சிறுவர் உலகத்துக்கு சித்திர வடிவம் கொடுத்தவர்...



70களுக்கு பின்பு பிறந்த எவரும் வாண்டுமாமாவை படிக்காமல் வளர்ந்திருக்க முடியாது. ‘சிஐடி’ சிங்காரம், ‘பலே’ பாலு, ‘சமத்து’ சாரு, குறும்புக்கார ஹரீஷ், ‘மேஜிக்’ மாலினி என வாண்டுமாமா உருவாக்கிய சித்திரங்கள் குழந்தைகளின் கற்பனை உலகத்தின் சாகச வாசலை விரியத் திறந்து வைத்தன. குழந்தைகளின் மனதுக்கு நெருக்கமான ஆகச்சிறந்த கதையாடலை வடிவமைத்த வாண்டுமாமா, ஜூன் 12ம் தேதி மறைந்து விட்டார்.

சித்திரக்கதை உத்தியை அவர் முதலில் பரிசீலித்துப் பார்த்தது ‘வானவில்’ இதழில். அது உருவாக்கித் தந்த வாசகப் பரப்பு மேலும் மேலும் அவரை அதில் உந்தியது. மின்னல், சிவாஜி, கிண்கிணி, கலைமணி, காதல், கல்கி என தான் பங்காற்றிய அத்தனை இதழ்களிலும் சிறுவர் கதைகளையும் சித்திரக் கதைகளையும் அறிவியல் செய்தி களையும் எழுதிக் குவித்தார். ‘வாண்டுமாமாவின் மகத்தான தொடர் ஆரம்பம்’ என்று விளம்பரம் செய்யும் அளவுக்கு அவரது எழுத்து வரவேற்கப்பட்டது. 28 முழுநீள சித்திரக்கதைகள், 197 சிறுவர் கதைகள் என 230க்கும் மேற்பட்ட புத்தகங்களை அறிவுலகத்துக்கு தந்திருக்கிறார் வாண்டுமாமா.

‘‘சிறுவர் இதழியலை வளர்த்தெடுத்ததில் அவரது பங்களிப்பு முக்கியமானது. எவ்வளவு கடினமான அறிவியல் செய்திகளையும் இனிப்பு பூசி எளிமையாக்கி குழந்தைகளுக்குக் கொடுத்தவர் அவர். வாண்டுமாமா, வி.கிருஷ்ணமூர்த்தி, வி.கே.எம், வி.கே.மூர்த்தி, கௌசிகன், வாண்டு என பல பெயர்களில் எழுதுவார். செல்லம், ரமணி, வினு, ராமு போன்ற ஓவியர்கள் வாண்டுமாமாவின் கதைகளுக்கு சித்திரங்களின் மூலம் உயிர் கொடுத்தார்கள்.

ன்னைப் பொறுத்தவரை சுஜாதாவைப் போலவே வாண்டுமாமாவும் ‘மாஸ்ட்ரோ’தான். சுஜாதா பெரியவர்களுக்கான அறிவியல் தளத்தில் புனைவுகளை எழுதியதைப் போல வாண்டுமாமா குழந்தைகளுக்கான அறிவியலையும், புதுவிதமான பாணியில் புனைவுகளையும் எழுதினார். தன் கடைசிக்காலம் வரை எழுதிக் குவித்த இந்த ஆளுமையை நாம் உரிய அளவில் அங்கீகரிக்கவில்லை’’ என்று வருந்துகிறார் ‘தமிழ் காமிக்ஸ் உலகம்’ இணையதளத்தின் நிறுவனர் கிங் விஸ்வா.

மூன்று தலைமுறைகளுக்காக எழுதிய வாண்டுமாமாவின் வாழ்க்கை இறுதிவரை வறுமை படிந்ததாகவே இருந்தது. புற்றுநோயின் வதையினூடாக இறுதிநாள் வரை எழுதிக் கொண்டே இருந்தார். எழுதுவது ஒன்றே அவருக்குப் போதுமானதாக இருந்தது.

வெ.நீலகண்டன்