அவன் அவள் unlimited



அழகு ஒரு அயல் நாட்டு சதி!

அறிவென்பது கடந்த காலத்தின் சாரம். அழகென்பது வருங்காலத்தின் நம்பிக்கை!

- ஆலிவர் வென்டல் ஹோம்ஸ்

“மயில்... இப்ப கூட நான் ரொம்ப லைக் பண்றது உன்னயில்ல... உன்னோட பத்னாறு வய்ஸ!’’ - நம் சினிமாக்களில் ஹீரோக்கள் எப்போதும் செயற்கையான சென்டிமென்ட்களைத்தான் உதிர்த்திருக்கிறார்கள். வில்லன்கள்தான் சயின்ஸையும் நிதர்சனத்தையும் பேசியிருக்கிறார்கள். இதனால்தான் சென்டிமென்ட் யுகத்திலிருந்து நாம் அறிவுலகத்துக்கு மாறியபோது, இங்கே வில்லன்கள் ஹீரோவாகும் கட்டாயம் ஏற்பட்டது போல!

‘பதினாறு வயதினிலே’ டாக்டர் சொன்ன இதே கருத்தைத்தான் இப்போது உலகம் முழுவதுமுள்ள பல்வேறு டாக்டர்களும் ஆராய்ச்சியாளர்களும் சொல்கிறார்கள்... ஒரு பெண்ணின் உள்ளார்ந்த இளமையைத்தான் ஆண் ரசிக்கிறான். பார்த்த மாத்திரத்தில், ‘இவள் இளசா? இல்லை பழசா?’ எனக் கண்டறிய இயற்கை அவனுக்கு கொஞ்சம் க்ளூ கொடுக்கிறது. அதுதான் வெளிப்புற அழகு! ‘‘செம ஃபிகர்டா மச்சான்’’ - ஃபேஸ்புக்கில் யாரையோ வெறித்து இப்படி கமென்ட் அடிக்கும் இளைஞர்களைக் கொஞ்சம் உற்றுப் பாருங்களேன்.

என்னவோ, இதுவரை உலகில் யாருமே கண்டறியாத அழகுப் பொக்கிஷத்தை முதன்முதலில் தான்தான் தேடிப் பிடித்து ‘லைக்’ பண்ணி விட்டது மாதிரி ஒரு பெருமிதம் தாண்டவமாடும். உண்மையில், இந்த பூவுலகின் மிகப் பழமையான கமென்ட்டே ‘சூப்பர் ஃபிகரு மச்சான்’ என்பது தான். ஆணாய்ப் பிறந்துவிட்டாலே இந்த வாக்கியத்தை சொல்லியாக வேண்டியது அவன் தலையெழுத்து. அவனை இப்படிச் சொல்ல வைப்பதற்காகவே எத்தனை உள்நாட்டுச் சதியும் வெளிநாட்டுச் சதியும் நடந்தேறுகின்றன தெரியுமா?

இந்த இடத்தில் உள்நாட்டுச் சதி என்பது, ஆண் உடலுக்குள் நடக்கும் ரசாயன மாற்றங்கள். வெளிநாட்டுச் சதி என்பது, பெண் உடலுக்குள் நடக்கும் அதே கெமிக்கல் கசமுசாக்கள். அந்தச் சதிகளை சுருக்கமாகப் பட்டியலிடுகிறார் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த உளவியலாளர் மிரியம் லா ஸ்மித்... ‘‘பருவம் அடையும் வரை ஆண் - பெண் இருவரையும் சமமாக வைத்திருக்கிறது இயற்கை. அதன் பிறகு ஆண் உடலில் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அதிகரிக்கிறது.

