தமிழ் ஸ்டுடியோ அருண்
வலி மறந்த கதை
‘பள்ளியில் பணியாளர் இல்லாவிட்டால் தண்ணீர் குடிக்க முடியாது. குடியிருக்கும் இடத்தில்கூட எவ்வளவு பணம் கொடுத்தாலும் சலவையாளர் துணியைத் துவைத்துக் கொடுக்க முன்வர மாட்டார். வீட்டில் சகோதரிகள்தான் அந்த வேலையைச் செய்வார்கள். பணம் எவ்வளவு கொடுத்தாலும் முடிவெட்டுபவர்கூட எங்களுக்கு வெட்டிவிட மாட்டார். எங்கள் சகோதரிதான் வெட்டிவிடுவார்...’
- வலி மிகுந்த இந்த வார்த்தைகளுக்கும் வாழ்க்கைக்கும் சொந்தக்காரர், இந்த தேசத்தின் அரசியல் சட்டத்தை வகுத்துக் கொடுத்த டாக்டர் அம்பேத்கர். ஒரு மனிதனுக்கும், இன்னொரு மனிதனுக்குமிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, மனித இனத்திற்கே சாபக்கேடாக விளங்கி வருவது சாதி. தொழில்நுட்பமும், உலகமயமாக்கலும் இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை பரவி தன்னுடைய அசுரத்தன்மையை பறைசாற்றிக் கொண்டிருந்தாலும், சாதி இன்னமும் ஆழமாகவே வேரூன்றி இருக்கிறது. ‘இந்து மதத்தை ஒழித்தால் மட்டுமே சாதிப் பிரிவினையை ஒழிக்க முடியும்’ என்கிற அம்பேத்கரின் கூற்றுக்கு பின்னால் இருக்கும் உண்மை அத்தனை எளிதில் புறந்தள்ளக் கூடியது அல்ல.
சாதி போன்ற சமூக அவலங்களை எதிர்க்கும் போராளிகளுக்கு பக்கபலமாக இருப்பது கலையின் ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கிய காரணம். சாதிக்கு எதிரான கலகக்குரல் இலக்கியங்களிலும், திரைப்படங்களிலும் ஆங்காங்கே ஒலித்த வண்ணம் இருக்கிறது. சாதியின் கொடூரத்தை அப்படியே பதிவு செய்து, அதற்கு எதிரான கிளர்ச்சியை ஏற்படுத்துவது ஒருவகையான படைப்பு; சாதிக்கு எதிராக போராடும் குணத்தை விதைப்பது இன்னொரு வகையான படைப்பு. இதில் ‘நடந்த கதை’ குறும்படம் இரண்டாவது வகையைச் சேந்தது. எழுத்தாளர் அழகிய பெரியவனின் ‘குறடு’ என்கிற வலி மிகுந்த சிறுகதையை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பொன்.சுதா.
செருப்பணிந்து நடக்கும் தன் பேரனைக் கண்டு பூரிப்படையும் ஒரு தாத்தாவின் குரலிலிருந்து தொடங்குகிறது இந்த குறும்படம். வீரையம்பட்டி என்கிற கிராமத்தில் மேலத்தெருவில் வசிக்கும் மேட்டுக்குடிகள் செருப்பணிந்து நடக்கிறார்கள். ஆனால் கீழத்தெருவில் வசிக்கும் கீழ்சாதி என்று வரையறை செய்யப்பட்ட மனிதர்கள் செருப்பணியக்கூடாது என்கிற அடிபணிதலின் கீழ் வாழ்கிறார்கள். முள் குத்தினாலும், காலில் அடிபட்டாலும் செருப்பணிய முடியாது. இந்த அடிமை நிலையைக் கண்டு வளரும் வீரபத்திரன், இளைஞனான பிறகு அதிலிருந்து மீளப் போராடுகிறான். மேலத்தெருவில் எச்சில் துப்பியதற்காக கீழத்தெரு சிறுவன் கன்னத்தில் விழும் அறை, அவனை மேலும் கொதிப்படையச் செய்கிறது.
