திருடு போகும் அந்தரங்கம்! டெக்னாலஜி அதிர்ச்சி



டெக்னாலஜி அதிர்ச்சி

‘செல்போனால் உங்கள் மனைவியை போட்டோ எடுக்காதீர்கள். அது இந்தத் தளத்தில் கண்டிப்பாக வந்து விடும்’  இப்படி பகிரங்கமாக சவால் விடுகிறது இணையப் பக்கம் ஒன்று. ‘‘நம்ம போன்ல நாம எடுக்குற போட்டோக்களை இவங்க எப்படி சார் சுடுவாங்க?’’  டெக்னாலஜியில் ரைட் புகுந்து லெஃப்ட் வரும் நண்பர் ஒருவரிடம் சந்தேகம் கேட்டோம். ‘‘சும்மா சார்... எல்லாம் ‘வேற மாதிரி’ பொண்ணுங்களா இருக்கும்!’’  அந்தத் தளத்தைப் பார்த்துவிட்டு, நம்மிடம் சமாதானம் சொன்னார் மனிதர்.

சரியாக 2 மணி நேரத்தில் அவரிடமிருந்து போன்... ‘‘சார்... என் அக்கா பொண்ணு போட்டோ அதில் இருக்கு!’’  அவர் குரலில் கலவரம்! ‘‘இதுக்குப் பேர்தான் சார் தகவல் திருட்டு. உங்க செல்போன்ல, கம்ப்யூட்டர்ல, லேப்டாப்ல யாருக்கும் தெரியாம ரகசியமா சில போட்டோக்களை வச்சிருக்கறதா நீங்க நினைப்பீங்க. குடும்பத்தோட அருவியில குளிக்கும்போது எடுத்தது, ஏதோ ஒரு ரொமான்டிக்கான தருணத்தில் எடுத்ததுன்னு நம்ம வீட்டுப் பெண்களோட படம் அதில் இருக்கும்.

உங்களுக்கே தெரியாம உலகத்தின் ஏதோ ஒரு மூலையில இருந்து அதைத் திருட முடியும்!’’ என குண்டைத் தூக்கிப் போடுகிறார் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவரும் சைபர் சட்டத்துறை நிபுணருமான ராஜேந்திரன். ‘‘இந்தத் திருட்டு பல வழிகள்ல நடக்குது. அது எல்லாத்துக்குமே நம்ம அஜாக்கிரதைதான் முக்கியமான காரணம். இப்ப பல பெண்கள் தங்களோட போட்டோக்களை ஃபேஸ்புக்லயும் ட்விட்டர்லயும் தாராளமா போடுறாங்க. வீட்டுல கேஷுவலா, நைட்டியோட தன்னைத் தானே எடுத்துக்கிட்ட செல்ஃபி போட்டோவா கூட அது இருக்கலாம். அப்படிப்பட்ட படங்கள் அவங்கவங்க ப்ரொஃபைலில் இருக்குற வரை பிரச்னை இல்லை.

ஆனா, அதுவே ‘ஹாட் இண்டியன் ஆன்ட்டீஸ்’னு தலைப்புல வந்தா, அசிங்கம்தானே! எந்த போட்டோவும் இணையத்துக்கு வந்த பிறகு, அது கிட்டத்தட்ட பொதுச் சொத்து ஆகிடுது. அதை யாரும் எங்கேயும் பயன்படுத்திக்க முடியும். ஒவ்வொருத்தரையா நாம போய் தடுக்க முடியாது. ஸோ, நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்’’ என்கிற ராஜேந்திரன், கண்ணுக்குத் தெரியாத மென்பொருள் மூலம் நடக்கும் தகவல் திருட்டுகளையும் விவரிக்கிறார்.

