சீறும் விஜய் ஆன்டனி
‘உன்னைக் கண்ட நாள் முதல்
என் தூக்கம் போனது.
தூங்கினாலும் உன் முகம்
என்னென்று சொல்வது?’
- இனிமையும் அழகுமாய், மெலடியில் கொஞ்சுகிறது அண்ணாமலையின் பாடல். விஜய் ஆன்டனியும், அக்ஷாவும் கொஞ்சு கிற தினுசில் காதல் சில்லிடுகிறது. ‘‘ ‘சலீம்’ பத்தி ரெண்டே வார்த்தையில் சொல்லணும்னா ‘இன்னொரு வெற்றி’. முழுக்கவே அந்த மூட்லதான் தினமும் ஸ்பாட்டுக்குப் போறேன்’’ - கால்பந்து மைதானம் போல, எனர்ஜி இறங்காமல் பேசுவது விஜய் ஆன்டனி ஸ்டைல்.
‘‘ ‘நான்’ வெற்றிக்குப் பிறகு நான் கதாநாயகனா வெளிப்பட இன்னும் கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. ஏன்னா, முதல் படம் பண்ணப்போ ஒரு குடும்பத்தில இருக்கிற கடைசிப் பையன் மாதிரி வேகம் மட்டும் இருந்தது. இப்போ மூத்த பையன் மாதிரி ஒரு பெரிய பொறுப்பு வந்து தோளில் உட்கார்ந்திருக்கு. அது ஒரு சுவாரஸ்யமான சினிமாவுக்கான பொறுப்பு. நிச்சயமா அதற்கு தகுதியானவனா இருப்பான் இந்த ‘சலீம்’ ’’
- நிதான மான குரலில் பேசுகிறார் விஜய் ஆன்டனி. இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக ப்ரொமோஷன் ஆனவர்.‘‘ ‘நான்’ படத்திற்குப் பிறகு, உங்களுக்கு வந்திருக்கிற எதிர்பார்ப்பு அதிகம். அதை எப்படி எதிர்கொள்வீங்க?’’‘‘என் கேரியரிலேயே உச்சத்தில் இருந்த டென்ஷன், முதல்முறை ஹீரோவா ‘நான்’ படம் பண்ணியபோதுதான். அது இப்போ இல்லை. ஆனால், அக்கறை கூடியிருக்கு. நடிக்க வந்தது பற்றி எனக்கு வருத்தங்கள் ஏதும் இல்லை. பார்வையாளனுக்கும் அந்தக் கஷ்டத்தை கொடுக்கலை.
மியூசிக்கில் நிறைய டெக்னாலஜி, புதுமுகங்களை உருவாக்கினேன். இதிலும் அப்படியே. லெஜண்ட் பாரதிராஜாகிட்டே பத்து வருஷத்திற்கு மேல பாடம் கத்துக்கிட்ட நிர்மல் குமார்தான் டைரக்டர். இருந்துட்டு வந்த இடம் சும்மா இல்லைன்னு நிரூபிச்சுக்கிட்டு இருக்கார். நல்ல குவாலிட்டியான படம். இதை ஒரு வழக்கமான கதையா எடுத்துக்க முடியாது. ஒரு நடிகனா... நல்ல டைரக்டரோட இணைஞ்சு வேற வேற உலகத்தையும் அனுபவங்களையும் தர வேண்டியது என் கடமை.
இது நடப்பு உலகத்தை அச்சு அசலாகக் காட்டுகிற கதை. உடனே, நீங்க நினைக்கிற மாதிரி, ‘கேங் வார்’ எல்லாம் கிடையாது. தினம் இங்கே ஆளுக்கு ஒரு கத்தியை புத்திக்குள் சொருகிட்டு, அதை வெளியே காட்டிக்காமல்தான் சிரிக்க வேண்டியிருக்கு. இந்த மாநகரம், எப்படி எல்லாம் ஒவ்வொரு மனுஷனையும் தூக்கிப் போட்டு பந்தாடுது. அடடா, படம் பார்க்க வந்தோம், போறோம்னு கை தட்டிட்டு மட்டும் போயிட முடியாது. ‘நான்’ வெற்றியைக் கொண்டாடிக்கிட்டு இருக்காமல், ரெஸ்ட் எடுக்காமல், நிர்மல்குமாரோடு உட்கார்ந்து யோசிச்சு செய்த படம். இதுவரைக்கும் இல்லாத ஒரு மாஸ் ஏரியாவில் பின்னி எடுக்கிறோம்.’’
