போட்டோ எடுத்தால் உயிர் போய் விடும் என்ற மூட நம்பிக்கையில் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறது ‘முண்டாசுப்பட்டி’ கிராமம். அங்கே போட்டோகிராபர்களாகப் புகுந்து விஷ்ணு விஷால், காளி வெங்கட் செய்யும் அதிரிபுதிரி கலாட்டாக்கள்தான் ‘முண்டாசுப்பட்டி’. ‘ஹாலிவுட் ஸ்டுடியோ’ எனப் பெயர் வைத்துக்கொள்ளும் அளவுக்கு சினிமா வேகம் கொண்டவர்கள் விஷ்ணு, காளி ஃப்ரண்ட்ஸ். போட்டோ எடுக்க ஆள் வராமல் எதிர்பார்த்து நிற்கும்போது, சாகக் கிடக்கும் ஊர்த் தலைவரைப் படம் எடுக்க வாய்ப்பு வருகிறது.
எக்ஸ்போஸ் ஆகாத ஃபிலிமில் தலைவர் சிக்காது போக, சினிமா ஆசையில் ஸ்டுடியோ வரும் ராம்தாஸை இறந்த கோலத்தில் படம் எடுத்து சமாளிக்கிறார்கள். ராம்தாஸ் முண்டாசுப்பட்டிக்கும் வந்து விட, விஷ்ணு, காளி தப்பிப் பிழைத்தார்களா... அங்கிருந்த நாட்களில் கிடைத்த காதலை விஷ்ணு காப்பாற்றிக் கொண்டாரா... என்பதுதான் மிச்சமுள்ள காமெடி கலாட்டா.
தமிழ் சினிமா ட்ரெண்ட், உலக சினிமாவுக்கான ஆயத்தம் என எதைப் பற்றியும் வருத்தப்பட்டுக் கொள்ளாமல் சீனுக்கு சீன் சிரிக்க வைத்தால் போதும் என்று இறங்கி அடித்திருக்கிறார் புதுமுக இயக்குநர் ராம்குமார். புது வகை காமெடியில் வர நினைத்த துணிச்சலுக்கு வெரி குட்! விஷ்ணுவிடம் நிறைய பக்குவம். ஹீரோவிற்கான எந்தவொரு முயற்சியும் எடுத்துக்கொள்ளாமல் இருக்கிற கதையில் வருவதே ஆச்சரியம். காதலி நந்திதாவை துரத்தித் துரத்தி காதலிப்பதில் காட்டுகிற அக்கறை, இழவு வீட்டிலும் பார்க்கிற காதல் பார்வை... இப்படி இயல்பு நடிப்பின் அடுத்த கட்டம் போவதில் ஜொலிக்கிறார்.
அடித்தொண்டையில் பேசுகிற நண்பன் காளி வெங்கட்டை மறக்க முடியவில்லை. அவர் பேசுவதெல்லாம் ஒன்று சிரிப்பலைகளை உண்டாக்குகிறது; அல்லது அடங்கிய புன்னகை யையாவது வரவழைத்து விடுகிறது. சினிமா க்ரேஸ் பிடித்தவராக வரும் ராம்தாஸ் அரிதாக சினிமாவில் கிடைக்கிற கேரக்டர். கிராமத்தின் பக்காவான பாடி லாங்குவேஜில் அவர் பின்னி எடுக்கும்போது, ஹீரோவே அவர்தானோ என சந்தேகம் எழுவது நிஜம்.
மாயக்கண்களை வைத்து நந்திதா காதல் செய்தாலும், கிடைத்திருக்கிற வாய்ப்பு கொஞ்சமே. அதையும் நிறைவு செய்வதில் இருக்கிறது அவரது வெற்றி. தாத்தா வாயில் ‘பால்’ ஊற்றுவதிலும், கிராமத்து வரம்புக்கு உட்பட்ட காதல் ரியாக்ஷன்களிலும் நச்! ஷான் ரோல்டனின் இசை மிகவும் பக்குவம். அவ்வப்போது சந்தோஷ் நாராயணின் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘ராசா மகராசா’ பற்று வைத்து கேட்க வைக்கிற பாட்டு. ‘காதல் கனவே’ கூட அப்படித்தான்!
முக்கியமாக விஷ்ணுவிற்கான பாத்திரப் படைப்பு உறுதியாக இல்லை. அவர் இல்லாமல் இருந்தாலும் படம் பார்க்கலாம் போலிருக்கிறது. படத்தின் ஆரம்பத்திலிருந்து வருகிற விஷ்ணு, காளி கேரக்டர்களின் பின்னணி, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனக் காட்டியிருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.
சில தரக்குறைவான காமெடிகளும் இல்லாமல் இல்லை. 1980 கதைக்களம் என்பதற்கு ஆர்ட் டைரக்டர் கோபி ஆனந்தின் உழைப்பு அபாரம். பி.வி.சங்கரின் கேமரா சாஷ்டாங்கமான ஒத்துழைப்பு. வில்லன் ஆனந்தராஜை கௌரவ வேடம் போல வந்து போக வைத்திருப்பது துணிவுதான். விட்டேத்தியாய் விட்ட இடங்களில் இன்னும் கவனம் காட்டியிருந்தால் ‘முண்டாசுப்பட்டி’, பெரிய லேண்ட் மார்க் ஆகியிருக்கும்!
- குங்குமம் விமர்சனக் குழு