குழலுடன் சில நாட்கள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு புல்லாங்குழல் மாலியின் இரு சீடர்கள் எனக்கு அறிமுக மானார்கள். ஒருவர், ரமணி. அவர் சாதனை வாழ்க்கையை நான் சொல்லி உலகம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இரண்டாம் சீடர், ஸ்ரீனிவாசன். அதிகம் பிரபலமாகாதபோதிலும் அவருடைய ஆர்வம் அசாத்தியமானது. புல்லாங்குழல், மிருதங்கம், வயலின் ஆகிய வாத்தியங்களை நன்கு வாசிக்கத் தெரிந்ததோடு அவருக்கு நாடகத்தின் மீதும் ஆர்வம் உண்டு.
நாங்கள் எங்களை உலகக் கலைஞர்கள் என்றுதான் நினைத்து இயங்கினோம். அவர் தூண்டுதலில் நான் நான்கு நாடகங்கள் எழுதினேன். ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களில் அன்று எனக்கு மிகவும் பிடித்தது ‘ஜூலியஸ் சீஸர்’. அதில் சீஸரின் மனைவி ஒரு காட்சியில் வருவாள். அதை விடப் பரவலாக அறியப்பட்டது ஒரு பழமொழி: ‘சீஸரின் மனைவி சந்தேகத்துக்கு இடமளிக்கக் கூடாது’ (Caesar‘s wife must be above suspicion).
நான் அந்த சீஸரின் மனைவியைப் பிரதானமாக வைத்து ஒரு நாடகம் எழுதினேன். ஷேக்ஸ்பியருக்கு சவால்! டபுள்யூ.டபுள்யூ.ஜேக்கப்ஸ் என்பவர் விஷீஸீளீமீஹ்'s றிணீஷ் என்றொரு சிறுகதை எழுதியிருந்தார். அதை நாடகமாக எழுதினேன். பின்னர் தெரிந்தது கதாசிரியரே அதை ஒரு நாடகமாகவும் எழுதியிருக்கிறார் என்று! நானும் ஸ்ரீனிவாசனும் இன்னும் ஏதேதோ திட்டங்கள் வகுத்தோம். அப்போதுதான் டேப் ரெக்கார்டர்கள் வரத் தொடங்கியிருந்தன.
எனக்கு ரா.அ.பத்மநாபனைத் தெரியும். அன்று அவர் அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் மூலம் அங்கு இருக்கக்கூடிய டேப் ரெக்கார்டர்களைக் கடன் வாங்கத் தீர்மானித்தோம். ஆனால் அவர் அலுவலகத்தில் அன்று ஒரே ஒரு ரெக்கார்டர்தான் இருக்கிறது என்பது, நாங்கள் கேட்டபிறகுதான் அவருக்கே தெரிந்தது. சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நாள் ஸ்ரீனிவாசன் காணாமல் போய் விட்டார். ‘பகல் கனவு போதும்’ என்று ஐதராபாத் வானொலியில் நிலைய குழல் வித்வானாக வேலைக்குச் சேர்ந்து விட்டார்! நான் ஷேக்ஸ்பியருடனும் இப்ஸனுடனும் போட்டி போட நினைத்ததைக் கைவிட வேண்டியிருந்தது. ஓர் இசைக் கட்டுரையில் ஸ்ரீனிவாசன் பற்றிச் சற்று விரிவாக எழுதினேன். அவர் இனிஷியல் நினைவில் இல்லை. பின்னர் அவர் இறந்தும் விட்டார் என்று கேள்விப்பட்டேன்.
திடீரென்று ஒரு சனிக்கிழமை மாலை எட்டு மணிக்கு ஒரு தம்பதியர் வீட்டுக்கு வந்தனர். தான் மாலி சிஷ்யப் பரம்பரையைச் சேர்ந்தவர் என்று அந்த கணவர் கூறியதும், அவரை நான் முதலில் கேட்ட கேள்வி ‘ஸ்ரீனிவாசனின் இனிஷியல்’! வந்தவரும் சென்னை வானொலியில் குழல் வித்வானாகப் பணி புரிபவர். என் நண்பரின் முழுப் பெயர் பென்னத்தூர் என்.ஸ்ரீனிவாசன். ஆம், சென்னை மயிலாப்பூரில் இருக்கும் பி.எஸ். ஹைஸ்கூல் நிறுவனரின் பேரன்.