தான் குடியிருக்கப் போகும் வீட்டை தன் இஷ்டத்துக்குக் கொஞ்சம் மாற்றிக் கட்டுவதைப் போல, இந்த ஹார்மோன் ஆண் உடலை லேசாக ஆல்டர் பண்ணுகிறது. உடல் முழுவதும் ரோம வளர்ச்சியைத் தூண்டுவது, கொழுப்பு சேர்க்கையைக் குறைத்து வலிமை தருவது, முகத்தில் தாடை எலும்பை வளரச் செய்வது என சிறுவன் உடலில் அது புகுந்து விளையாடுகிறது!’’ என்கிறார் அவர்.

இதனால்தான் பெரும்பாலான ஆண்களின் முகத்தில் நெற்றிப் பகுதியை விட தாடைப் பகுதி சற்று அகலப்பட்டு  இந்த வடிவத்தில் தெரியும். ‘கோச்சடையான்’ கேரக்டர்கள் போல ஆண்களின் முகத்தில் வாயும் பற்களும் பளிச்சென தெரிய இந்த வடிவம்தான் காரணம். ஆனால், பெண்களின் உடலில் நடக்கும் மாறுதல்கள் முற்றிலும் வேறு!

‘‘பெண்களிடம் ஊற்றெடுக்கும் ஈஸ்ட்ரொஜன் ஹார்மோன், அவர்களின் தாடை எலும்பின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இதனால், பெண்களின் முகத்தில் கண்கள் சற்றுப் பெரியதாய்த் தெரிந்து கவனம் ஈர்க்கின்றன. தாடை குறுகி இருப்பதால், மூக்கும் அகலம் குறைந்து கூரியதாகிறது. இது தவிர, குழந்தைப் பிறப்புக்காக பெண்களின் இடுப்புப் பகுதியை மிக அகலமாக வளரச் செய்துவிடுகிறது ஈஸ்ட்ரொஜன். ஆபத்துக் காலங்களில் ஆணை விட பெண் அதிக காலம் உயிர் சுமந்திருக்க வேண்டுமே! அதற்காக பெண்களின் பின்புறத்திலும் மார்பிலும் கன்னங்களிலும் கொழுப்பைச் சேர்த்து வைக்கிறது இதே பொல்லாத ஹார்மோன்’’ என்கிறார் லா ஸ்மித்.

சாரி டு ஸே... பெண்களின் உடலில் ஈஸ்ட்ரொஜன் தன் வேலையை ஒழுங்காய் செய்திருக்கிறதா? ஓ.பி அடித்திருக்கிறதா என சூப்பர்வைஸ் பண்ணுவது மட்டுமே ஆண்களின் வேலை. ஆம், பெண் உடம்பில் வாஸ்து பார்த்து ஈஸ்ட்ரொஜன் உருவாக்கிய இந்த வஸ்துக்களைத்தான் ஆண் கூட்டம், அழகென்று பெயர் சொல்லி ஆராதிக்கிறது. கிலோ கிலோவாய் கவிதை எழுதி வர்ணிக்கிறது. ஈஸ்ட்ரொஜனும் இயற்கையும் ஆண்களை விட செம தெளிவு. ஒரு பெண்ணின் இனப்பெருக்க காலம் வரைதான் இந்த அழகு அடையாளங்களை அவளிடம் விட்டு வைக்கிறது ஈஸ்ட்ரொஜன்.
கிராமங்களில் இதை மிக இயல்பாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள், ‘பருவத்தில் பன்னிக்குட்டி கூட அழகு’ என்று.

பருவம் கடந்த பிறகு ஈஸ்ட்ரொஜனும் குறையும்... அது உருவாக்கி வைத்திருந்த ‘அழகுகளும்’ குறையும். ஏன் இந்த வஞ்சனை? பெண்களுக்குக் கொடுத்த செல்வத்தை இயற்கை ஏன் இப்படி பாதியில் பிடுங்குகிறது? அதற்கும் காரணம் உண்டு. இயற்கையைப் பொறுத்தவரை பெண்ணின் அழகும் இளமையும் அவளின் ‘குழந்தை பெறும் திறனு’க்கு அடையாளங்கள். அந்தத் திறனை இழந்த பிறகும் பெண்கள் அழகாய்த் தெரிய வேண்டுமென்றால் மேக்கப் தவிர வேறு வழியில்லை. இது பற்றி சென்னையைச் சேர்ந்த நாளமில்லா சுரப்பிகள் சிறப்பு மருத்துவர் பு.கோ.சுந்தரராமனிடம் கேட்டோம்...

