வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
* விடுமுறை நாளில்
வந்து தொலைந்திருக்கலாம்
அழகிய வானவில்
* என் வீட்டு மாமரத்திடம்
கற்றுக்கொள்ள வேண்டும்
அணில்களை நட்பாக்கும் கலையை
* இப்போதெல்லாம் வழியனுப்ப
வரும் உறவுகள் அதிகமில்லை
அலுத்துக்கொண்ட தண்டவாளங்கள்
* தினசரி எழும்போது
அழகாய் மடித்துவைக்க மறக்கிறேன்
சிதறிய கனவுகளை
* ஒருபோதும்
பயணச்சீட்டு வாங்கியதில்லை
உடன் வரும் நிலவுக்கு
* நெருக்கடியான பேருந்தில்
நிறைந்திருக்கின்றன
இருக்கைக்கான வேண்டுதல்கள்!
* எதிர்காலத்திற்காக சீட்டெடுத்துக்
கொடுக்கும் கிளியின் மனதில்
கூண்டில் சிக்காத கடந்த கால நினைவு!
* விளக்கணைக்க வழி தேடி
இரவெல்லாம் தூக்கமின்றி திரியும்
தொட்டி மீன்கள்!