சிம்பு நயன்தாரா திரும்பிப் பார்க்கிற வாழ்க்கை!



பாண்டிராஜ் பரவசம்

‘‘காதலை நிறைய பார்த்தாச்சு. ஆனாலும், இன்னும் அழகிய வண்ணங்கள் காதலில் அப்படியே கிடக்கு. நான் ஓவியனா இருந்திருந்தால் தூரிகையை எடுத்திருப்பேன். இசைக்கலைஞனாக இருந்திருந்தால் வாசிச்சுக் காட்டியிருப்பேன். சினிமாக்காரனாக இருப்பதால் படம் பிடிச்சுக் காட்டுறேன். அதுதான் ‘இது நம்ம ஆளு’. ஒரு டைரக்டர் மக்களை விட்டு என்றைக்கும் விலகக்கூடாதுங்க. நான் அப்படித்தான் இருக்கேன்’’ - நிஜம் பேசுகிறார் டைரக்டர் பாண்டிராஜ். பின்னி எடுக்கிற கிளாஸ் - மாஸ் டைரக்டர்.

‘‘பிரிஞ்சவங்களை சேர்த்து படம் எடுத்து எங்களைத் தூண்டுறீங்க..?’’‘‘படத்துல ஒரு இடம்... சூரிகிட்டே நயன் கேட்பாங்க, ‘இந்த சிம்பு எப்படி?’ன்னு. சூரி சொல்வார். ‘கொஞ்சம் சென்சிட்டிவ்... கொஞ்சம் பாஸிட்டிவ். அவன் நல்லா இருந்தா நாலு பேர் நல்லா இருப்பாங்க. பிடிச்சவங்க மூஞ்சியில சிரிப்பை பார்க்கணும்னா அவன் என்ன வேணாலும் பண்ணுவான். எதையும் தலையில் ஏத்திக்க மாட்டான். ஒரே வரியில சொல்லணும்னா ஒரு அல்பத்தனம், சின்னத்தனம் எட்டிப் பார்க்காத மனுஷன்னா இவன்தான்’னு சொல்வார்.

மறுபடியும், ‘அவர் மைனஸ் சொல்லுங்க’ன்னு கேட்பாங்க... ‘கான்ட்ரவர்ஸி மன்னன், தண்ணி அடிச்சா அலப்பறை கொடுப்பான் பாருங்க... சொன்ன நேரத்திற்கு வர மாட்டான்; அவன் நினைச்ச நேரத்துக்குத்தான் வருவான். இப்பல்லாம் மாறிட்டேன்னு சொல்றான். போகப் போகத்தான் தெரியும். நமக்கெல்லாம் அடிக்கடி கோபம் வரும்னா, அதுமாதிரி அவனுக்கு அடிக்கடி காதல் வரும்!’னு சொல்வார்.

‘அவரை இம்பரஸ் பண்றது எப்படி?’ன்னு அடுத்த கேள்வி வரும். ‘அவனை இம்பரஸ் பண்றதுங்கிற கதையே வேண்டாம். காதல்ங்கிற ஒரு விதை போதும். அவுட்டாகிடுவான்’னு சூரி சொல்வார். இப்படித்தான் கதையே போகும். இவங்க இரண்டு பேரோட காதல்தாங்க கதை!’’ ‘‘ரெண்டு பேரும் திரும்ப சேர்ந்து வந்த ஃபீல் எப்படியிருக்கு?’’

“டிரெய்லரை காட்டினால் சூர்யா, ஆர்யா, சந்தானம், சசிகுமார், சுசீந்திரன்னு எல்லாரும் பாராட்டித் தள்ளிட்டாங்க. நயனுக்கு வாட்ஸ் அப்ல டிரெய்லரை அனுப்பினால், ‘எனக்கு ஒரு நல்ல படம் கொடுத்திட்டீங்க சார்’னு உருகினாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் தனித்தனியா 20 நிமிஷம்தான் கதை சொல்லியிருப்பேன். அந்த இருபது நிமிஷமும் அவங்க இரண்டு பேரும் சிரிச்சுக்கிட்டேதான் இருந்தாங்க.

இதில் பல இடங்களில் அவங்க வாழ்க்கையை திரும்பப் பார்த்தாங்கன்னு நினைக்கிறேன். அவங்க லைஃப் இதில் இருக்கும்போது நாம் நடிப்புக்கு கஷ்டப்பட வேண்டியதில்லை. அதுதான் நடந்தது. நிறைய தடவை மானிட்டர் போகும்போதே ஷாட் ஓகே பண்ணியிருக்கேன். ‘ஓகே... ஷாட்டுக்கு போகலாமா’ன்னு கேட்டால், ‘எடுத்தாச்சு மைலா’னு சொல்லுவேன். கேமராமேன் பாலசுப்பிரமணி யெம் கேமராவை ‘ஆன்’ல வச்சுக்கிட்டே இருப்பார். நடுவே எங்கே சிரிச்சாலும், அவங்க விளையாடினாலும் அது படமாகிட்டே இருக்கும். நயன் சொந்தக்காரங்ககிட்ட போன்ல பேசுகிறதைக் கூட அந்த வெள்ளைச் சிரிப்புக்காக எடுத்து வைப்போம். நிறைய பேர் என்னை ‘அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிடுவாங்களா?’ன்னு கேட்டுட்டே இருக்காங்க. அது அவங்க சொந்த விஷயம். எனக்கு அவங்க மைலா-சிவா!’’

