ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் டாக்டர் வேண்டும்!



மன்றாடும் மது குடிப்போர் இயக்கம்

‘‘ஹலோ பிரபா ஒயின்ஸா... விடிய விடிய குடிக்கிறேன்... போதையே இல்ல... கடையில டூப்ளிகேட் சரக்கு ஓட்டுறீயா நீ?’’ என இனி எல்லோரும் லந்து கொடுக்கலாம். பாருக்கு வெளியே பெட்டிக்கடை வைத்திருப்பவர்களுக்கெல்லாம் ஒரு சங்கம் இருக்கும்போது, காசு கொடுத்து குடிக்கும் குடிகாரர்களுக்கு ஒரு சங்கம் வேண்டாமா? என ஆதங்கத்தோடு களமிறங்கி விட்டது ‘மதுகுடிப்போர் விழிப்புணர்வு புரட்சி இயக்கம்’. ‘டாஸ்மாக் நிர்வாகமே’ எனத் துவங்கி, பார் வாசல்களில் பொளந்து கட்டுகின்றன இவர்களின் போஸ்டர்கள்!

‘‘சும்மா இல்ல சார்... காசு கொடுத்துக் குடிக்கிறோம். உசுரைப் பணயம் வச்சி கவர்மென்ட்டுக்கு வருமானம் தர்றோம். தியாகிங்க சார்... நாங்க கேக்கக் கூடாதா உரிமைகளை?’’ - எடுத்ததுமே கொத்து பரோட்டாவாகக் குத்துகிறார் ‘இயக்க’த் தலைவர் செல்லப்பாண்டியன். ‘‘உங்களுக்குத் தெரியுமா? உடைஞ்சிடுமோங்கற பயத்துல சரக்கு பாட்டில்களுக்கே வருஷத்துக்கு ஏழரை கோடி ரூபாய் இன்சூரன்ஸ் கட்டுறாங்க. அதைக் குடிக்கிற எங்களுக்கு என்ன பாதுகாப்பு? தமிழ்நாட்டுல ஒரு நாளைக்கு குடியால இறக்குறவங்க மட்டும் அறுபத்தி ஏழு பேர். நாங்க கள்ள மார்க்கெட்ல வாங்கலை... கவர்மென்ட் விக்குது, குடிமகன் குடிக்கிறான். அவன் செத்தா யார் பொறுப்பு? எங்களுக்கும் இன்சூரன்ஸ் வேணும் சார். குடியால பலியானவங்க மனைவிக்கு மாசம் ஐயாயிரம் உதவித் தொகையும் வழங்கணும்.

குடியால குடல் வெந்து கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல தினமும் குவியிற நோயாளிகள் மட்டும் சுமார் முந்நூறு பேர். அரசு மருத்துவ மனைகள்ல குடி நோயாளிகளுக்கு சரியான மரியாதையும் கவனிப்பும் இல்ல. குடி நோயாளிகளுக்குன்னு தனியா மருத்துவமனை வேணும். குடிக்கறதுக்கு கடைகளையும் திறந்து வச்சிக்கிட்டு, வண்டியோட்டுற குடிகாரர்களை ‘வாயை ஊது, ஸ்டெடியா பேசு’ன்னு கேட்கிறது அநியாயம்ங்க. பேசாம குடிகாரர்களின் வண்டிக்குன்னு தனி கலர்ல நம்பர் ப்ளேட் கொடுத்துடுங்க. அதைப் பார்த்தே பப்ளிக் கொஞ்சம் கவனமா போவாங்க இல்ல? ஏன், ஆக்ஸிடன்ட் ஆகுதுங்கறேன்?

அப்புறம் 500 ரூபாய்க்கு மேல வியாபாரம் செய்யிற யாருமே வருமான வரிச் சட்டப்படி, பில் கொடுக்கணும். டாஸ்மாக்ல தர்றாங்களா? ‘முதல்வன்’ படத்துல மாதிரி எல்லாரும் அதைக் கேட்டு வாங்கணும். ‘மிச்ச சில்லரை இல்லை’ன்னு சொல்லியே அஞ்சஞ்சு ரூபாயா அஞ்சு லட்சம் பேர்கிட்ட அடிக்கிறாங்க. இப்படி ரேஷன் கடையில பண்ண முடியுமா? பஸ்ல, ரயில்ல... வேற எந்த அரசு நிறுவனத்துலயாவது மிச்சக் காசு இல்லைன்னு விரட்ட முடியுமா? குடிக்கிறவன் மட்டும் என்ன இளிச்சவாயனா? அவன் வாழ்க்கையைத் தொலைக்கிறான் சார் இதுல. எரியிற வீட்டுல பிடுங்குன வரைக்கும் லாபமா?’’ எனக் கொதித்தெழுகிற இவரிடம், பல ‘சமூகப் பிரச்னை’களுக்குக் கூடத் தீர்வு இருக்கிறது.

