காலேஜ் வாழ்க்கை கஷ்டம் பாஸ்!



சீனியர்ஸ் அட்வைஸ்

எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் ஆர்ட்ஸ் காலேஜ் பக்கம் அட்மிஷன் குவிந்திருக்கிறது. நல்ல விஷயம்தான் என்றாலும் ‘நம்ம பயக 80ஸ் படங்களைப் பார்த்துட்டு, காலேஜ்னா ஜாலின்னு ஒரு எதிர்பார்ப்போட வர்றாய்ங்களோ’ எனப் பக்கவாட்டில் ஒரு பயம் பிறாண்டுகிறது. அதான், வரப் போகும் முதலாண்டு ஜூனியர்களுக்காக சீனியர்களிடம் விசாரணையைப் போட்டோம்... ‘‘இப்போ காலேஜ் லைஃப் எப்படி இருக்கு பாஸ்?’’

‘‘இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல சார்... எல்லாம் மாறிப் போச்சு!’’ - ஏதோ அம்மா சப்பாத்தியால் பாதிக்கப்பட்ட ஃபாஸ்ட் ஃபுட் அசோசியேஷன் மாதிரி பேசினார்கள், பீச் பக்கம் சிக்கிய செகண்ட் இயர் கைஸ். ‘‘குட்டிச் செவுருல உக்கார்ந்து குட்டிகளுக்கு மார்க் போடுற படங்களை நாங்களும் பார்த்திருக்குறோம். இப்பல்லாம் சிட்டிக்குள்ள கால் கிரவுண்ட் கிடைச்சாலே மால் கட்டிடுறாங்க. பழைய குட்டிச் செவுரெல்லாம் செங்கல்பட்டு வரைக்கும் எங்கயும் கிடையாது. மார்க் போடவும் லைக் போடவும் இப்ப ஃபேஸ்புக் இருக்கறதுனால எவனும் செட்டு சேருறதில்ல.

அப்புறம், கல்ச்சுரல் மேடை கிடைச்சா தட்டு ஒண்ணை தட்டித் தட்டி ‘பொட்டு வச்ச வட்ட நிலா’ பாடுற டிரெண்டெல்லாம் போயிருச்சு. ஆளாளுக்கு ‘சங்கீத ஜாதி முல்லை’ பாடி டார்ச்சர் பண்றானுங்கன்னு இப்ப நெறைய கல்ச்சுரல்ஸ்ல பாட்டுப் போட்டியையே தூக்கிட்டாங்க. ‘பரவாயில்ல... நாங்க பொண்ணுங்களை டான்ஸ் ஆடி பிக்கப் பண்ணுவோம்’ன்னு கிளம்பிடாதீங்க. ‘அதுக்கெல்லாம் ரொம்ப ப்ராக்டீஸ் பண்ணணும்... ஹண்ட்ரட் பர்சன்ட் அட்டெண்டன்ஸ் இருக்குறவன் மட்டும் போ’ன்னு ஆரம்பத்துலயே ஆசிடை ஊத்திடுறாங்க. அட்டெண்டன்ஸெல்லாம் இருந்தா, நாம நல்லா படிச்சே பிக்கப் பண்ண மாட்டோமா?

காலேஜ்னா, ஊட்டி, கொடைக்கானலுக்கு டூர் போவாங்க... அங்க ஒரு கான்வென்ட் ஃபிகரை ப்ரபோஸ் பண்ணினா, அப்படியே டூயட்டை முடிச்சுட்டு திரும்பிடலாம்னு கனவு காணாதீங்க. இப்ப எஞ்சினியரிங் காலேஜ்லயாவது ஐ.வி இருக்கு. ஆர்ட்ஸ் காலேஜ்ல கூவிக் கூவி கேட்டாலும் ஒண்ணும் இல்ல. ‘பிக்னிக்கை விடுங்க... நம்மளை நம்பி பாத்ரூமுக்கு அனுப்பவே பல கோணத்துல யோசிக் கிறாங்க! என்றவர்கள் சட்டென ஹஸ்கி வாய்ஸுக்கு சேனல் மாறினார்கள்.

