‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ என்கிற விமானம் தாங்கி போர்க் கப்பலை கடந்த வாரம் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஒரு குட்டி தேசத்தையே வெல்லும் அளவுக்கான போர்ப்படையைத் தாங்கிச் செல்லக் கூடியது இந்தக் கப்பல். ‘‘சீனாவை மிரட்டும் வலிமையை இப்போது கடலில் இந்தியா பெற்றுவிட்டது’’ என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால் இந்தக் கப்பலை கடலில் இறக்கி விடுவதற்குள் இந்தியா பட்ட பாடு இருக்கிறதே...
கடற்படையைப் பொறுத்தவரை உலகின் தாதா அமெரிக்காதான். அதனிடம் 11 விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள் இருக்கின்றன. ஒரு போர்ப்படைக்கு மிக வலிமையான ஆயுதம், இந்த டைப் கப்பல்கள். இந்தக் கப்பலில் ஒரு விமான தளம் இருக்கும். போர்க்கப்பல்கள் பலவற்றை நிறுத்தி வைக்கவும் இடம் இருக்கும். சர்வதேச கடல் எல்லையில் எங்கு வேண்டுமானாலும் இந்தக் கப்பல்கள் செல்லலாம். சூடான் நாட்டில் தீவிரவாதிகளால் பிரச்னை என்றால், அமெரிக்கா இதற்காக தொலைதூரத்திலிருந்து படைகளைத் திரட்டி அனுப்ப வேண்டிய சிரமமில்லை. சூடானுக்கு பக்கத்துக் கடலில் இருக்கும் ஒரு கப்பலை திசை திருப்பி விட்டால் போதும்...
சில மணி நேரங்களில் விமானங்கள் கிளம்பிப் போய் குண்டுமழை பொழிந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டு திரும்பவும் கப்பலில் வந்து இறங்கி விடும். கடலுக்குள் நகர்ந்தபடி இருக்கும் ஒரு ராணுவ முகாம் போன்றது விமானம் தாங்கிக் கப்பல். உலகில் பத்து நாடுகள் மட்டுமே இந்த ரக கப்பல்களை வைத்திருக்கின்றன. அமெரிக்கா 11 வைத்திருக்கிறது என்றால், இரண்டாம் இடத்தில் இருப்பது இந்தியாவும் இத்தாலியும்தான். ஆம், தலா 2 கப்பல்கள் உண்டு. சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, ஸ்பெயின், பிரேசில், தாய்லாந்து ஆகிய நாடுகளிடம் தலா ஒன்று உள்ளது. இந்த ஒரே விஷயத்தில்தான் நாம் கடந்த வாரம், சீனாவை விட இரண்டு மடங்கு வல்லமை பெற்ற நாடாகி விட்டோம். இந்தியப் பெருங்கடலில் சீனாவை மிரட்ட நமக்குக் கிடைத்திருக்கும் ஆயுதம் இது!
ஏற்கனவே இந்தியாவிடம் ‘ஐஎன்எஸ் விராட்’ என்ற விமானம் தாங்கிப் போர்க்கப்பல் இருக்கிறது. பிரிட்டனிடம் வாங்கிய ‘செகண்ட் ஹேண்ட்’ அயிட்டம். 55 ஆண்டுகள் பழைய அது, 28 ஆயிரம் டன் எடை கொண்டது. அதில் 11 விமானங்களை மட்டுமே நிறுத்தவும் இயக்கவும் முடியும். மூன்று புறமும் கடலாலும், எல்லா புறமும் எதிரிகளாலும் சூழப்பட்ட ஒரு தேசத்துக்கு பாதுகாப்பு தருவது விமானம் தாங்கிக் கப்பல்கள் மட்டுமே. இதை உணர்ந்து, இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடல்பகுதிகளில் ரோந்து செல்ல தலா ஒரு கப்பல் வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் ரஷ்யா கடும் நிதி நெருக்கடியில் தவித்தது. தன்னிடம் இருந்த இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை பராமரிக்க பணமின்றி தவித்த ரஷ்யா, அதில் ஒன்றை இந்தியாவுக்கு பரிசாகக் கொடுக்க முன்வந்தது. அது காஸ்ட்லியான பரிசு என்பதைப் புரிந்துகொள்ளாமல் இந்தியாவும் கடந்த 94ம் ஆண்டு இந்த செகண்ட்ஹேண்ட் கப்பலை வாங்கியது. அப்போது ஆரம்பித்தது தலைவலி.
