தில், ‘வயதுக்கு மீறிய செயல்’ என்று அவளை எல்லா ஆசிரியர்களும் கண்டிக்கிறார்கள்.

ஆனால் ஆயிஷாவிற்கு அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியைக்கு மட்டும் அவளின் அபார அறிவு வளர்ச்சியின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அவளோடு நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறார். அறிவியல் ஆசிரியை தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு சென்று, அவரது சேகரிப்பில் இருக்கும் புத்தகத்தை படிக்கும் வாய்ப்பையும் பெறுகிறாள் ஆயிஷா. அவர்களுக்குள் ஆசிரியை - மாணவி என்பதைத் தாண்டி அருமையான நட்பு மலர்கிறது. தன் தாயின் மோதிரம் ஒன்றை ஆசிரியைக்குக் கொடுக்கிறாள் ஆயிஷா.

இடையில், பழுதடைந்த ரேடியோ ஒன்றைச் சரி செய்கிறாள் ஆயிஷா. ஆனாலும் தொடர்ந்து ஆயிஷாவை, அவளின் அறிவுத் தொல்லையைத் தாங்க முடியாமல் மற்ற ஆசிரியர்கள் அடிக்கிறார்கள். அவளால் அந்த வலியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அறிவியல் ஆசிரியையிடம், ‘‘இந்த வலி தெரியாத மாதிரி ஏதாவது மருந்து கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்’’ என்கிறாள். அவளே அந்த மருந்தையும் கண்டுபிடிக்கிறாள். இறுதியில் என்ன நடந்தது?

மனதை நிலைகுலையச் செய்து, நமது கல்விமுறையின் மீதும், ஆசிரியர்களின் அக்கறையின்மையின் மீதும் கடும்கோபம் கொள்ள வைக்கிறது இந்தக் குறும்படம். படத்தின் இறுதியில் நமது கண்களிலிருந்து துளிர்க்கும் கண்ணீர், குழந்தைகளின் குழந்தைத்தனத்தை மீட்டெடுக்கவும், அவர்களின் மீது திணிக்கப்படும் இந்த வியாபார, தொழில்நோக்கு கல்விமுறையை மறு ஆய்வுக்கு உட்படுத்தவும் கோருகிறது.

குழந்தைகளின் சிந்தனைக்கு என்று எல்லைகள் ஏதும் இல்லை. கட்டற்ற வெளியில் உருவாகும் அந்த சிந்தனைகளை முறைப்படுத்தவும், அவர்களின் சுய சிந்தனை வழியே வாழ்வைக் கட்டமைத்துக் கொள்ளவும் கல்வி உதவ வேண்டும், ஆனால் நமது கல்விமுறை முதலில் குழந்தைகளின் குழந்தைத்தனத்தையும், அடுத்து அவர்களின் சிந்தனைத் திறனையும் முற்றிலுமாக அழித்து, அவர்களை வெறுமனே சொல்பேச்சு கேட்கும் எந்திரங்களாக மாற்றிக் கொடுக்கவே முயல்கிறது.

 இதற்கு ஆசிரியர்களும் மிக முக்கியமான காரணம் என்பதை அவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள். கல்வி முறையை மாற்றியமைக்க அரசு முடிவெடுத்தாலும், தங்களை புதுப்பித்துக்கொள்ள விரும்பாத பல ஆசிரியர்கள், அந்த புதிய கல்விமுறை உருவாவதை தொடர்ந்து தடுத்து வருகிறார்கள். ‘குழந்தைகள் படிப்பது சம்பாதிக்கவே’ என்கிற குறுகிய சிந்தனை கொண்ட பெற்றோர்களும், கல்வி குறித்த மேலதிக புரிதல் இல்லாமல், எல்லா சுமைகளையும் குழந்தைகள் மீது சுமத்தி விடுகிறார்கள்.

‘ஆயிஷா’ குறும்படத்தில் சில நுட்பமான காட்சிகள் உண்டு. ஆசிரியர்கள் ஓய்வறையில் நிகழும் உரையாடலில், ‘‘இந்த முறுக்கு எப்படி மிஸ் இவ்ளோ சாஃப்ட்டா  இருக்கு’’ என்று ஒரு ஆசிரியை கேட்க, அதற்கு இன்னொரு ஆசிரியை மிகப் பொறுமையாக பதிலளிக்கிறார். ஆனால், மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க அவர்கள் இத்தனை தூரம் மெனக்கெடுவதில்லை.

