கடைசி பக்கம்



மகள் படிக்கும் பள்ளியிலிருந்து அவருக்கு அழைப்பு வந்திருந்தது. கடந்த வாரம்தான் எல்.கே.ஜி சேர்த்திருந்தார். ஃபீஸ் கட்டி முடித்து, புத்தகங்கள், யூனிஃபார்ம், ஷூ எல்லாம் வாங்கியாயிற்று. வேறு எதற்கு? ‘‘அவசர வேலைகள் எதுவுமில்லை என்றால் இன்று வரமுடியுமா?’’ என்று கனிவாகத்தான் கேட்டார்கள். குழப்பத்தோடு பள்ளி முதல்வரை சந்தித்தார். ‘‘உங்க மகள் ரொம்ப புத்திசாலியா இருக்கா. ஆனால் பாத்ரூம் சுவரில் கிறுக்கி வச்சிருக்கா. இப்போதான் பெயின்ட் பண்ணி முடிச்சோம்.

அழிக்கவே முடியாதபடி கிறுக்கினதால, மேல பெயின்ட் பண்ண வேண்டியிருக்கும், பரவாயில்லை! ஆனா இது ஒழுங்கீனமான பழக்கம். பெரிய பசங்க இப்படிச் செய்தா, பள்ளியை விட்டே நீக்கிடுவோம். குழந்தைங்கறதால எச்சரிச்சு விடறோம்’’ என்றார் முதல்வர்.‘‘வீட்ல இப்படியெல்லாம் செய்ததில்லை. நிஜமா அவதான் கிறுக்கினாளா?’’ எனக் கேட்டார் அவர்.
‘‘ஆமாம். அவளும் ஒத்துக்கிட்டா’’ என பதில் வந்தது.

பள்ளி நேரம் முடிவடைந்ததால், மகளையும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார் அவர். ‘அடுத்தவர் பொருட்களை எப்படி மதிக்க வேண்டும்’ என வரும் வழியெல்லாம் பாடம் எடுத்தவர், ‘‘அது எப்படி நீதான் கிறுக்கினே என்று கண்டுபிடிச்சாங்க?’’ என்று கேட்டார்.
‘‘அதுதான்பா எனக்குத் தெரியலை’’ என்றாள் மகள் அப்பாவியாக!

‘‘வீட்ல இப்படி நீ செய்ததில்லையே? வேற யாராவது கிறுக்கிட்டு உன்னை மாட்டி விட்டுட்டாங்களா?’’ ‘‘இல்லப்பா, நான்தான் கிறுக்கினேன். ஆனா எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு தெரியலை!’’
‘‘அப்படி என்னதான் கிறுக்கினே?’’

மகள் நிதானமாகச் சொன்னாள்...
‘‘என் பேரை எழுதினேன்!’’
குழந்தைகளின் உலகம்
ஆச்சரியங்கள் நிறைந்தது.   

நிதர்ஸனா