அப்போது இந்தக் கப்பலுக்கு ‘அட்மிரல் கோர்ஷ்கோவ்’ என பெயர். 87ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கப்பலில் சில பராமரிப்பு வேலைகளைச் செய்து முடித்து இந்தியாவுக்குத் தருகிறோம் என்றனர். ஏனெனில், ஒரு தீ விபத்தில் இதன் பாகங்கள் எரிந்து போயிருந்தன. பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் செலவுகளுக்காக இந்தியா 2400 கோடி ரூபாய் தர வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இந்தப் பணியை ஆரம்பிக்கவே தாமதமானது. அதற்கு செலவுகள் கூடி விட்டதால் ரூ.4200 கோடி கேட்டது ரஷ்யா. இரண்டு தரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையை இழுத்தபடி இருக்க, அதற்குள் 10 ஆண்டுகள் ஓடிவிட்டன. கடைசியில் 2004ம் ஆண்டு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.
கப்பலை சீரமைக்கவும், கப்பலில் பயன்படுத்தும் விமானங்கள் 16 வாங்கவும் இந்தியா 9018 கோடி ரூபாய் தந்தது. ரஷ்ய அதிகாரிகள் நிதானமாக இந்தப் பணிகளை செய்து முடிக்க 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தத் தாமதத்தால் ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. கப்பல் ரிப்பேருக்கும் 45 மிக்-29கே விமானங்களுக்கும் சேர்த்து 26 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியா கொடுக்க வேண்டியதாயிற்று. ஆக, இது ரூ.26000 கோடி இலவசப் பரிசு!
விக்ரமாதித்யா இப்போது சீனாவை வேகப்படுத்தி இருக்கிறது. அவர்களிடம் இப்போது 65 ஆயிரம் டன் எடையுள்ள லையோனிங் என்ற விமானம் தாங்கிக் கப்பல் உள்ளது. இப்போது மற்ற தேசங்களை நம்பியிருக்காமல் அவர்களே சொந்தமாக கட்ட ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாவும் இந்த கோதாவில் இறங்கியுள்ளது. கொச்சி கப்பல் தளத்தில் ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ என்ற 40 ஆயிரம் டன் விமானம் தாங்கிக் கப்பலை கட்ட ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. 2018ம் ஆண்டு இதை முடிப்பதாக இலக்கு. வழக்கமான இந்தியத் தாமதங்களுக்கு ஆளாகாமல் இதைச் செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சீனா முந்திக் கொள்ளும். சில நேரங்களில் பசித்த வயிறுகளின் பட்டினியைத் தீர்ப்பதைவிட படைக்கலன் பெருக்குவது தேசங்களுக்கு அவசியமாகிப் போகிறது!
வீரன் விக்ரமாதித்யா!* 284 மீட்டர் நீளமுள்ளது இந்தக் கப்பல். உயரம் 60 மீட்டர். ஒரு 20 மாடி கட்டிடத்தைவிட உயரமானது. எடை 44 ஆயிரத்து 570 டன்.
* ஒரு நாளில் கடலில் 600 நாட்டிக்கல் மைல் கடக்கும் திறமை பெற்றது.
* 1600 முதல் 1800 வீரர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் இதில் இருப்பார்கள்.
* இதில் 10 ஹெலிகாப்டர்களையும் 24 மிக் ரக போர் விமானங்களையும் நிறுத்தலாம்.
* ‘மிக்-29கே’ ஜெட் விமானங்களே இதில் நிறுத்தப்படுகின்றன. ரன்வேயில் குறைந்த தூரமே பயணித்து மேலெழும்பும் சக்தி பெற்ற இந்த போர் விமானங்கள், பல ரக ஏவுகணைகளையும் ராக்கெட்டுகளையும் வீசும் திறமை படைத்தவை. 1300 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து தாக்கும் வல்லமை பெற்றவை.
- அகஸ்டஸ்