முறுக்கு சாஃப்ட்டாக இருப்பதற்கு ஆசிரியர்களுக்குக் காரணம் தெரிகிறது. அது குறித்து உரையாட அவர்களுக்கு ஆர்வமும் இருக்கிறது. ஆனால், மாணவர்கள் சிந்தித்துக் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதிலில்லை. அந்த பதிலை கண்டுபிடிக்க அக்கறையும், மெனக்கெடலும் இருப்பது இல்லை என்பதை ஒரே காட்சியில் ஆணித்தரமாக இந்தப் படம் பதிவு செய்கிறது.

இன்னொரு காட்சியில், மதிப்பெண் குறைவாக போடப்பட்டிருப்பதால் ஆசிரியருடன் சண்டை போடுகிறாள் ஆயிஷா. ஆனால், ‘‘புத்தகத்தில் இருக்கும் பதிலைத்தான் எழுத வேண்டும், சுயமாக சிந்தித்து எழுதினால் மதிப்பெண் கிடைக்காது’’ என்று ஆசிரியை சொல்கிறார். இதனை காட்சி மூலம் சொல்லாமல், வசனமாகவே பதிவு செய்திருப்பார்கள். காரணம், எந்தப் படைப்பும் ஒரு தரப்பினரை மட்டுமே குற்றம் சொல்லி நகர்வதில்லை.

அவர்களின் மீது பெரும் அவநம்பிக்கையைப் பதிவு செய்யவும் விழைவதில்லை. மாறாக அவர்களை சுயபரிசோதனை செய்துகொள்ளவே தூண்டுகிறது. இந்தக் குறும்படத்தில் இரண்டு இடங்களில் பள்ளியின் பெரிய விளையாட்டுத் திடல், பறவைக் கோணத்தில் காட்டப்படுகிறது. முதல் முறை, மாணவர்களை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் தனித்து விடப்படுவதாகவும்... அடுத்த முறை ஆசிரியர்கள்-மாணவர்கள் இருவரையும் புறக்கணித்து, அவர்களை எதிர் எதிர் துருவங்களாக நிறுத்தும் கல்விமுறையால் இருவருமே தனித்து விடப்பட்டதையும் காட்சிப் படிமமாக அது விளக்குகிறது.

படம்: ஆயிஷா     இயக்கம்: பா.சிவக்குமார்
நேரம்: 28.17 நிமிடங்கள் ஒளிப்பதிவு: சி.ஜே.ராஜ்குமார்
படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ்  கதை: இரா.நடராசன்
பார்க்க: www.youtube.com/watch?v=8BuyTExd_o

நமது கல்விமுறை முதலில் குழந்தைகளின் குழந்தைத்தனத்தையும், அடுத்து அவர்களின் சிந்தனைத் திறனையும் முற்றிலுமாக அழித்து, அவர்களை வெறுமனே சொல்பேச்சு கேட்கும் எந்திரங்களாக மாற்றிக் கொடுக்கவே முயல்கிறது.

பள்ளியில் வாங்கிய பிரம்படி, வளர்ந்து பெரிதானபிறகும் நினைவில் இருந்தபடி இருக்கும். ஆயிஷா குறுநாவலைப் படித்தபோது, ‘‘அடியைத் தாங்க முடியவில்லை மிஸ், இந்த வலியை மறக்க ஏதாவது மருந்து கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்’’ என்கிற ஆயிஷாவின் குரலை தன்னுடைய குரலாகப் பார்த்திருக்கிறார் இயக்குனர் பா.சிவக்குமார்.

 நம்முடைய குழந்தைகள் மீது மெக்காலே கல்விமுறை விதைத்த வன்முறையை, இந்தப் குறும்படம் மூலம் எல்லாரையும் உணரச் செய்ய வேண்டும் என்ற பதைபதைப்போடு படத்தை உருவாக்கியிருக்கிறார்.

பலரும் இதனை பெரிய படமாக எடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கும், பள்ளிகளுக்கும் கொண்டு செல்ல இதுவே நல்ல வடிவம் என்று உணர்ந்து, இதனை குறும்படமாகவே எடுத்து முடித்துள்ளார் சிவக்குமார். ‘‘ஆயிஷா குறுநாவலை எழுதிய நடராசன், ‘இது ஒரு சாதாரண நாவல் அல்ல, ஒரு இயக்கம்’ என்று அடிக்கடி சொல்வார். நானும் படத்தை எடுத்து முடித்தவுடன், ‘இது என்னுடைய படைப்பு’ என்பதை மறந்துவிட்டேன். குழந்தைகளுக்கான மாற்றுக் கல்வி உருவாக வேண்டும் என்கிற எண்ணத்தைத் தொடர்ந்து பரப்ப, இந்தக் குறும்படமும் ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும்’’ என்கிறார் சிவக்குமார்.

(சித்திரங்கள் பேசும்...)
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி