பிரேசிலில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜுரம் உலகையே அனலாக்கி இருக்கிறது. நெய்மாரும், மெஸ்ஸியும் கோல் கணக்கைத் துவக்கி கோலோச்சுகிறார்கள். உலகில் அனைவரது கண்களும் பிரேசிலை உற்று நோக்கியபடியே இருக்கின்றன. ஆனால், நம் சென்னைக்குள்ளேயே இருக்கும் ஒரு பிரேசில் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? உலகளவிலும் தேசிய அளவிலும் போட்டிகளில் கலந்துகொண்ட கால்பந்து வீரர்கள் அங்கே வரிசை கட்டி நிற்பது உங்களுக்குத் தெரியுமா?
சென்னை வியாசர்பாடி... வியர்வை சிந்தி உழைக்கும் வர்க்கத்தின் வாழ்விடம். இதற்கு இன்னொரு பேரும் இருக்கு. அதுதான் ‘குட்டி பிரேசில்’. இங்கே, வீட்டுக்கு ஒருவர் கால்பந்து வீரராக ஜொலிக்கிறார். இங்குள்ள ‘ஸ்டெட்ஸ்’ கால்பந்து அணி, தமிழகத்தின் பத்து சிறந்த அணிகளுள் ஒன்று. ஸ்டெட்ஸ் என்பதன் விரிவாக்கம், ‘குடிசைவாழ் குழந்தைகள் விளையாட்டுத் திறமை மற்றும் கல்வி மேம்பாட்டு சங்கம்.’
‘‘எங்க ஏரியாவுல விளையாட்டுன்னா அது ஃபுட்பால்தான். நான் எட்டு வயசுல இருந்து இங்க ப்ராக்டீஸ் பண்றேன். நாலு வருஷமா தமிழ்நாடு சப் ஜூனியர், தமிழ்நாடு ஸ்கூல் டீம் ரெண்டுலயும் இருக்கேன். இன்னும் நிறைய ப்ராக்டீஸ் பண்ணி இந்தியாவுக்காக விளையாடணும்ங்கிறது என் லட்சியம்’’ என்கிறார், பிளஸ் 1 படிக்கும் கண்ணன் தேவா. இவரைப் போலவே வியாசர்பாடி மாநகராட்சி கிரவுண்டில் பயிற்சியிலிருந்த நந்தகுமார் பி.காம் மாணவர். 18 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடி சாதித்தவர்.
இப்போது பல்கலைக்கழக டீமில் முன்கள வீரர். அதேபோல் பத்தாம் வகுப்பு படிக்கும் உமாசங்கர், மாவட்ட அளவில் நடந்த கால்பந்து டீம் தேர்வில் அதிக கோல்கள் அடித்து கலக்கியவர். மூத்த வீரரான திலீபன் இந்திய அணிக்காக விளையாடியவர். இப்படி நிறையப் பேர் இந்த வரிசையில். இப்படியொரு பிரேசில் உருவாகக் காரணமான ‘ஸ்டெட்ஸ்’ சங்கத்தைச் சேர்ந்த உமாபதி மற்றும் தங்கராஜ் இருவரையும் சந்தித்தோம்...
‘‘ரொம்ப ஏழ்மையான மக்கள் வாழ்ற இடம் சார் இது. எல்லோருமே தினக்கூலிகள். இதனால, வியாசர்பாடின்னா ஒரு மாதிரி பார்க்கிற கண்ணோட்டம்தான் இருக்கு. அதனால, ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தணும்னு நான், தங்கராஜ், நண்பர் சுரேஷ் மூணு பேரும் நினைச்சோம். எங்க பகுதியில ஃபுட்பால் எப்பவுமே ஃபேமஸ்தான். பொழுதுபோக்குக்காக எல்லாருமே விளையாடுவாங்க. நான், தமிழ்நாடு ஃபுட்பால் டீம்ல கோல்கீப்பரா விளையாடியிருக்கேன்.
அதன் மூலமா அரசு வேலை கிடைச்சது. ஒரு விளையாட்டு வாழ்க்கையை திசைமாற்றுதுன்னா, நல்ல விஷயம்தானே! என்னை மாதிரியே இங்க இருக்கற எல்லாரும் வரணும்னு ஆசை. உடனே, இந்தச் சங்கத்தை ஆரம்பிச்சிட்டோம்’’ என உற்சாகமாகப் பேசுகிறார் உமாபதி. இவர் கால்பந்து கோச்சிங் மற்றும் டெக்னிக்கல் கோர்ஸை முறையாகப் பயின்றவர். இருந்தாலும் இப்படியொரு டீமை உருவாக்க ரொம்ப கஷ்டப்பட்டதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
‘‘பயிற்சி எடுக்க சரியான கிரவுண்ட் கிடையாது. மாநகராட்சி அதிகாரிகள்கிட்ட தொடர்ந்து பேசினதுக்கு பலனா, 17 வருஷத்துக்குப் பிறகு இப்பதான் 45 லட்ச ரூபாய் செலவுல செயற்கை புல் மைதானத்தை ரெடி பண்ணித் தந்தாங்க. இப்படியொரு மைதானம் தமிழ்நாட்டுல எங்கயும் இல்ல. நவீன டெக்னாலஜியோட இதை உருவாக்கினோம். ஆரம்பத்துல எங்க டீமை போட்டிகள்ல சேர்க்க மாட்டாங்க. குடிசைவாசிகள் குழுன்னே நிராகரிப்பாங்க. எங்களாலயும் ஃபுட்பால் அசோசியேஷன்ல சேர முடியல.
அதுக்கு நிறைய போராட வேண்டி யிருந்துச்சு. இங்க பயிற்சி எடுக்கற பசங்க ஸ்கூல் டீம் செலக்ஷன் போனாலும் எடுக்க மாட்டாங்க. அங்க உள்ள பசங்கள்லயே இவங்கதான் நல்லா விளையாடியிருப்பாங்க. ஆனாலும் தேர்ந்தெடுக்க மாட்டாங்க. இப்படிப்பட்ட நிராகரிப்பை எல்லாம் தாண்டி ஜெயிக்கணும். தலைசிறந்த வீரனா இருந்தால்தான் அது சாத்தியம். அந்த அளவுக்கு நாங்க திறமையை வளர்த்துக்க வேண்டியிருக்கு’’ என வேதனையோடு பேசுகிற உமாபதியைத் தொடர்கிறார் தங்கராஜ்.
‘‘இங்க நாங்க வெறுமனே கால்பந்து பயிற்சி மட்டுமே தரலை. இந்தப் பகுதி பிள்ளைகளுக்கு டியூஷனும் எடுக்குறோம். விளையாட வர்ற எல்லாரும் கண்டிப்பா டியூஷன் படிச்சே ஆகணும். வெறும் விளையாட்டு மட்டுமே வாழ்க்கைக்கு உதவாதுங்கற யதார்த்தத்தை அவங்களுக்குப் புரிய வைக்கறோம். விளையாட்டோடு படிப்பும் சேர்ந்திருந்தாதான் முன்னேறிப் போக முடியும். இப்ப தான் நிறைய பேர் படிக்க தொடங்கியிருக்காங்க. இந்த வருஷம் இங்க படிச்ச பசங்க எல்லாருமே பத்தாம் வகுப்பு பாஸ். அடுத்து பிளஸ் 2 முடிச்சு, காலேஜ் போய், நல்ல வேலைக்கும் போகணும். அப்பதான் நாங்க நினைச்ச சமூக மாற்றம் இங்க நடக்கும்’’ என்கிற தங்கராஜ், தங்கள் அணியின் கால்பந்து சாதனைகளை அடுக்கினார்.
‘‘இப்ப எங்க டீம் சூப்பர் டிவிஷன் பிரிவுல இருக்கு. அதாவது, தமிழ்நாட்டு டாப் 10ல் ஒரு டீம். இதுக்கு ஒவ்வொரு கட்டமா முன்னேறி வந்தோம். 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டித் தொடர் மும்பையில நடந்துச்சு. அதுல ஜெயிச்சு ஸ்வீடன் போனோம். அங்க ஸ்வீடன் டீமையும் ஜெயிச்சோம். நல்ல அனுபவம் அது. எங்களால கல்வியும், பயிற்சியும் கொடுக்க முடியும். ஆனா, அடிப்படையான ஊட்டச்சத்து பிரச்னையை சமாளிக்க முடியல. ஒன்றரை மணி நேரம் புலிப்பாய்ச்சல்ல ஓடியபடி விளையாடறது கால்பந்து.
சாப்பாடு சரியா இருந்தாத்தானே நல்லா விளையாட முடியும்? அதுக்கே கஷ்டம்ங்கிறபோது எப்படி விளையாட்டுல கவனம் வரும்? எங்க கிளப்ல இருந்த பலர் குடும்ப சூழ்நிலை காரணமா 17 வயசிலேயே வேலைக்குப் போயிட்டாங்க. அவங்க விளையாட்டு அதோட நின்னுடுச்சு. ஒரு பையன்தான் தமிழ்நாடு போலீஸ் டீம்ல விளையாடுறான். ஃபுட்பால் விளையாடணும்னா நாலு விஷயங்கள் முக்கியம்.
ஒண்ணு கட்டமைப்பு. அடுத்து, டெக்னிக்கல் உதவி. பிறகு சத்தான உணவு. நாலாவதா உபகரணங்கள். இந்த நாலும் பூர்த்தியாகிட்டா பிரேசில் மாதிரி சிறந்த அணியை இங்கேயே உருவாக்கிடலாம். ஆனா, அதுக்கு நல்ல ஸ்பான்சர் தேவை’’ என்கிறார் அவர் அழுத்தமான குரலில்!
எங்க டீமை போட்டிகள்ல சேர்க்க மாட்டாங்க. குடிசைவாசிகள் குழுன்னே நிராகரிப்பாங்க. நிறைய போராட வேண்டி யிருந்துச்சு...’’
- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்