‘‘அப்புறம் பாஸ்... இப்போல்லாம் ஆர்ட்ஸ் காலேஜ் பசங்களுக்கு ஃபிகரே சிக்குறதில்லை தெரியுமா? பொண்ணுங்க டுடோரியல்ல படிச்சாலும், நாம ஐ.ஐ.டியில படிக்கணும்னு எதிர்பாக்குறாங்க. படிச்சி முடிச்சி, டி.சி.எஸ்ல இருக்குறதா ஃபேஸ்புக் ப்ரொபைல்ல கூட புளுக வேண்டியிருக்கு. நேர்ல சிக்கிட்டா, கலைஞ்ச தலையை வச்சே காலேஜ் பேரை கரெக்டா சொல்லிடறாங்க. இந்தப் பாலைவனத்துல உயிர் பிழைக்க முடியாம நாங்களே பல்லி, பாம்பைத் தின்னுக்கிட்டிருக்கோம். அதையும் பங்கு போட்டுக்க சில பாவப்பட்ட ஜீவனுங்க வர்றதை நினைச்சாத்தான்...’’ - நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நம்மிடம் அவர்கள் அழுது காட்ட, ‘‘அப்போ பாசிட்டிவா ஒண்ணும் இல்லையா பாஸ்!’’ என்றோம்.

‘‘இருக்கு தல... காலேஜ்னா அங்க ஒரு ஹீரோ இருப்பான், பக்கத்து கேர்ள்ஸ் காலேஜ்ல ஒரே ஒரு ஹீரோயின் இருப்பா, அவங்களுக்கு ஒரு வில்லன் இருப்பான்ங்கிற கான்செப்ட் எல்லாம் இப்ப இல்ல. கேர்ள்ஸ் காலேஜ்ல எல்லாருமே ஹீரோயின்தான். அதே மாதிரி, நம்ம காலேஜ்ல நம்மளைத் தவிர மத்த எல்லாருமே வில்லனுங்கதான். என்ன, அடுத்தவன் லன்ச் பாக்ஸ்ல இருக்குற மீனு துள்ளி நம்ம  வாயில விழாதான்னு காத்திருக்குற சாஃப்ட் வில்லன்ஸ்! இது நல்ல விஷயம்தானே?’’

‘‘சரி, பொண்ணுங்க காலேஜ்ல என்ன கதை?’’ - சென்னையின் பிரபல பெண்கள் கல்லூரியில் சிலரைப் பிடித்தோம்... ‘‘கட்டம் போட்ட யூனிஃபார்மும் கருப்பு சிவப்பு பென்சிலும் இல்லையே தவிர, மத்தபடி நாங்களும் எலிமென்ட்ரி ஸ்கூல் எலிமென்ட்தான். ஸ்கூல் மாதிரியே இங்கேயும் ஹோம் வெர்க், டைரி, ரெக்கார்ட் நோட்டுன்னு எல்லாமும் இருக்கு; நல்லாவே இருக்கு. ‘தோளுக்கு மேல வளந்தா தோழிகள்... ஃப்ரொபசர்ஸ் எல்லாம் இங்க ஜாலியா பழகுவாங்க. எல்லாத்துக்கும் அட்வைஸ் கொடுப்பாங்க’ன்னெல்லாம் நம்பிடாதீங்க... படிப்புன்னா படிப்பு மட்டும்தான். அவ்வளவு டெர்ரர்!

செல்போன் வந்துடுச்சு... தகவல் தொடர்பு ஈஸியா போச்சு... அதெல்லாம் நமக்குத்தான் நல்லதுன்னு நினைச்சிட்டிருக்கீங்களா? மாத்திக்கோங்க. ஸ்கூல், காலேஜ்தான் அதை சூப்பரா பயன்படுத்திக்குது. ஒரு நாள் காலேஜ்க்கு லேட், ஆப்சென்ட்னா... அன்னிக்கு மதியமே நமக்கொரு மிரட்டல் எஸ்.எம்.எஸ் வரும். தொடர்ந்து அப்படி ஆச்சுன்னா, அப்பா - அம்மாவுக்கு புகார் எஸ்.எம்.எஸ் போகும். ஸோ, காலேஜ் வந்துட்டா காலாற கட்டடிக்கலாம் கிளாஸுக்குள்ள விட்டடிக்கலாம்னு நெனப்போட வராதீங்க. பொழப்பு கெட்டுடும்!’’ நறுக் சுறுக்கென சொல்லி நகர்ந்தார்கள். அடடா, கல்லூரி சாலையில் இவ்வளவு டிராஃபிக்கா..!

மார்க் போடவும் லைக் போடவும் இப்ப ஃபேஸ்புக் இருக்கறதுனால எவனும் செட்டு சேருறதில்ல

 டி.ரஞ்சித்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்