மோட்டல்



சாலையோர மோட்டல்...
அங்கே ஆம்னி பஸ்ஸை ஓரம் கட்டி நிறுத்தினார் டிரைவர் கண்ணன்.
‘‘பஸ் பதினஞ்சு நிமிஷம் நிக்கும். டீ, காபி, டிபன் சாப்பிடுறவங்க சாப்பிடலாம்...’’

சென்னையிலிருந்து பசியுடன் பயணம் செய்த பயணிகளுக்கு வேறு வழியில்லை. சுகாதாரம், சுவை இல்லாத அந்த மோட்டல் உணவுகளை நான்கு மடங்கு விலை கொடுத்து உண்ணத் தொடங்கினர். டிரைவர் கண்ணனுக்கு மோட்டலில் ஏக மரியாதை. வழக்கமான கஸ்டமர் என்பதால் சல்யூட் வேறு! வண்டியை நிறுத்திய நன்றிக்காக அவருக்கு கேட்டதெல்லாம் கிடைத்தது... எல்லாமே இலவசமாக! மறுநாள்...

கண்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி. தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். கண்ட எண்ணெயில் செய்த உணவுகளை அதிகம் சாப்பிட்டதால் இதய வால்வுகளில் கொழுப்பு படிந்து மாரடைப்பு ஏற்பட்டிருந்ததாகச் சொன்னார்கள். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அழைத்து வருவதற்குள் மூன்று லட்ச ரூபாய் செலவாகியிருந்தது. இரண்டு மாத ஓய்வுக்கு பின் டியூட்டியில் சேர்ந்தார் கண்ணன். கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து வண்டியை எடுக்கும்போதே பயணிகளைப் பார்த்துக் கூவினார் கண்ணன், ‘‘சாப்பிட ஏதாவது வேணுமுன்னா இங்கயே நல்ல ஹோட்டலா பார்த்து வாங்கிக்கங்க. சாலையோர மோட்டல் எங்கேயும் பஸ் கண்டிப்பா நிற்காது!’’

வி.சகிதாமுருகன்