‘‘அழகான பெண்கள் எல்லோருமே குழந்தை பெறும் திறன்... அதாவது, ஃபெர்டிலிட்டி அதிகம் கொண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், குழந்தைப் பிறப்புக்கு எதிரான சில பிரச்னைகள் பெண்களிடம் இருந்தால், அது அவர்களின் தோற்றப் பொலிவை கொஞ்சம் குறைக்கும். உதாரணத்துக்கு, பாலிசிஸ்டிக் ஓவரி என்ற பிரச்னை இருக்கும் பெண்களிடம் ஈஸ்ட்ரொஜன் குறைந்திருக்கும். இதனால், பருக்கள், முகத்தில் முடி வளர்தல், எண்ணெய் வடியும் தோற்றம், கழுத்து கறுத்துப் போவது என அழகு பாதிக்கப்படலாம். தைராய்டு பிரச்னை இருந்தாலும் அது பெண்களின் முகத்தை வயதானவர் போல் காட்டும்!’’ என்றார் அவர்.

ஆக, ‘இந்த மாதிரி பிரச்னைகள் எனக்கில்லை. உன் மரபணுவைச் சுமந்து ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுத் தரக் கூடியவள் நான்’ என்பதற்கான மெடிக்கல் சர்டிபிகேட்டே ஓர் அழகான முகம்! இது பற்றி எல்லாம் யோசிக்காமலேயே ‘என்னவோ தெரியலை மச்சி... அவளைப் பார்த்ததுமே பிடிச்சுப் போச்சி!’ என நாம் பெண்களை தேர்ந்தெடுத்துத் திரிகிறோம்.
சரி, பெண்களின் அழகு உறுப்புகளை எல்லாம் சொன்னோம். நம்மூர் ஃபேவரிட், ஆறடி கூந்தலைப் பற்றி ‘அலசவே’ இல்லையே! அவ்வளவு பெரிய கூந்தலால் யாருக்கு என்ன பலன்?

நீங்கள் யார்?

ஒரு கண்ணை மூடிக் கொண்டு இந்தக் கறும்புள்ளியை உற்றுப் பாருங்கள். இந்த முறை இந்தப் புள்ளியை வைத்து பலன் சொல்லப் போவதில்லை. அனிச்சையாய் நீங்கள் எந்தக் கண்ணை மூடினீர்கள் என்பதுதான் மேட்டரே. பலன்கள் தலைகீழாக!

இடது கண்ணை மூடிக் கொண்டு வலது கண்ணால் பார்ப்பவர்கள்தான் நம் ஊரில் அதிகம். இவர்களிடம் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது இடது மூளை. பிராக்டிகல் மனிதர்களான இவர்கள், குறிக்கோள்கள் கொண்டிருப்பவராகவும் தந்தையை அதிகம் நேசிப்பவராகவும் திட்டமிடுதலில் கில்லியாகவும் இருப்பார்கள். வலது கண்ணை மூடி இடது கண்ணால் பார்ப்பவர்கள் வலது மூளைக்காரர்கள். சமூகத்தோடு அதிக இணக்கம் கொண்ட இவர்கள் தாயை அதிகம் நேசிப்பார்கள். ஒழுங்கின்மையும் கற்பனையும் இவர்களின் அடையாளங்கள்!

‘‘பார்த்ததுமே,
‘இது உங்க அக்காவா?’ன்னு கேக்கணும். அப்பதான்
நம்ம கல்யாணம் நடக்கும்.
எங்க அம்மா இதுக்காக
3 மணி நேரம் கஷ்டப்பட்டிருக்காங்க,
ப்ளீஸ்!’’

-தேடுவோம்!