கொடுப்பினை



கோகுலுக்கு ஐ.டி துறையில் பெரிய வேலை. கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருக்கும் அவன் நண்பன் கணேசன் தற்செயலாக சென்னைக்கு வந்திருந்தான். கோகுல் வீட்டில் கணேசனுக்கு தடபுடல் டிபன் விருந்து ரெடியாக இருந்தது. கோகுலின் மனைவி இட்லி, மசால் தோசை என எல்லா வெரைட்டிகளையும் கணேசன் முன் அடுக்கி, ‘‘சாப்பிடுங்கண்ணா!’’ என்றாள் பரிவுடன்.

‘‘டேய் கோகுல், கொடுத்து வச்சவன்டா நீ. நாங்க எல்லாம் ஏதாவது விசேஷ நாள் வந்தாதான் இட்லி, வடை எல்லாம் செய்து சாப்பிடுறோம். மத்த நாட்கள்ல கேழ்வரகுக் கஞ்சியோ, கம்பங்கஞ்சியோதான். தினமும் இப்படி விதவிதமா சாப்பிடுறதுக்கெல்லாம் உன்னை மாதிரி நல்லா படிச்சிருக்கணும். புண்ணியம் செய்திருக்கணும்’’ - வெள்ளந்தியாய்ச் சொன்னான் கணசேன்.

‘‘அடப்போடா நீ வர்றேன்னுதான் இதெல்லாம் தயார் பண்ணச் சொன்னேன்!’’ - சலித்துக் கொண்டான் கோகுல். ‘‘அப்போ நீ தினமும் இதெல்லாம் சாப்பிடுறதில்லையா..? வேற என்னதான் சாப்பிடுறே?’’ - அப்பாவியாய் கணேசன் கேட்டான். ‘‘பி.பி., சுகர் வந்ததிலிருந்து நாலு வருஷமா இதைத்தாண்டா சாப்பிட்டுட்டிருக்கேன்’’ - கோகுல் சொல்லி முடிக்கவும், அவன் மனைவி ஒரு பவுலில் கேழ்வரகு கஞ்சியைக் கொண்டு வந்து அவன் முன் வைக்கவும் சரியாக இருந்தது.        

கீர்த்தி