மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் மனிதனைத் துரத்திக் கொண்டேதான் இருக்கின்றன. எல்லோரும் எதையாவது நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். சிலருக்கு இதுதான் இலக்கு என்கிற தெளிவு இருக்கும். ஆனால் ஓடும் பாதை, இலக்கிற்கு முற்றிலும் வேறு திசையில் நீளும். ஓடி முடித்து இது வேறு இடம் என்று தெரிகிறபோது, விதி என்று நொந்து கொள்வதும்... பரவாயில்லை என்று தேற்றிக் கொள்வதும் அவரவர் மனநிலையைப் பொருத்தது.

சிலர் பாக்கியசாலிகள். அவர்களது அனிச்சையான சிறிய நகர்வு கூட வெகு நேர்த்தியாக திட்டமிட்டது போல அமையும். இதுதான்... இதற்காகத்தான்... என்பது போல சரியான திசையை நோக்கிய அந்தத் துல்லியமான நகர்வில், எந்த மனித முயற்சியும் இருக்காது. எதேச்சையாக நிகழும் இது மாதிரியான துரத்தல்கள்தான் கடவுளின் விருப்பம்... அவன் நடத்துகிறான் என்கிற முடிவை நோக்கி நம்மைத் தள்ளுகின்றன. சேதுமாதவ ஐயர் கையில் அப்பாவு எழுதிய பாடல்களின் தொகுப்பு கிடைத்தது கூட அது மாதிரியான நிகழ்வுதான்.

அப்பாவு கொடுத்த நோட்டுப் புத்தகத்தில் முத்துமுத்தான கையெழுத்தில் எழுதப்பட்ட பாடல்களை மனதுக்குள் படிக்கத் தொடங்கினார் சேதுமாதவ ஐயர். சில விநாடிகளில் அவர் முகம் பிரகாசமானது. ‘அடடே இது நெல் வியாபாரம் செய்யற ஜீவன் இல்லையே... இது வேறு எதற்காகவோ கதறுகிறதே...’ என மனசுக்குள் கணித்துக்கொண்டார்.
‘‘அப்பாவு இதையெல்லாம்...’’

‘‘கந்தனின் கருணையால், தினமும் பத்து பத்தாக எழுதினேன். நூறாகி இருக்கிறது. பிழைகள் இருந்தால் திருத்திக் கொள்கிறேன்’’ - அடக்கமாய்ச் சொன்னான் அப்பாவு. ‘‘பிழையா? இதிலா? இது மகா பிரசாதம். ரொம்ப உயர்ந்த மனநிலையில இதை எழுதி இருக்கே. அந்த உயரத்துல இருந்து படிச்சாதான் இது புரியும். ஒரு சோறு பதம்னு சொல்வாங்களே... அந்தப் பதத்தைப் பார்த்துட்டேன். ரொம்ப சந்தோஷம். உன்னோடது தேவாமிர்தம். நிதானமா ஒவ்வொண்ணா படிக்கணும். இதைக் கொண்டு போகவா?’’ - வேண்டுதலாகக் கேட்டார் ஐயர். ‘தன் முன்னால் நிற்பது பதின்மூன்று வயதுச் சிறுவனல்ல... இந்த உடம்புக்குள் இருப்பது மிக உயர்ந்த ஜீவன்’ என்று கண்டுகொண்ட தெளிவிருந்தது அந்தக் கோரிக்கையில்.
‘‘நான் எழுதியதை நீங்கள் படிப்பது என் பாக்கியம்’’ எனகை கூப்பினான், அப்பாவு.

வீட்டிற்கு வந்த சேதுமாதவ ஐயர், ஒரே மூச்சில் அந்தப் பாடல்களைப் படித்தார். சந்த நயத்திலும் சொன்ன தரத்திலும் சொர்ணமாய் மின்னின வரிகள். நிச்சயம் இவன் தெய்வீகப் பிறவிதான். ‘என்னை ஏன் இங்கே தனியே தவிக்கவிட்டாய்... என்னோடு இரு!’ என குகனிடம் இவன் மனம் கெஞ்சுகிறது. தொகுப்பைத் தூக்கிக்கொண்டு ஓடினார் ஐயர். எங்கே தெரியுமா? ராமேஸ்வரத்தின் இன்னொரு பகுதியில் வசிக்கும் தன் நண்பர் புதுக்கோட்டை வித்வான் குமாரசாமி பிள்ளையிடம்.