‘‘கம்ப்யூட்டர் வைரஸ்னா அது கம்ப்யூட்டரையே முடக்கிடும். கெடுத்துடும். அதனால அதைப் பற்றி எல்லாருக்கும் தெரியுது. ஆனா, கம்ப்யூட்டர் வார்ம்... அதாவது, ‘கணினி புழு’ன்னு ஒண்ணு இருக்கு. அது நம்ம கம்ப்யூட்டருக்கு எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்காம ஒரு ஓரமா சாதுவா உட்கார்ந்திருக்கும். ஆனா, உங்கள் கம்யூட்டர்ல நெட் கனெக்ஷனை ஆன் செய்யும்போதெல்லாம் அது உங்க பர்சனல் தகவல்களை வெளியே யாருக்கோ அனுப்பிக்கிட்டிருக்கும்.

‘மாதம் 1 லட்சம் டாலர் சம்பளம்’ங்கிற மாதிரியான கவர்ச்சி வாக்கியங்களோட வரும் மெயில்கள்ல கூட இப்படிப்பட்ட கணினிப் புழுக்கள் ஒட்டிக்கிட்டிருக்கலாம். அதை கிளிக் பண்ணினா போச்சு. தேவையில்லாத வெப்சைட்கள்ல மேயும்போதும் இது உள்ளே வரலாம். அப்டேட்டான நல்ல ஆன்ட்டி வைரஸ் இந்த வார்ம்களை ஒழிச்சிடும். ஆனா, அந்த ஆன்ட்டி வைரஸே கள்ள மார்க்கெட்டில் டவுன்லோடு செய்தாக இருந்தால் ரொம்பக் கஷ்டம்!’’ என்கிறவரின் பேச்சு, செல்போன் தகவல் திருட்டு பக்கமும் கவனம் திரும்புகிறது...

‘‘இப்போல்லாம் எல்லா போன்லயும் வயர்லஸ் இன்டர்நெட்டுக்கான வைஃபி வசதி இருக்கு. பெரிய ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள்ல எல்லாம் ‘இலவச வைஃபி’க்கு ஆன்டெனா வச்சிருக்காங்க. அப்படி ஃப்ரீ வைஃபி ஜோன்களைப் பார்த்தாலே ‘கிடைச்சது சான்ஸ்’ என்று இளைஞர்கள் இறங்கிடுறாங்க. டவுன்லோடு பண்ண வேண்டிய பாட்டு, படம், ஆப்களை எல்லாம் அப்போ பண்ணி முடிச்சுடணும்னு வேகம் காட்டுறாங்க. ஆனா, இலவச வைஃபி ரொம்ப ரொம்ப ஆபத்தானது.

உங்க போன்ல இருக்குற எந்த பர்சனல் தகவலையும் ஒரு வைஃபி சிஸ்டத்தால களவாட முடியும். அதனால, முடிந்த வரைக்கும் நம்ம நெட்வொர்க்ல கிடைக்கிற 2ஜி வேகமே போதும் என்கிற மனநிலையைக் கொண்டு வரணும். இல்லாட்டி நம்ம பர்சனல் நமக்கில்ல!’’ என்கிறார் ராஜேந்திரன். இது தவிர, பழைய கணினி பாகங்களை அப்புறப்படுத்தும்போதும் நமது தகவல்கள் கைவிட்டுப் போகின்றன. இதைத் தடுக்க, பென் டிரைவ், மெமரி கார்டு, செல்போன் போன்றவற்றை செகண்ட்ஸில் விற்கவே கூடாது என்கிறார்கள் நிபுணர்கள்.

‘‘நம்ம பர்சனல் போட்டோக்களை திருடுறவன் எங்கோ வெளிநாட்டுல இருக்கணும்னு அவசியமில்ல. நம்ம பக்கத்தில் இருக்கிறவங்க... ஏன் நம்ம நண்பர்கள் கூட அதை வாய்ப்பு கிடைச்சா செய்வாங்க’’ என்கிறார் சென்னை சைபர் க்ரைம் துறையின் இணை ஆணையரான ஜெயக்குமார். ‘‘இன்னைக்கு எத்தனை பேர் செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா போலீஸுக்கு தகவல் சொல்றாங்க? ப்ரீ பெய்டுதானேன்னு சிம் கார்டை கூட சிலர் ப்ளாக் பண்றதில்லை. ‘போன் விலை கம்மிதானே...

