ஐஸ்வர்யா ராயாக மருந்து!



தங்கம் விலை சரிவது நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆறுதல் என்றாலும் வதந்திகளைப் பரப்பி பங்குகளின் விலையை ஏற்றி இறக்கும் சிலரின் தகிடுதத்தங்கள் பீதியைக் கிளப்புகிறதே!
- கவியகம் காஜூஸ், கோவை.

நடிகர் விஜய்யின் ‘கத்தி’ பட இசையமைப்பாளர் அனிருத் படமும் போஸும் அசத்துகிறதே! நடிக்க மாட்டேன் என்று அவர் சத்தியம் செய்தாலும் நம்பாதீர்கள். தமிழ்த் திரையுலகிற்கு இன்னொரு ஒல்லி ஹீரோ பராக்! பராக்!!
- முத்தையா தம்பி, மஞ்சக்குப்பம்.

புனித கங்கையின் இன்றைய நிலையை விவரித்திருந்த உங்கள் ஆதங்கம் உண்மையானது. முதலில் நம் மக்களின் மனதை சுத்தப்படுத்தி, பிறகு கங்கையையும் சுத்தப்படுத்துவது சாமானிய வேலையில்லை!
- தி.திருமலைசாமி, சென்னை-78.

பத்திரிகையாளர்களின் கேமராவுக்கு அனுமதி இல்லை என்றாலும், அமலாபால் திருமணத்தை அழகு ததும்ப கண்முன் நிறுத்திவிட்டீர்கள்!
- எம்.மிக்கேல்ராஜ், விருதுநகர்.

பிறக்கும்போது இருந்த நிறத்தைக் கொண்டு வரும் மருத்துவ சிகிச்சைகளை டாக்டர் கார்த்திக்ராம் விளக்கிய விதம் நன்று. இனி, எல்லோரும் ஐஸ்வர்யா ராயாகவும் சல்மான் கானாகவும் கூட மருந்துகள் வந்துவிடும் போலிருக்கிறதே?
- எச்.அருணாராணி, காங்கேயம்.

‘ஒரு ஆசிரியரின் தகுதி, தன் துறையில் எந்த அளவுக்கு அவர் ஞானத்தோடு இருக்கிறார் என்பதைப் பொறுத்தது’ என்று சொன்ன ‘ரமணா’ மாடல் ஆசிரியர் ஜான்குமாருக்கு ஜே!
- மா.மாரிமுத்து, ஈரோடு.

அண்டை நாடுகள் தரும் பணத்துக்காக செம்மரங்களை வெட்டி கள்ள மார்க்கெட்டில் விற்பது பொன் முட்டையிடும் வாத்தைக் கொல்வது போலத்தான். நம் அரசே செம்மரங்களை ஏன் பெரிய அளவில் பயிரிட்டு அன்னியச் செலாவணியை ஈட்டக் கூடாது?
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

ஒரு நடிகைக்கு இளமை முக்கியமில்லை, திறமைதான் முக்கியம் என நிரூபித்துள்ளார் மல்லுவுட் மஞ்சு வாரியர்! அதுவும் அவர் 34 வயதில் ‘சிங்கம்’ சூர்யாவுடன் ஜோடி சேர்வது, சபாஷ்! சரியான ஜோடிதான்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

மல்லிகா ஷெராவத் அம்மணி... மாடர்னாகவும், கவர்ச்சியாகவும் போஸ் கொடுக்க ஆயிரத்தெட்டு உடைகள் இருக்க, வெற்றுடம்பில் தேசியக்கொடி போர்த்தித்தானா போஸ் கொடுக்க வேண்டும்?
- கே.வி.தனபாலன், கடலூர்.

காதல் காட்சியின் நெருக்கமும் அருவிக்கரையில் ப்ரியா ஆனந்தை விக்ரம் பிரபு பார்க்கும் பார்வையுமாக ‘அரிமா நம்பி’ அசத்தல்! இவர்களின் கெமிஸ்ட்ரியால் நம் உள்ளத்தில் அமில மழை!
- எல்.குமரேசன், தேனி.