குமாரசாமி பிள்ளையும் ரசனையான மனிதர். நல்ல படிப்பாளி. அப்பாவு எழுதிய பாடல்களை அவரும் படித்தார். பரவசமானார். ‘‘பாடலில் அருணகிரிநாதரின் தமிழ் ஆளுமை இருக்கிறது. திருவாசகம் போல உருக்குகிறது’’ என்றார்.இருவரும் அப்பாவுவின் பாடல்களுக்காக ஆளுக்கொரு வாழ்த்துக் கவிதைகளை எழுதினார்கள். இதைப் புத்தகமாகக் கொண்டுவந்தால் சிறப்பாக இருக்கும் என ஊக்கமூட்டும் குறிப்பையும் எழுதினார்கள். அறிவுக்கு வயசு கிடையாது. அது எங்கிருந்தாலும் போற்ற வேண்டும் என இருவரும் எண்ணினார்கள்.

குறிப்புகள் இணைக்கப்பட்ட புத்தகத்தோடு அப்பாவுவின் நெல் மண்டிக்கு வந்தார், சேதுமாதவ ஐயர். புத்தகமாகக் கொண்டு வரும் ஆவலைச் சொன்னார். ‘‘குகன் விரும்பினால் நிச்சயம் நடக்கும்’’ என்றான், அப்பாவு. ‘‘அப்பாவு, நாளை விஜயதசமி. உனக்கொரு வேலை இருக்கிறது. இன்று இரவே என் வீட்டிற்கு வந்துவிடு’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சேதுமாதவ ஐயர்.
‘ஐயர் ஏன் அழைக்கிறார்? ஏதும் முக்கியமான விஷயமில்லாமல் அவர் அழைக்க மாட்டாரே’

 ராமேஸ்வரத்தில் இருக்கும் ஐயரின் வீட்டிற்கு அப்பாவு வந்து சேரும்போது இருட்டி விட்டிருந்தது. அப்பாவுவை வரவேற்ற ஐயர், ‘‘கோயிலில் எனக்கொரு வேலை இருக்கிறது. நீ சாப்பிட்டு விட்டு உறங்கு. அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்திரிக்கணும்!’’ எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். பொழுது புலர்ந்தது. அப்பாவுவை அழைத்துக்கொண்டு கடற்கரையோரத்தில் இருக்கும் அக்னி தீர்த்தம் நோக்கி விரைந்தார், சேதுமாதவ ஐயர். இருவரும் அதில் நீராடினார்கள். கை நிறைய நீறெடுத்து நெற்றி நிறைய அணிந்து நின்ற அப்பாவுவைப் பார்க்கும்போது பாலமுருகனாய் தெரிந்தான்.

‘‘அப்பாவு’’ மதுரமாய் அழைத்தார், சேதுமாதவ ஐயர்.
‘‘சொல்லுங்க சுவாமி!’’
‘‘உதயம் எப்போதும் நல்ல சகுனம். கொடுக்கத் தயாராக இருக்கும்போது தகுதியான பாத்திரமும் கிடைத்துவிட்டால், அதைவிட சந்தோஷம் வேறெதுவும் இல்லை. அது மாதிரியான சந்தோஷத்தில் திளைக்கிறேன். இதெல்லாம் நானே செய்யவில்லை. நான் அனுதினமும் தொழும் குமரனின் குரல்படி செய்கிறேன். கவனமாகக் கேள்...