என்னைப் பார்க்க வந்த ஸ்ரீதரன், புல்லாங்குழல் வித்வான் மட்டுமல்ல. ஓர் எழுத்தாளரும்கூட. நவரஞ்சனி ஸ்ரீதர் என்ற பெயரில் அவர் எழுதிச் சென்னை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்ட நூல் ‘குடும்ப வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக் கொள்வது எப்படி?’ தலைப்பே அந்த நூல் எதைப் பற்றி என்று தெரிவித்து விடுகிறது. ஒரு நல்ல மனிதரின் நல்லெண்ணம் நூல் முழுதும் ஒலிக்கிறது. பெரிய மதத் தலைவர்கள், மகான்கள், யோகிகள் தவிர வேறு பலரும் உலகத்தார் - குறிப்பாக இளைஞர்கள் - குறித்துக் கவலை கொண்டு நூல்கள் இயற்றியிருக்கிறார்கள். இந்தியாவில் இதற்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. ஔவையார் பற்றிய கதைகளை அகற்றி விட்டால் அவர் ஓர் அற்புதமான ஆசிரியர். நாலடியார் யார் எழுதினார் (எழுதினார்கள்?) என்று நமக்குத் தெரியாதபோதிலும் அவர்கள் சிறந்த ஆசிரியர்கள்.
ஆங்கில மொழியில் ஹாரி பாட்டர் நூல்கள் ஒரு சிறு புரட்சியை நிகழ்த்திவிட்டன. அதற்குச் சில ஆண்டுகள் முன்பு ‘மில்ஸ் அண்ட் பூன்’ நாவல்கள். இவை பொழுதுபோக்குப் படைப்புகள்; திறமையாக விளம்பரம் செய்து விற்கப்பட்டவை என்பதைத் தவிர வேறு என்ன கூறமுடியும்? நான் சிறுவனாக இருந்தபோது சாமுவேல் ஸ்மைல்ஸ் என்பவர் எழுதிய தடி தடி புத்தகங்கள் வெளிவரும். தலைப்புகளே அவை என்ன கட்டுரைகளைக் கொண்டவை என்று தெரிவித்து விடும்.
‘சுய உதவி’, ‘தைரியம்’, ‘பிறர்க்கு உதவுதல்’, ‘சிக்கனம்’... இப்படி ஒன்பது நூல்கள். இவை அப்போதெல்லாம் கடைக்கு வந்த ஓரிரு நாட்களில் விற்றுப் போய்விடும். இந்த நூல்களின் முக்கிய அம்சம், அவை ஏராளமான உதாரணங்களை நிஜ வாழ்க்கையிலிருந்து கூறுவதுதான்! ஒரு நூல் படித்தால் சுமார் ஐந்நூறு உதாரணங்கள்; அதாவது, ஐந்நூறு விசேஷ மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். இருபதாம் நூற்றாண்டின் முன்பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்த இந்த நூல்கள் இன்று நூலகங்களில் கூடக் கிடைப்பதில்லை.
இன்றும் பலருக்கு ‘ஜொனாதன் லிவிங்ஸ்டன் ஸீகல்’ நினைவிருக்கும். இதுவும் நல்லெண்ணங்கள் கொண்ட நூல். சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் இந்த நூலைப் படிக்காதவர்களை ஏளனமாகப் பார்ப்பார்கள். ‘நாம் சாதனை புரிய முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்’ என்பது அந்த நூலின் மறைமுகச் செய்தி.
பரபரப்பான நூல்கள்தான் படிக்கப்படும், விற்கும் என்ற விதிக்கு விலக்காக ஒவ்வொரு காலத்திலும் நன்னடத்தை பற்றியே கூறும் சில நூல்கள் ஏராளமாக விற்கின்றன. ‘சாமுவேல் ஸ்மைல்ஸ் நூல்களில் நிறையச் சிறு சிறு கதைகள் இருந்தன, அதனால் விற்றன’ என்று ஒரு பலவீனமான காரணத்தைக் கூறலாம். ஸீகல், ஹாரி பாட்டர் விஷயத்தில் அப்படிக் கூற முடியாது. ஹாரி பாட்டர் கதைகளை பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் எழுதியிருந்தால் ஐரோப்பாவில் அந்த ஆசிரியரை நாற்சந்தியில் நிறுத்தி, சூனியக்காரி என்று குற்றம் சாட்டி தீக்கிரையாக்கி இருப்பார்கள்.