‘‘ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டரை உருவாக்க அரசாங்கம் எவ்வளவோ செலவழிக்குது. அதனாலதான் ‘கிராமத்துக்குப் போ... கிராமத்துக்குப் போ...’ன்னு கவர்மென்ட் சொல்லுது. ‘போக மாட்டேன்’னு அவங்க ஓடுறாங்க. எதுக்கு கிராமம்? சிட்டியில இருக்குற டாஸ்மாக்குக்கு போகச் சொல்லுங்க. ஒவ்வொரு டாஸ்மாக் பார்லயும் ஒரு டாக்டரை நியமியுங்க. சுகர், பி.பீ இருக்குறவங்க கூட குடிக்க வர்றாங்க. அவங்களை செக் பண்ணி என்ன சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிடலாம்னு அவர் பரிந்துரைக்கட்டும்! டாஸ்மாக்ல மயங்கி விழுறவன், இருக்கானா... செத்தானா... என்று யாரும் பாக்குறதில்லை. பெருக்குறவன்தான் தொடப்பக்கட்டையால தட்டி எழுப்புவான். இந்த சோகத்தை ‘டாக்டர் திட்டம்’ மாத்துமில்ல!

அரசு சரக்கு விக்கலைன்னா கள்ளச் சாராயம் ஆறா ஓடும்னு கவர்மென்ட் சொல்லுது. ஆனா, அதுக்கும் டாஸ்மாக் சரக்குக்கும் பெரிய வித்தியாசம் இல்ல. அவ்வளவும் கெமிக்கல். சர்க்கரை ஆலைகள்ல இருந்து கழிவா வெளியேத்துற ‘மொலாசஸ்’தான் எல்லா மதுபானங்களுக்கும் அடிப்படை. அதுல தண்ணியையும், சுவையூட்டிகளையும், எசென்ஸையும் கலந்து அதிக லாபம் பார்க்குறது அரசுதான். அதை நாங்க குடிக்க மாட்டோம்னு சொல்ல வரலை.

ஆனா பாருங்க... எல்லாத்துக்கும் அடித்தளமான கரும்பு விவசாயிகளுக்கு அரசு 900 கோடி ரூபாயை நிலுவைத் தொகையா வச்சிருக்கு. டாஸ்மாக் வருமானத்துல கிள்ளிக் கொடுத்தாலே இந்தப் பிரச்னை தீர்ந்துடுமே!

அப்புறம், 2006ல போடப்பட்ட உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை உடனே அமல்படுத்தணும். ஏன்னா இந்தச் சட்டத்துல தான் மது வகைகளை உணவோடு சேர்த்திருக்கிறாங்க. பீர் பாட்டில்ல புழு மிதந்தா கூட இப்ப ஒண்ணும் பண்ண முடியல. சரக்கு மட்டும் உணவா கருதப்பட்டா, கன்ஸ்யூமர் கோர்ட் போகலாம். எந்தெந்த சரக்கு எப்படி எப்படி தயாரிக்கப்படணும்... அது எவ்வளவு நாளைக்கு புளிக்க வைக்கப்படணும்னெல்லாம் கணக்கு இருக்கு. அதெல்லாம் இல்லாத இவங்க கெமிக்கல் சரக்கை ஒரு கை பார்க்கும் அந்தச் சட்டம்!’’ என ஆசுவாசம் கொள்கிறார் செல்லப்பாண்டியன்.தல கிர்ர்ர்ருன்னு வருதே!

குறை தீர்க்கும் எண்!

‘புட்டி’சன்களின் குறைகளைத் தீர்க்க 18004252015 என்ற டோல் ஃப்ரீ எண்ணைக் கொடுத்திருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம். அவசர போலீஸ் எண்ணுக்கே ‘வெடிகுண்டு வச்சிருக்கேன்’ எனப் பொடிப் பசங்களிடமிருந்து போலி அழைப்புகள் வரும்போது, டாஸ்மாக் புகார் எண் மாத்திரம் எம்மாத்திரம்! சென்னை எக்மோரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் விசாரித்தோம்...

‘‘எம்.ஆர்.பி தாண்டி அதிக விலைக்கு விக்கிறாங்க, கடை மூடின பிறகு பார்ல பிளாக் ஓட்டுறாங்க, கடையில பீர் கூலிங்கா இல்லைன்னு சொல்லிட்டு பார்ல கொடுக்குறாங்க, சைட் டிஷ் ரொம்ப விலை, வாட்டர் கிளாஸ் ஆறு ரூபா, தண்ணீர் பாக்கெட் விலையைக் கேட்டா கண்ணீர் வருது, பார்ல வாந்தி எடுத்துட்டாங்க, கேட்ட சரக்கு இல்லைங்கிறாங்க, லாரியில லோடு வந்து இறங்குறப்ப சரக்கு தரமாட்டேங்கிறாங்க... இதெல்லாம்தான் சார் அதிகமா புகாரா வருது. அந்தந்த மண்டலத்திலுள்ள அதிகாரிகள் இதைத் தீர்க்கிறாங்க’’ என்கிறார்கள் அவர்கள்.

 டி.ரஞ்சித்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்