like and share



ஈவென்ட் கார்னர்

ஜூன் 21ம் தேதி உலக இசை நாள். இதைக் கொண்டாட, ஆறு நாட்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் கே.மியூசிக் கன்சர்வேட்டரி, ராப்ஸோடி, இந்தோ கொரியன் சென்டர், ஜெர்மன் கல்ச்சுரல் சென்டர், அல்லயன்ஸ் பிரான்சேஸ் உள்ளிட்டோர் இணைந்து நடத்திய கோலா கலம்தான் ‘ஃபெத்தல்லா மியூசிக்’. அமெச்சூர் சிங்கர்களோடு பிரதீபா சந்த்வான், அனில் ஸ்ரீனிவாசன், அலெக்ஷாண்ட்ரா மினாஸோ, ஷாரிக் ஹாசன் போன்ற பாப்புலர் ராக் ஸ்டார்களை இணைத்து பாட வைத்தது இதம். இந்த ஆறு நாளும் மேற்கத்திய இசை மற்றும் இசைக் கருவிகளில் சென்னை பள்ளி மாணவர்களுக்கு ஒர்க்ஷாப்பும் நடந்தது, லவ்லி சிக்ஸர்!

ரசனை சினிமா
Like Father, Like Son
மொழி: ஜப்பான்
இயக்குநர்: ஹீரோ காஸூ கொரிதா

போன வருஷம் ஜப்பான் சார்பாக உலக சினிமாவை பெருமைப்படுத்திய படம். கெய்தா என்ற ஆறு வயது சிறுவன்... திடீரென்று அவன் பிறந்த மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் மாற்றப்பட்டுவிட்டன என செய்தி வருகிறது. அவனது பெற்றோரை நிலை குலையச் செய்யும் இந்த செய்திக்குப் பிறகே படத்தின் உன்னத கணங்கள் ஆரம்பமாகின்றன. நெஞ்சைப் பிழிகிற கவிதை, இனிப்பும் கசப்பும் கலந்த மனித உணர்வுகளை மலர்த்தும் சினிமா. சிறுவர்களின் மனநிலை சித்தரிப்பு படத்திலேயே உயரிய அம்சம். இதில் அறுக்கப்படாத மறைந்து கிடக்கும் வைரங்கள் போல நிறைய ஆச்சரியங்கள் உண்டு. பக்குவப்பட்ட மனதை அடைய இந்தப் படம் சற்றே உதவும். அடுத்த வருஷத்திலேயே அரைகுறை தழுவலில் இந்தப் படம் தமிழில் வரக்கூடும்!

ரீடிங் டேபிள்

கோவிந்தன் ரோடில் நானும் மனைவியும் வண்டியில் வந்து கொண்டிருந்தோம். ஒரு கடையின் முன் கூட்டம் முண்டி அடித்தபடி நின்று கொண்டிருந்தது. அது ஒரு ‘டாஸ்மாக் கடை’; எல்லோரும் குடிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘இந்தப் பழக்கத்தை எல்லோராலும் ஏன் விட முடியவில்லை?’ என்று யோசித்தபடி கடந்து சென்றேன். ஒரு விருந்து என்றால், ஒரு கூட்டம் என்றால், நான்கைந்து பேர்கள் சேர்கிறார்கள் என்றால், புகையும் மதுவும் இல்லாமல் ஒன்றும் நடப்பதில்லை.

என் அலுவலக நண்பர்கள் பலரும் குடிப்பார்கள். புகை பிடிப்பார்கள். ஒருமுறை ஒரு அலுவலக நண்பனுடன் குற்றாலம் சென்றேன். அவன் அதிக போதையில் இருந்தான். அலுவலகத்தில் ஒரு பெண்ணை அதிகமாக நேசிப்பதாகவும் அவளையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னான். குடியில் அவன் கண் கலங்கிப் பேசினான். அந்தப் பெண்ணுடன் அவனுக்குத் திருமணம் நடந்தபோது அவன் சொன்ன வார்த்தை இன்னும் ஞாபகத்திலிருந்து நீங்கவில்லை. ‘‘என் தலையில் கட்டிட்டுப் போயிட்டாங்கப்பா’’ என்றான். அவன் குடியில் உளறியது திரும்பவும் ஞாபகத்தில் வந்தது.

