ஜவுளிக்கடையில் வேலை முடிந்து, பரமு வீடு திரும்பியபோது, அவன் சித்தி வீட்டுக்கு வந்திருந்தாள். அவர்கள் வீடு அடுத்த தெருவில்தான். இவர்களைப் போலவே கஷ்டப்பட்ட குடும்பம். சித்தி மகன் நந்தாவுக்கு பரமு வயதுதான். இவன் ஜவுளிக்கடை என்றால் அவனுக்கு மளிகைக்கடையில் வேலை.
சித்தியோடு பேசியபடியே அம்மா கேட்டாள்...
‘‘பரமு! சம்பளம் வாங்கிட்டியாடா?’’
‘‘அது வந்து... முதலாளி நாளைக்குத் தருவாரும்மா!’’
‘‘வழக்கமா இன்னிக்குத்தானேடா வாங்கிட்டு வருவே?’’
பரமு பதில் சொல்லவில்லை.
சற்று நேரத்தில் விடை பெற்றுக்கொண்டாள் சித்தி.
‘‘அம்மா, இந்தா சம்பளம்!’’ என்றவாறே பணத்தைக் கொடுத்தான் பரமு.
அம்மாவுக்கு ஆச்சர்யம். ‘‘இதை நான் கேட்டப்பவே குடுத்திருக்கலாமேடா?’’ என்றாள்.
‘‘எல்லாம் காரணமாத்தாம்மா... சித்திகிட்ட நந்தா ஒழுங்கா பணம் தர்றதில்ல. இல்லாத பொல்லாத பழக்கமெல்லாம் இந்த வயசுலயே கத்துக்கிட்டான். பாதி சம்பளம் கூட வீட்ல தர்றதில்லை. சித்தியே அவனை நினைச்சு கவலையில இருக்காங்க. அவங்க முன்னாலே நான் நல்லபிள்ளையா முழு சம்பளத்தையும் உன்கிட்ட தர்றதைப் பார்த்தா அவங்க மனசு எவ்வளவு வேதனைப்படும்? அதான்மா அப்ப குடுக்கல...’’பரமுவை நினைத்து பெருமிதப்பட்டாள் அம்மா.
அன்பிற்கினியவன்