எந்த மதத்திலும் மாய மந்திரம் உலக நன்மைக்கு ஏற்றது அல்ல என்றுதான் வலியுறுத்தப்படுகிறது. சமணர்-சம்பந்தர் வாதத்தில் சமணர்கள் மந்திர சக்தியை நம்பியிருந்தாகக் கூறப்படுகிறது. கடுமையான வாழ்க்கை நெறியை வலியுறுத்துவது சமணம். அதில் எப்படி மாயம், மந்திரம் புகுந்தது? அதே போல பௌத்தத்தில். புத்தர் மறு உலகம், புற உலகம் என்று ஒரு சொல் கூறவில்லை. அந்த மதத்தில் எப்படி மாய மந்திரம் வந்தது?
நவரஞ்சனி ஸ்ரீதர் எழுதியிருக்கும் நூலில் ஓரிடம் என்னைப் பல பழைய நினைவுகளுக்கு இட்டுச் சென்றது. சாப்பாட்டுத் தட்டை கணவன் விட்டெறிவதைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார். மனைவியை இது எவ்வளவு புண்படுத்தும்? இது இன்றும் பல குடும்பங்களில் நடக்கிறது. ஒரு மணிக்கொடி எழுத்தாளர் வீட்டில் இதைக் கண்டு நான் மூச்சடைத்து நின்றேன். ‘பாரதியார்... பாரதியார்...’ என்று ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை கூறியவர்களுக்கு பாரதியார் துன்பத்திலும் தரித்திரத்திலும் மனைவியை எப்படிப் போற்றி வாழ்ந்தார் என்பது தெரியாமல் போய் விட்டது. சாப்பாட்டுத் தட்டை கணவன் விட்டெறிவதைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார். மனைவியை இது எவ்வளவு புண்படுத்தும்? இது இன்றும் பல குடும்பங்களில் நடக்கிறது.
படிக்க...கடந்த பத்தாண்டுகளில் தென்னிந்திய இசை பற்றியும், இசைக்கலைஞர்கள் பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. உணர்ச்சிவசப்படாமல் அன்றைய காலகட்டத்தின் சமூகநிலைமையும் உணர்ந்து சில நூல்கள் வந்திருக்கின்றன. அதில் ‘தேவதாசியும் மகானும்’ (ஜிலீமீ ஞிமீஸ்ணீபீணீsவீ ணீஸீபீ tலீமீ ஷிணீவீஸீt) மிகவும் குறிப்பிடத்தக்கது. சங்கீத வித்வான்கள் கீர்த்தனைகளைப் பாடுகிறார்கள், ஆராதனை புரிகிறார்கள், ஆனால் அந்த சங்கீத மகான் வசித்த குடிலையோ அடக்கம் செய்யப்பட்ட சமாதியையோ கவனிக்காமல் விட்டிருந்தார்கள். பெங்களூரு நாகரத்னம்மா தன் சொத்தையெல்லாம் செலவழித்து தியாகய்யாவின் சமாதியை ஒழுங்குபடுத்தி, ஆராதனைக்கும் ஏற்பாடு செய்தார்கள். நாகரத்னம்மாவின் தொண்டுக்கு அஞ்சலி செலுத்துவதாக திரு வி.ஸ்ரீராம் நூல் எழுதியிருக்கிறார்.
ஸ்ரீராம் பல துறைகளில் சாதனை புரிந்திருந்தாலும் தென்னிந்திய இசைக்கலைஞர்கள் பற்றி அவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் தனித்துக் குறிப்பிடத்தக்கவை. இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பும் வந்துள்ளது. (தேவதாசியும் மகானும் - பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும் காலமும் - வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம், விலை ரூ:175/-, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில்-629001. தொலைபேசி: 04652-278525.
அசோகமித்திரன்
(பாதை நீளும்...)