பஞ்சபூதங்கள் அனைத்தும் உயர்ந்தவைதான். ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. காற்று தன்னோடு வாசனையை அழைத்தபடி வலம் வரும். அது நல்ல வாசனையாய் இருந்தால் மணம் வீசும் காற்று. கூட சேர்ந்தது துர்வாசனையாய் இருந்தால் நம்மால் சகிக்க முடியாது. தண்ணீரும் அப்படித்தான். எதனோடு சேருகிறதோ அது மாதிரியே ஆகிவிடும். கங்கையில் விழுந்த துளி புனிதம். சாக்கடையில விழுந்த துளி சோகம்.

ஆனால், அக்னி வேறு மாதிரி. அது எப்போதும் தன் இயல்பை மாற்றாது. அக்னியில் நாம் எதைப் போட்டாலும் அதைத் தன்னோடதாக்கிக் கொள்ளும். முருகன் தீயில் பிறந்தவன் இல்லையா! அரனின் நெற்றிக் கண் தீத்துளிகள்தானே ஆறுமுகனாக அவதாரம் செய்தது. அதனால், அக்னி இன்னும் உசத்தி. இதோ, இந்த அக்னி தீர்த்தமும் மகா உசத்தி. இது உன்னை புடம்போடும்.
இன்றைக்கு விஜயதசமி.

நல்லதுக்கும் கெட்டதுக்குமான போரில் அசுர சக்தியை தேவ சக்தி வெற்றி கொண்ட தினம். அன்னை பராசக்தி அருள் நிறைந்த நாள். இந்த நல்ல நாளில் எதை ஆரம்பித்தாலும் செழிக்கும். உனக்கு மந்திர தீட்சை தரப் போறேன். ஒரு அரசாங்க முத்திரை உள்ள ஓலை இருந்தால் மன்னரை நாம் சுலபமாகப் பார்க்க முடியுமில்லையா? அது மாதிரி, சமயத்துக்குள் நுழையவும், குறிப்பிட்ட தேவதைகளை... கடவுளை... முறையாக அணுகவும் ஓர் உத்தரவுச் சீட்டு மாதிரி இந்த தீட்சை.

மனதுக்கு சும்மா இருக்கத் தெரியாது. எதையாவது படம் படமா வரைந்துகொண்டே இருக்கும். ஒண்ணு, அது சந்தோஷமாய் இருக்க ஆசைப்படும். இல்லை, சோகமா வேஷம் போடும். யானையின் துதிக்கை போல இடதும் வலதும் முன்னும் பின்னுமாய் அசைந்துகொண்டே இருக்கும். துதிக்கைக்கு ஒரு சின்ன சங்கிலியைக் கொடுத்தால், அதைப் பிடித்துக் கொண்டு அமைதியா நிற்குமே... அது போல மனசுக்கு நல்ல மந்திரத்தைக் கொடுத்து விட்டால் போதும். அதை பிடித்துக்கொள்ளும். மனம் ஒன்றி விடும். மனம் ஒன்றினால் உள்முகப் பயணம் ஆரம்பமாகி விடும். இன்றைக்கே அது நடக்க வேண்டும் என்றில்லை... மந்திரம் காட்டில் தூவின விதை மாதிரி. தானா முளைக்கும்.

விருட்சமாகி வளர்ந்து நிற்கும். உனக்கு நான் தரப் போற மந்திரம் முருகனுடையது. ஷடாக்ஷர மந்திரம். ‘சரவணபவ’ என்கிற இந்த மந்திரம் பிறவிக் கடலைக் கடக்க உதவும் கலம். கண் மூடு. முருகனை இதயத்துக்குள் அமர வை. இதுதான் மந்திரம். வாய்விட்டுச் சொல்லாதே... மீன் குஞ்சு போல வாய் திறந்து மூடட்டும். ஆனால் ஓசை இதயத்துள் இருக்கும் முருகனுக்குக் கேட்கட்டும். சொல்லும் மந்திரம் அந்த அழகனை உனக்கு உரியவனாக்கும். எங்கே சொல்லு... ஓம் சரவண பவ... ஓம் சரவணபவ... ஓம் சரவணபவ... முருகன் மந்திரமாய் அப்பாவுவின் இதயத்துக்குள் இறங்கினான். அப்பாவு கண்களில் கண்ணீர்... சந்தோஷக் கண்ணீர். கன்னம் நனைத்து வழிந்த கண்ணீர் மௌனமாய் சொன்னது, குகன் மீதான யுகாந்திரக் காதலை!