 ‘அம்ருதா’ இதழில் அழகியசிங்கர்

கிளிக்கானந்தா!
சென்னை பெரம்பூர் அருகே இப்படி ஒரு ஹோட்டல்!
(பேரப் படிக்கறதுக்குள்ள ஜீரணமாகிடாது?)

‘டெக்’ஷனரி

‘ஆன்லைனில் ஜஸ்ட் புத்தகம் விற்றுக் கொண்டிருந்தவர்களா இவர்கள்’ என உலகம் அமேசான் டாட் காமைப் பார்த்து வியக்கும் சீசன் இது. இந்த வார டெக் பரபரப்பு, அமேசான் நிறுவனத்தின் ஃபயர் ஃபோன்தான். ஆப்பிள், சாம்சங் என ஜாம்பவான்களை எல்லாம் ஒரே ஜம்ப்பில் தாண்டி, 2 ஜி.பி ராம் மற்றும் 2.2 ஜிகாஹெட்ஸ் ப்ராசஸரோடு ஜூலை 25ம் தேதி அமெரிக்காவில் விற்பனைக்கு வர இருக்கிறது இந்த ஃபயர் போன். 3டி, பக்கத்தில் உள்ள பொருட்களை உணரும் திறன் என இதர கிம்மிக்குகளும் உண்டு.

அமேசானுக்கென்று தனி வாடிக்கையாளர்கள் இருப்பதால் இப்போதே இதற்கு ஆர்டர்களும் குவிகின்றன. கிஜி-ஜி கான்டிராக்டோடு அங்கே கிட்டத்தட்ட 12 ஆயிரம் ரூபாய்தான் இதன் விலை. இந்தியாவுக்கு எப்போது வருமோ தெரியவில்லை!

வெல்டன்

13 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, இளம் வயதில் இந்த சாதனை புரிந்த சிறுமி என பெருமை பெற்றிருக்கிறார் பூர்ணா மாலவத். ஏழை பழங்குடி இனத்தைச் சேர்ந்த பூர்ணா, மிகக் கடினமான திபெத் பாதை வழியாகப் பயணித்து இந்த சாதனையை புரிந்தார். (வழக்கமான நேபாள வழியில் 18 வயதுக்குக் கீழே இருப்பவர்களை அனுமதிப்பதில்லை!) இது அவருக்குக் கடினமில்லையாம். ‘‘வறுமையை சமாளித்துப் படித்து வாழ்க்கையில் முன்னேறுவது எவரெஸ்டை எட்டுவதைவிட கடினம்’’ என்கிறார்.

‘கிபீ’டடா!


கிச்சன் சாதனங்களை ‘பெண்களுக்கான மரியாதை’ எனக் கொண்டாடிய ஹேவல்ஸ் விளம்பரங்களை உங்களுக்கே தெரியும். ‘சட்னி... பத்னி’, ‘இஸ்திரி... ஸ்திரி’ என அதில் கணவர்களுக்கு மனைவிகள் கொடுக்கும் நோஸ் கட்... செம ஹிட். அவற்றின் தொடர்ச்சியாக, ஒரு சின்ன யூ டியூப் வீடியோ பாடலையும் உருவாக்கியிருக்கிறது ஹேவல்ஸ் நிறுவனம்.

இசை ஆல்பத்துக்கு ஐடியா கொடுக்க வரும் தங்கள் தோழியைப் பார்த்து, ‘‘நீ கிச்சனில் சமையலை மட்டும் பார்’’ என மட்டம் தட்டுகிறார்கள் இளைஞர்கள். அவளோ, கிச்சன் பொருட்களின் சத்தங்களையே இசையாக்கி பாப் பாடலும் பாடி, அவர்களை அசத்துகிறாள். நிஜமாகவே வீட்டு உபயோகப் பொருட்களை இசைக் கருவிகளாக்கியிருக்கும் இந்தப் பாடல், ‘பம்பாய்’ பட ‘ஹம்மா ஹம்மா’ பாடலின் ரீமிக்ஸ். இளம் பாடகியும் பாடலாசிரியருமான வசுதா ஷர்மாவின் இந்தப் படைப்பு, 1,40,603 ஹிட்டுகளை அள்ளியிருக்கிறது!
பார்க்க: www.youtube.com/watch?v=K_d6rtrEqqs

கமென்ட்

விமர்சகர்கள் என்பவர்கள் கேர்ள் ஃபிரண்டுகள் போல. உங்களைப் பற்றி நினைப்பதை அவர்கள் எப்போதும் நிறுத்தவே மாட்டார்கள்!
 கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா