சத்தியம்



‘‘ஏங்க... இந்த சுகர் மாத்திரை இருக்கா...’’ - மெடிக்கல் ஸ்டோரில் பிரிஸ்கிரிப்ஷனை நீட்டினார் சங்கரன். கடைக்காரர் அதை உற்றுப் பார்த்தார்... ‘‘ஒரு நிமிஷம் சார்... எங்ககிட்ட இந்த மாத்திரை ஸ்டாக் இல்ல. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. வேற கடையில வாங்கி வந்து தர்றேன்’’ என இறங்கிப் போனவர், அடுத்த கணமே மாத்திரையோடு ஓடோடி வந்தார்.

மொத்தமாய் பில் போட்ட பின் அந்தத் தொகையில் பத்து ரூபாயைக் கழித்தார் கடைக்காரர். ‘‘என்ன டிஸ்கவுன்ட் சார் இது?’’ - சங்கரன் வாய்விட்டுக் கேட்டார். ‘‘எங்கப்பாவுக்கும் சுகர் இருந்துச்சு. ஒழுங்கா மாத்திரை சாப்பிட்டு அதைக் கட்டுக்குள்ள வச்சுக்கத் தெரியாமதான் அவர் இறந்தே போனாரு.

‘சுகர் மாத்திரை யார் வாங்க வந்தாலும், நம்ம கமிஷன்ல பத்து பர்சன்ட்டை கழிச்சுட்டுக் கொடு’ன்னு அவர்தான் என்கிட்ட சொல்லிட்டுப் போனார். அதை சத்திய வாக்கா எடுத்துக்கிட்டு இப்பவும் வியாபாரம் பண்ணிட்டிருக்கேன். அதனாலதான் இங்க சுகர் மாத்திரை சீக்கிரம் காலியாகிடுது!’’ என்றார் கடைக்காரர். ‘அப்பாவின் சத்தியம் சென்டிமென்ட் மட்டுமல்ல... நல்ல வியாபார உத்தியாகவும் பயன்படுதே!’ - வியப்போடு அவரைப் பாராட்டி நகர்ந்தார் சங்கரன்.                    

லட்சுமி மணிவண்ணன்