‘ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் விண்வெளிக்குப் போகப் போறாராம்’, ‘ஜேம்ஸ் கேமரூன் நீர்மூழ்கிக் கப்பல் வாங்கியிருக்காராம்’ - இதுவரை ஹாலிவுட் இயக்குனர்களை மட்டுமே இப்படி சாகசப் பிரியர்களாகப் பார்த்து நமக்குப் பழக்கம். இப்போது இந்த வரிசையில் கர்ச்சீப் போட்டு இடம் பிடித்திருக்கிறார் மலையாள இயக்குனர் லால் ஜோஸ். இவர் இயக்கிய 15 படங்கள் அங்கே சூப்பர் டூப்பர் ஹிட்... ‘இன்னும் படம் பண்ணுங்க’ என மல்லுவுட்டே இவருக்கு மனு போட்டுக் காத்திருக்க, ‘நான் காரில் உலகை சுற்றி வரப் போகிறேன்’ எனக் கிளம்பிவிட்டார் மனிதர்!
‘‘எனக்கு இது நெடுநாள் ஆசை. யாரிடமாவது சொன்னால், ‘எதுக்கு இந்த வேண்டாத வேலை? ஒழுங்காக சினிமா எடுக்கும் வழியைப் பார்’ என்பார்கள். ஆனால், எத்தனை நாள்தான் ஆசைக்கு அணை போடுவது? இப்போது எல்லையில்லா மகிழ்ச்சியோடு இருக்கிறேன். த்ரில் நிறைந்த இது எனக்கு கடைசிப் பயணமாகக் கூட இருக்கலாம். உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் புறப்படுகிறேன்’’ என்கிறார் லால் ஜோஸ் உற்சாகமாக.
ஜூன் 16ம் தேதி கொச்சியிலிருந்து காரில் கிளம்பியிருக்கும் இவர்கள், பெங்களூரு, ஐதராபாத், நாக்பூர், கோரக்பூர் வழியாக நேபாளத்தைக் கடந்து திபெத் சென்று அங்கு 2 நாட்கள் தங்குவார்கள். பின்னர் எவரெஸ்ட் அடிவாரத்தைக் கடந்து லாசா வழியாக சீனா... அங்கிருந்து கிர்கிஸ்தானையும், கஸகிஸ்தானையும் கடந்து ரஷ்யா... அதன் பின்னர் 19 ஐரோப்பிய நாடுகளைக் கடந்து கடைசியாக லண்டனில் பயணத்தை முடிக்கிறார்கள். அங்கிருந்து காரை கப்பல் ஏற்றி அனுப்பி விட்டு, இவர்கள் ஃப்ளைட்டில் திரும்புவதாக பிளான்.
‘‘மொத்தம் 27 நாடுகள், 75 நாட்கள், 24,000 கி.மீ... நினைத்துப் பார்க்கவே பெருமையாக இருக்கிறது. இந்தப் பயணத்திற்கு சில குறிக்கோள்கள் உள்ளன. உலக சமாதானம், இந்திய சினிமாவின் 100 ஆண்டு நிறைவு... இப்படி! லிம்கா சாதனை புத்தகத்திலும் இதை இடம்பெற வைக்க திட்டம் உள்ளது. இதற்காகவே பயணம் முழுவதையும் படமாக்க காரில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது’’ - குஷியாகப் பேசி நமக்குக் கையசைக்கிறார் லால்.
இந்தப் பயணத்துக்கு முந்தைய நாள் வரை லால் ஜோஸ் தனது ‘விக்கிரமாதித்யன்’ படத்தின் கடைசிக் கட்ட வேலைகளில் பிஸி. மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நடித்துள்ள இந்தப் படம், அடுத்த மாதம் 25ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். தனது சொந்தப் படத்தின் ரிலீஸுக்குக் கூட காத்திருக்காமல் உலகம் சுற்றக் கிளம்பிவிட்டார் லால் ஜோஸ்!
- ஏ.கே.அஜித்குமார்