கோயிலுக்கு வெளியில் விடப்பட்டிருக்கும் மேலத்தெருவாசிகளின் செருப்புகள் அனைத்தையும், யாருக்கும் தெரியாமல் வெட்டவெளிக்கு கொண்டுவந்து ஆவேசத்துடன் வீசி எறிகிறான். ஆனாலும் கோபம் அடங்கவில்லை. தானும் செருப்பணிந்து நடக்க விரும்புகிறான். ஒருநாள் தன்னுடைய வீட்டு வழியே நடந்து வரும் ராணுவ வீரர், காலில் பூட்ஸ் அணிந்து நடப்பதைப் பார்த்து பரவசமடைகிறான். தானும் ராணுவத்தில் சேர்ந்தால், பூட்ஸ் காலுடன் மேலத்தெரு வழியாக நடந்து வர முடியும் என்று நினைக்கிறான்; ராணுவத்தில் சேர்கிறான். பயிற்சியின்போது அவனுக்கு கொடுக்கப்படும் பூட்ஸை பெற்றுக்கொண்டு இனம்புரியாத மகிழ்ச்சியில் திளைக்கிறான். பின்னர் அதே பூட்ஸ் காலுடன் மேலத்தெரு வழியாக ஓடிவருகிறான்.
மேலத்தெருவில் வசிக்கும் மேட்டுக்குடிகள் அவனை வழிமறித்து எச்சரிக்கை செய்கிறார்கள். அடுத்து என்ன நடந்தது என்பதை போராட்ட உணர்வுடனும், கீழ்த்தெருவில் வசிப்பவர்கள் செருப்பணிந்து நடந்த கதையையும் விவரிக்கும் குறும்படம்தான் ‘நடந்த கதை’. கதைசொல்லல் பாணியில் வெளியாகும் படங்கள், எளிதில் பார்வையாளனைச் சென்று சேரும். காரணம், நாம் எல்லாரும் கதையின் வழியே வளர்ந்தவர்கள்.
ஒரு கதையை நிறைய திருப்பங்களுடன், ஏமாற்றங்களுடன், வெற்றிகரமாக சொல்லி முடிப்பதை இமைக்காமல் கேட்டுப் பழகும் மரபணு மனிதனுக்குள் பொதிந்திருக்கிறது. இந்த குறும்படத்தை ஒரு கதைசொல்லியின் பார்வையிலிருந்து இயக்குனர் விவரிக்கிறார். ஆனால் இது ஒரு நல்ல திரைப்படத்திற்கான பாணியா என்றால், அது காட்சிப்படுத்தப்படும் விதத்தை பொருத்தது.
சினிமா ஒரு காட்சி ஊடகம். வார்த்தைகளையும் ஒலிகளையும் குறைத்து, காட்சியின் மூலம் பார்வையாளனுக்கு கதை சொல்ல முற்பட வேண்டும். இந்த குறும்படத்தில் ஒரு காட்சி, ‘‘ஒலகத்துல எங்கியாச்சும் நடக்குமாடி இந்த அநியாயம்! மேலத்தெருவுல எச்சி துப்பிட்டான் னு அஞ்சு விரலும் பதியற மாதிரி கன்னத்துல அறை விட்டுருக்காங்க’’ என்று கீழத்தெருவில் வசிக்கும் பெண்கள் பேசும் வசனம்தான் வீரபத்திரனை போராடத் தூண்டும் காரணியாக இருக்கிறது.
இந்த வசனத்திற்கு பதிலாக ஒரு சிறுவன் மேலத்தெருவில் எச்சில் துப்புவதையும், எதிரே ஒரு நாய் சிறுநீர் கழிப்பதையும் காட்சிப்படுத்தி, எச்சில் துப்பும் சிறுவனை அறைவதையும், நாயை கண்டுகொள்ளாமல் விடுவதையும் அடுத்த காட்சியாக்கி இருந்தால், அதன் வீரியமே தனி. உணர்ச்சிகளைக் காட்ட வசனங்களைப் பயன்படுத்தலாம், ஆனால் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஆனால் இதே குறும்படத்தில் ராணுவ வீரர் நடந்து செல்வதைப் பார்த்து, அவரிடம் வீரபத்திரன் சென்று விசாரிக்கும் காட்சி பிரமாதமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும். ராணுவ வீரர் உணர்ச்சி பொங்க எதையும் பேசாமல், நடந்தே செல்வார். அவரைப் பின்தொடரும் வீரபத்திரன் முகம் மலரும். வீரபத்திரன் ராணுவத் தேர்வுக்கு செல்வதையும், பயிற்சி பெறுவதையும் அடுத்தடுத்த காட்சிகளில் காட்டியிருப்பார்கள். இதுதான் சினிமா!
