‘‘ஒரு பக்கம் புரட்சித் தலைவராக போற்றப்பட்ட எம்.ஜிஆர், இன்னொரு பக்கம் காதல் மன்னனாக நேசிக்கப்பட்ட அப்பா ஜெமினி கணேசன். இவங்க ஸ்கூல் ஸ்டூடன்ட்ஸ் மாதிரி ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக்கிட்டு குஷி மூடில் இருக்கும் இந்தப் படம் ரொம்ப ஸ்பெஷல்’’ என அதுபற்றி பகிர்ந்து கொள்கிறார் ஜெமினி கணேசனின் மகள், டாக்டர் கமலா செல்வராஜ்.
‘‘தேவர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ‘முகராசி’ படத்தில் அப்பா நடித்தார். அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த படமாக இது இருக்கலாம். எம்.ஜி.ஆர், சிவாஜியில் தொடங்கி தனக்கு பிறகு ஃபீல்டுக்கு வந்த நடிகர்கள்வரை எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகக்கூடியவர் அப்பா. சேட்டை, கிண்டல், கும்மாளம் என்று அவர் இருக்கும் இடமே ஜாலி மூடில் களை கட்டும். அப்படியொரு தருணத்தில்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
என் அக்கா திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக ராமாவரம் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு நாங்கள் குடும்பத்தோடு போயிருந்தோம். பொதுவா அங்கு போறவங்க யாரும் சாப்பிடாமல் திரும்ப மாட்டார்கள். எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல் ரொம்பவே ஸ்பெஷல். ஆனால் அவர் வீட்டில் யாருக்குமே கிடைக்காத ஒரு வித்தியாசமான விருந்து எங்களுக்குக் கிடைத்து.
இது சாப்பாட்டு விருந்தல்ல; நடிப்பு விருந்து.ராமாவரம் வீட்டின் ஒரு அறையில் எம்.ஜி ஆரின் கட் அவுட் ஒன்று இருந்தது. பொது இடங்களில் கட் அவுட் இருப்பது சகஜம். ஆனால் வீட்டில் இருக்கே என்ற ஆவலில் ‘இதை ஏன் இங்க வச்சிருக்கீங்க?’ என்று கேட்டோம். ‘எம்.ஆர்.ராதா சுட்டபோது நான் இந்த இடத்தில்தான் இருந்தேன்.
அதன் நினைவாகத்தான் இந்த கட் அவுட்டை வச்சிருக்கேன்’ என்றவர், எங்களை உட்கார வைத்து அந்த சம்பவத்தை நடித்துக் காட்டினார். அது ரொம்ப சுவாரஸ்யமான நிகழ்வு. பிறகு என் தங்கை ஜிஜி மெடிக்கல் சீட் விஷயமாக எம்.ஜி.ஆரை சந்தித்தோம். அந்த சமயம் ஜிஜி ‘நினைவெல்லாம் நித்யா’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.
அவளுக்கு சினிமா வேண்டாம் மருத்துவம் படிக்கட்டும் என்ற ஆசை எங்களுக்கு இருந்தது. அப்பா விரும்பிக் கேட்டார் என்பதற்காக உடனே மெடிக்கல் சீட் கிடைக்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர். அவர் எங்கள் குடும்பத்தின்மீது காட்டிய அன்பு, என்றும் எங்கள் மனதில் பசுமையாகப் பதிந்திருக்கும்!’’
- அமலன்
படம் உதவி: ஞானம்