இதுக்காக போலீஸ் வரை போகணுமா’ன்னுதான் நினைக்கிறாங்க. ஆனா, அதிலிருக்குற நம்ம பர்சனல் போட்டோக்களும் தொடர்பு எண்களும் விலைமதிப்பில்லாதவை. அது மட்டுமில்லாம, நம்ம போனை அவங்க தப்பான காரியத்துக்கு பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கு. ஸோ, போலீஸ் புகார் அவசியம். மெமரி கார்டு, பென் டிரைவ் போன்றவற்றில் நம்மால் அழிக்கப்பட்ட போட்டோக்களைக் கூட மீட்டு எடுக்க சாஃப்ட்வேர் இருக்கு. அதையெல்லாம் அடுத்தவருக்கு விக்கிறதோ, சும்மா கொடுப்பதோ கூடவே கூடாது. கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் போயிடுச்சுன்னா, எடைக்குப் போடுறதும் தப்பு. நமக்குத் தேவையில்லைன்னா அதை உடைச்சு அழித்துவிட வேண்டும்’’ என்கிறார் அவர் கண்டிப்புடன்!

நண்பரின் பிரச்னை சட்டரீதியாக அணுகப்பட்டிருக்கிறது. ஆனால், ஏதோ ஒரு நாட்டில் இருக்கும் சர்வரை தொடர்பு கொண்டு அந்தப் பக்கத்தை முடக்குவது கூட தற்காலிக நிவாரணம்தான் என்கிறார்கள் நிபுணர்கள். அந்தப் படம் இணையத்தில் வெளியான சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கானவர்கள் அதை டவுன்லோடு செய்திருக்கலாம்.

 அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வலைப்பதிவில், ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் அதைப் பயன்படுத்தினால் தடுத்து நிறுத்துவது ரொம்பக் கஷ்டம். ‘‘செல்போன் மற்றும் லேப்டாப்களில் அந்தரங்கமான எந்த விஷயங்களையும் வைத்துக்கொள்ளாமல் இருப்பதே இதற்கு சரியான தீர்வு’’ என்கிறார்கள் துறை வல்லுநர்கள்.பிரைவஸி என்ற வார்த்தையே வருங்காலத்தில் இருக்காதோ!

நம்ம போட்டோக்கள் ப்ரொஃபைலில் இருக்குற வரை பிரச்னை இல்லை. ஆனா, அதுவே ‘ஹாட் இண்டியன் ஆன்ட்டீஸ்’னு தலைப்புல வில்லங்கமான வெப்சைட்ல வந்தா அசிங்கம்தானே!

கணினிப் புழு கண்டுபிடிப்பது எப்படி?


உங்கள் கணினியில் அந்தரங்கத் தகவல்களை உளவு பார்க்கும் ‘வார்ம்’ இருக்கிறதா என்று அறிய ஒரு வழி உண்டு. கணினியில் இணைய இணைப்பை இணையுங்கள். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், அல்லது மோசில்லா போன்ற பிரவுசர்கள் எதையும் திறக்க வேண்டாம். உங்கள் பிராட்பேண்ட் மோடத்தை உற்று நோக்குங்கள். பிரவுசர் வழியாக இணையம் பயன்படுத்தப்படாமலேயே மோடத்தில் இணையத்துக்கான லைட் படபடத்துக்கொண்டிருந்தால், ‘வார்ம்’ இருக்கிறது. அது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் இணைய இணைப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பிராட் பேண்ட் அல்லாமல் ப்ரீ பெய்டு டாங்கிள் வைத்திருப்பவர்கள், ஒவ்வொரு முறை இணையத்தைத் துண்டிக்கும்போதும் வருகிற டேட்டா பயன்பாட்டு விவரத்தை வைத்து இதைக் கண்டறியலாம்!

டி.ரஞ்சித்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்