‘‘ ‘சலீம்’ எப்படிப்பட்ட ஆளு?’’‘‘இப்ப பாருங்க, நல்லவனா இருக்கிறதே கேலிப் பொருளாகிடுச்சு. பொழைக்க தெரியாதவன்னு சிம்பிளா சொல்லி அந்த நல்ல குணத்தை ஒதுக்கி வச்சிடுறாங்க. பர்ஃபெக்ட்டா இருக்கிறது இங்கே முட்டாள்தனமா உருமாறி யிருக்கு. சகல கல்யாண குணங்களும் நிரம்பியவனை சினிமா கூட நிராகரித்து விட்டது. சலீமோட மன உலகத்தில் இருக்கிற நாகரிகம், ஒழுக்கம் வேற எங்கேயும் பார்க்க முடியாதது. மகான்கள் இப்போ பொறக்கறதில்ல.
நம்ம எல்லோருக்குமே பலவீனம் இருக்கு. அதை சாமர்த்தியமா வெளிக்காட்டாமல் சிலர் தப்பிச்சிக்க பார்ப்பாங்க. சில பேர் மாட்டிக்கிறாங்க. அது மட்டும்தான் வித்தியாசம். அந்த பலவீனமான சமயங்களில்தான் நாம் ஒருத்தரை காயப்படுத்துறோம். ஒரு தப்பு பண்ணிடறோம். ஒரு குற்றம் நடக்குது. நமக்குள் இருக்கிற மிருகம் முழிச்சிக்குது. நல்லவன் ஒருநாள் நொந்து நூலாகி, மனம் வெறுத்து, வெளியே வந்து ஆக்ரோஷப்பட்டால் எப்படி இருக்கும்? அப்படி இருப்பான் ‘சலீம்’. ‘நான்’ எப்படியோ, அதே ஸ்டைலைத்தான் இதில் பயன்படுத்தியிருக்கேன். பாடி லாங்குவேஜ், சீற்றம் எல்லாம் என் பாணியிலேயே வந்திருக்கு. அதனால் மிகை நடிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இது ‘பில்ட்-அப்’ எல்லாம் இல்லை... நிஜம்.’’
‘‘டூயட் எல்லாம் பாடுறீங்க..!’’‘‘அப்படியெல்லாம் அவசியம் இருந்தது. நீங்க பார்த்தீங்களே... ஏதேனும் குற்றம் சொல்ற மாதிரியிருக்கா என்ன? பாட்டு சரியா இருந்தது. அருமையா வந்துருச்சு. அக்ஷான்னு பொண்ணு... அழகி. நல்லா நடிக்கவும் செய்யறாங்க. நல்ல போட்டோஜெனிக் முகம். எங்க இரண்டு பேரையும் யூனிட்டில் பார்த்தால் காலேஜ் ஃபீல் வந்திடும்னு சொல்வாங்க. ஜோடிப் பொருத்தம் அருமைன்னு எல்லோரும் சொல்றாங்க. நாமே அதைச் சொன்னால் சரியா இருக்குமான்னு தெரியலை. நீங்கதானே ‘தேர்ட் அம்பயர்’. நீங்களே சொல்லுங்க!’’ ‘‘நீங்களே மியூசிக்..?’’
‘‘இன்னும் கவனமா செய்யலாமே... அதான்! விடாப்பிடியான பிடிவாதம் எல்லாம் கிடையாது. அடுத்த படமான ‘இந்தியா - பாகிஸ்தானு’க்கு வேற புது மியூசிக் டைரக்டர்தான். இளையராஜா ‘ஜனனி ஜனனி’ன்னு ஆரம்பிச்சு, உயிரின் ஆழம் வரைக்கும் போய் மனசைத் தொடுவாரே... அது மாதிரி ஒரு பாடல் இதில் வந்திருக்கு. காலத்திற்கும் மறக்க முடியாத வகையில் அமைந்த பாட்டு. பாரதிராஜாவுக்கு கண்ணன் கண்ணு மாதிரின்னு சொல்லுவாங்களே, அது மாதிரி நிர்மல்குமாருக்கு கணேஷ்னு கேமராமேன். கேமரா அவர் சொன்னபடியெல்லாம் கேட்டு வளைஞ்சு கொடுக்குது.’’
- நா.கதிர்வேலன்