‘‘சூரி முதல் தடவையா சிம்பு கூட சேர்ந்திருக்காரு...’’‘‘சூரி நமக்கு செட்டாவாரா?ன்னு சிம்புவுக்கு சந்தேகம் இருந்தது. ‘சந்தானத்தை நானும், என்னை சந்தானமும் நல்லா புரிஞ்சிருக்கோமே’ன்னு சொன்னார். முதல் நாளிலேயே அந்த டவுட் விலகிடுச்சு. தூக்கிக் கட்டின வேட்டியும், பெரிய மீசையும், புழுதி அப்பின காலுமா இதில் சூரியை பார்க்க முடியாது. ஐ.டி பையன். இரண்டு பேருக்கும் ஒரே பேச்சு, நக்கல், கிண்டல்தான். இனிமே சூரி ஆல்ரவுண்டர். ஒரு ரகசியத்தை உங்களுக்கு இப்பச் சொல்றேன். இதில் சந்தானமும் நடிக்கிறார். சூரியும், சந்தானமும் சேர்ந்தே நடிக்கிறாங்க. ‘அடி பின்னிட்டீங்க’ன்னு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி புகழ்ந்துக்குறாங்க. சூரியின் நண்பராகத்தான் சந்தானமே என்ட்ரி கொடுக்கிறார். படத்தில் ஒரு நல்ல ட்விஸ்ட் கேரக்டர் அது. கண்டிப்பாக சந்தானம் வர்ற ஏரியா, அவர் ஸ்டைல்ல எகிறும்!’’

‘‘மியூசிக் குறளரசன்... எப்படி இருக்கு?’’ ‘‘ஒரு பாட்டு போட்டுக் கொடுத்திட்டார். ஒரு சோறு பதம்னு சொல்வாங்களே... அந்த வகையில் இருக்கு. ‘காத்தாக வந்தாளே... மனசுக்குள் நின்னாளே’ன்னு மெலடியில் உருகுது. ‘இந்த வாரத்தில் மீதிப் பாடல்களையும் கொடுத்திடுறேன்’னு சொன்னார். மெதுவா வரட்டும்... முதல் அடியை பார்த்து வைக்கிறதுதானே சிறப்பு!’’ ‘‘ ‘இது நம்ம ஆளு’ பாக்யராஜ் டைட்டில் ஆச்சே... எப்படிக் கிடைச்சது?’’

‘‘இதுதான் நல்லாயிருக்குன்னு எல்லாரும் சொன்னாங்க. பாக்யராஜ் சாரை பார்க்கப் போனோம். ‘டைட்டில் வேணும்’னு தயங்கித் தயங்கிச் சொன்னேன். ஏன், எதுக்கு, என்ன கதைன்னு ஒரு வார்த்தை கேக்கல. ‘எடுத்துக்க’ன்னு சொல்லிட்டார். ஏன்னா, நான் ‘பாக்யா’வில் ரெண்டரை வருஷம் இருந்திருக்கேன். நான் அவர்கிட்டே டைட்டில் கேட்டு வாங்கினதெல்லாம் ஏதோ சாமி புண்ணியம்ங்க!’’

‘‘சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியா வர்றதில்லை. உங்களுக்கும் அவருக்கும் பிரச்னைன்னு செய்தி புறப்பட்டதே..?’’‘‘சிம்பு கூட படம் பண்ணப்போறேன்னு சொன்னதுமே எல்லாரும் பயமுறுத்தினாங்க. எனக்கு சிம்பு மேல நம்பிக்கை. ‘இது சிம்பு நடிச்சா நல்லாயிருக்கும்டா. நீ பாரேன்... இந்தப் படம் சிம்புவுக்குப் பெரிய ப்ரேக்கா இருக்கும்’னு என் நண்பன்கிட்ட சொன்னேன். ‘என்னடா, ரிலீஸ்க்கு அப்புறம்தான் சிம்புவிற்கு பெரிய ப்ரேக்னு சொன்னே... சிம்பு ரிலீஸ்க்கு முன்னாடியே  உனக்கு பெரிய ப்ரேக்கா கொடுத்துட்டாரே’ன்னு அவனே பின்னாடி நக்கல் அடிச்சான். என்னோட மத்த படங்களை வச்சுப் பேசும்போது இது லேட்தான்.

இந்தப் படத்தில் சிம்புவைத் தவிர யாரையும் நினைச்சுப் பார்க்க முடியலை. ஸ்பாட்டுக்கு லேட்டாக வந்தாலும் ட்ரீட் நல்லாயிருக்கு. ஒரு மனுஷன் தொடர்ந்து ஹிட் கொடுக்கலை, படம் கொடுத்து இரண்டு வருஷம் ஆச்சு. ஆனா, இன்னிக்கும் அவருக்கு ரசிகர்கள் குறையல. படம் எப்ப வரும்னு அவ்வளவு தீவிரமா இருக்காங்க. அவங்களை சிம்பு இனிமேல் ஏமாத்தக் கூடாது. ஸ்பாட்டில் அழகான எக்ஸ்பிரஷன்ஸ், ஒன் டேக் ஆர்டிஸ்ட்... இவ்வளவு இருந்து நீங்க இன்னும் சூப்பரா வரணும்ஜீ!’’

- நா.கதிர்வேலன்