ஆபத்தில் காத்த பாம்பன் தாத்தா!
எம்.எஸ்.சேர்வராயர், பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருள்நெறிச் சபை, திருச்சி ‘‘பாம்பன் சுவாமிகளை தாத்தா என்றுதான் நான் குறிப்பிடுவேன். என் மனைவி சித்ராவுக்கு சுவாமிகள் மீது அப்படி ஒன்றும் அபிமானம் இல்லை. 1996ம் வருடம் சென்னையில் பாம்பன் சுவாமிகளின் குரு பூஜையில் கலந்துகொண்டு, மே 8ம் தேதி திருச்சி திரும்ப எண்ணியிருந்தோம். முந்தைய இரவு எனக்கும் என் மனைவிக்கும் வாக்குவாதம். ‘சதா தாத்தா தாத்தா என்கிறீர்களே...’ என அவள் கடிந்துகொண்டாள். ‘அவர் கருணையும் மகிமையும் உனக்கு சீக்கிரமே புரியும்’’ என்றேன். இரவு 11 மணி. நாங்கள் பயணம் செய்த தனியார் பேருந்தின் டிரைவர் வண்டியைத் தாறுமாறாக ஓட்டினார்.

நள்ளிரவு திண்டிவனத்திற்கு 7 கிலோ மீட்டருக்கு முன்பாக, லாரி ஒன்றில் மோதி எங்கள் பேருந்து விபத்துக்குள்ளானது. லாரி டிரைவர், பஸ் டிரைவர் மற்றும் முன்னால் இருந்த சிலர் அதில் இறந்தும் போனார்கள். தட்டுத் தடுமாறி கீழே இறங்கி வாகனப் போக்குவரத்து வெளிச்சத்தில் ஒவ்வொரு வாகனமாக நிறுத்தச் சொல்லி உதவி கேட்டோம். ஒரு வண்டியும் நிற்கவில்லை. என் மனைவி பயத்தில் அழ ஆரம்பித்து விட்டாள். நான் ஆபத்துக் காலங்களில் சொல்லும் பாம்பன் சுவாமிகளின் ‘சண்முக கவச’த்தை சொல்லத் தொடங்கினேன்.

அப்போது 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் தான் பயணித்த பஸ்ஸை எங்களுக்காக நிறுத்தினான். ‘சார் ஏறுங்க, மேடம் ஏறுங்க’ என்று எங்களை ஏற்றி விட்டு, படிக்கட்டில் நின்றுகொண்டான். பேருந்து திண்டி வனத்தில் ஓர் உணவு விடுதியில் நின்றபோது, நான் அந்த இளைஞனுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்து, ‘நீங்கள் எந்த ஊர்?’ என்று விசாரித்தேன். ‘என் பேர் முத்துக்குமரன். திருச்சி ஜீவா நகர் வாமடம்’ என்றான். சமயபுரம் வந்தபோது ஃபுட்போர்டில் நின்ற இளைஞனைக் காணவில்லை. டிரைவரைக் கேட்டபோது, ‘அப்படி யாரும் வரவில்லையே’ என்றார். மறுநாள் வாமடம் பகுதியில் வீடுவீடாக ‘முத்துக்குமரன்’ என்பவரை விசாரித்தேன். ‘அப்படி யாரும் இல்லை’ என்றார்கள். எங்களைக் காப்பாற்ற வந்தது பாம்பன் சுவாமியேதான். அவர் ஆபத்பாந்தவர். என் மனைவிக்கும் இப்போது அவர் ப்ரியமுள்ள தாத்தா!’’

(ஒளி பரவும்)

படங்கள்: புதூர் சரவணன்

எஸ்.ஆர்.செந்தில்குமார்