வாகன இன்சூரன்ஸ் இருக்கா?
லைசென்ஸை காட்டு..!
ஆர்.சி. புக்கை எடு..!
இன்சூரன்ஸ் இருக்கா?
டிராஃபிக் போலீஸ் கேட்கும் மூன்றாவது கேள்வியாகத்தான் நம்மில் பலருக்கும் வாகன இன்சூரன்ஸைத் தெரியும். பர்ஸை பஞ்சமில்லாமல் வைத்திருந்தால், இந்த இன்சூரன்ஸ் தேவையில்லை என்பது பலரின் அனுபவ அறிவு. ஆனால், அது எவ்வளவு தவறென்பதை உணர வைத்தது சமீபத்தில் வந்த செய்தி ஒன்று! சில மாதங்களுக்கு முன்பு, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்கள் அந்த இளைஞர்கள்.
இடித்த வாகனத்தையே அடையாளம் தெரியாதபோது இழப்பீட்டை யாரிடம் கேட்பது? எனவேதான், அந்த இளைஞர்களின் மனைவியர் இருவரும் சேர்ந்து ஒரு ஆட்டோவை வாங்கி, அதற்கு வாகன இன்சூரன்ஸும் பெற்று, அந்த ஆட்டோதான் விபத்தை ஏற்படுத்தியது என்று கோர்ட்டில் முறையிட்டார்கள். வாகன இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பெரியதொரு தொகையையும் இழப்பீடாகக் கேட்டார்கள். ஆனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட், ஏமாற்ற முயன்றதற்காக இருவருக்கும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
வாகன இன்சூரன்ஸ் என்பது இத்தனை பெரிய விஷயமா? ‘நேஷனல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி வி.ராமசாமியிடம் கேட்டோம்...
‘‘நம் வாகனம் விபத்தில் சிக்கினால் அதை செப்பனிடவும், திருடு போனால் வேறு வாகனம் வாங்கவும் நமக்குப் பணம் தேவை. வாகன இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் அந்த இன்சூரன்ஸ் நிறுவனமே இந்தப் பணத்தை நமக்கு இழப்பீடாக வழங்கி விடும்.
இதை ‘Own Damage ’ இன்சூரன்ஸ் என்பார்கள். இது தவிர, நம் வாகனம் மோதி வேறு யாராவது பாதிப்படைந்தாலோ, உயிரிந்தாலோ அவர்களுக்கு நாம்தான் இழப்பீடு வழங்கியாக வேண்டும். இந்த நேரத்தில் ‘நாங்க இருக்கோம்’ என வருவதும் வாகன இன்சூரன்ஸ்தான். ‘Third party’ இன்சூரன்ஸ் எனப்படும் இந்த அம்சத்தின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நமது வாகன இன்சூரன்ஸ் நிறுவனமே இழப்பீட்டை வழங்கிவிடும். மேற்படி செய்தியில் அந்தப் பெண்மணிகள் இழப்பீடு பெற நினைத்தது இப்படித்தான்.
நம் வாகனத்தின் சேதம், அதனால் பிறர் அடைந்த பாதிப்பு இந்த இரண்டுக்குமே இழப்பீடு தருவதை ‘ஒருங்கிணைந்த வாகன இன்சூரன்ஸ்’ என்பார்கள். இப்போது பலரும் இதைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். காவல்துறை வாகன இன்சூரன்ஸை கட்டாயமாக்கி இருக்கிறது’’ என்றார் அவர். ஆனால், ‘‘வாகனங்களுக்காக இன்சூரன்ஸ் எடுத்திருக்கும் 30 சதவீதம் பேருக்கு இன்சூரன்ஸ் விதிகள் தெரிவதில்லை’’ என்கிறார் ‘கான்சர்ட்’ நுகர்வோர் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜி.ராஜன்.
‘‘இது தொடர்பாக சமீபத்தில் நாங்கள் நடத்திய ஆய்வின்படி, வாகனம் திருட்டுப் போனவுடன் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கோ, காவல்துறைக்கோ தெரிவிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வும் நம்மவர்களிடம் இல்லை’’ என வேதனையோடு தெரிவிக்கிறார் அவர். அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் தகுந்த நிபுணர்களிடம் நாம் சேகரித்த தகவல்கள் இங்கே...
வாகனம் திருடப்பட்டுவிட்டால்....1. போலீஸ் ஸ்டேஷன் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 48 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
2. ஒருவேளை, வண்டியோடு ஆர்.சி புத்தகமும் சேர்த்து திருடப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரியிடம் டூப்ளிகேட் காப்பி ஒன்று பெற வேண்டும்.
3. மூன்று மாதத்திற்குப் பிறகும் வாகனம் கிடைக்கவில்லை என்றால் போலீசாரிடம் இருந்து ஓர் அறிக்கை பெற்று, சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்பித்து இழப்பீடு பெறலாம்.
4. ஒருவேளை வாகனம் கிடைத்துவிட்டால் போலீசாருக்கும், இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
விபத்தில் வாகனம் மட்டும் சேதமடைந்தால்...1. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பிறகு எப்.ஐ.ஆர் எண்ணுடன் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
2. உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து கிளைம் ஃபார்ம் வாங்கி தெளிவாக நிரப்ப வேண்டும். அதில் வண்டி பழுது பார்த்தலுக்கான மதிப்பீட்டைக் குறிப்பிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
3. கூடவே டிரைவிங் லை சென்ஸ், ஆர்.சி புத்தகம் இரண்டையும் மதிப்பீட்டாளர் சரிபார்ப்புக்காக கொண்டு செல்ல வேண்டும்.
4. பஸ், கார் போன்ற வாகனமாகவோ, கனரக வாகனமாகவோ இருந்தால், வழித்தட அனுமதி, தகுதி சான்றிதழ் ஆகியவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
விபத்தில் ஒருவரோ, பலரோ பாதிக்கப்பட்டால்...1. அடிபட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு போலீசாரிடமும், இன்சூரன்ஸ் நிறுவனத்திடமும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
2. மூன்றாம் நபரின் கிளைம்படி தீர்ப்பாயம் அல்லது கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வந்தால் அதனை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். நோட்டீஸ், சம்மன் உட்பட உங்களுக்கு வரும் அனைத்தையும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.
3. கிளைம் படிவத்தை முழுவதுமாக நிரப்பி, அதனோடு டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்.சி புத்தகத்தை இணைத்து சரிபார்ப்பிற்கு அனுப்ப வேண்டும்.
பேராச்சி கண்ணன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்