படிமங்கள் மூலம் மகிழ்ச்சியையோ, வேதனையையோ பார்வையாளனுக்குள் எளிதாகக் கடத்த முடியும். தொடர்ச்சியாக செருப்பணியாமல் நடக்கும் சிறுவர்களின் கால்களை படிமங்களாக காட்சிப்படுத்தும்போது, அந்த தொடர் பிம்பங்கள் பார்வையாளனுக்குள் ஒருவித வலியை ஏற்படுத்தும். கோயில் வாசலில் விடப்பட்டிருக்கும் மேட்டுக்குடிகளின் செருப்பை மொத்தமாக அள்ளிக்கொண்டு போய் வீரபத்திரன் வெட்டவெளியில் அவற்றை ஆவேசத்தோடு தூக்கி எறியும் காட்சியில், அடிமைப்படுத்தப்படும் மக்களின் வலியும், அதிலிருந்து மீண்டெழப் போராடும் இளைஞனின் கோபமும் ஒருசேர பார்வையாளனுக்குக் கடத்தப்படுகிறது. குறும்படத்தில் ஒளிப்பதிவு கோணங்கள் சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது.
இறுதிக்காட்சியில் பூட்ஸ் காலுடன் ஓடும் வீரபத்திரனை பின்தொடர்ந்து கேமரா நகர்வதும், கீழத்தெருவில் எல்லோரது வீடுகளிலும் செருப்புகள் இருப்பதுமாக கேமரா கதைசொல்லும் இடம் அது. படத்தில் ஹீரோயிசம் மிகுந்திருந்தாலும், அடிமைப்படுத்தப்பட்டு வலியை உணர்ந்தவர்கள் வெகுண்டெழும்போது ஹீரோயிசம் இருந்துவிட்டுத்தான் போகட்டுமே என்று தான் தோன்றுகிறது.
படம்: நடந்த கதை இயக்கம்: பொன்.சுதா
நேரம்: 21 நிமிடங்கள் ஒளிப்பதிவு: இராசாமதி
படத்தொகுப்பு: ஏ.எல்.ரமேஷ் இசை: மரியா மனோகர்
பார்க்க: www.youtube.com/watch?v=H7Pja1ujH9Y
தானும் ராணுவத்தில் சேர்ந்தால், பூட்ஸ் காலுடன் மேலத்தெரு வழியாக நடந்து வர முடியும் என்று நினைக்கிறான்; ராணுவத்தில் சேர்கிறான்.
தன்னுடைய தொடர் வாசிப்பால், எழுத்தாளர் அழகிய பெரியவனின் ‘குறடு’ சிறுகதையை அடையாளம் கண்டுகொண்ட இயக்குனர் பொன்.சுதா, அந்தக் கதையில் இருந்த போராட்ட குணத்திற்காகவே அதனை காட்சிப்படுத்த நினைத்திருக்கிறார். கடும் சிரமத்திற்கு மத்தியில், நண்பர்களின் உதவியால், இந்தக் குறும்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். குறும்படத்தில் ஆலமரத்தில் செருப்புகளைத் தொங்க விடுவது போல் ஒரு காட்சி வரும்.
அதற்காக ஒரு ஆலமரத்தைத் தேர்வு செய்து படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும்போது, ஊர் மக்கள் திரண்டு வந்து கடுமையாக விவாதம் செய்திருக்கிறார்கள். ‘‘இது கோயில் ஆலமரம், ஒவ்வொரு கிளையிலும் ஒரு சித்தர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதில் எப்படி நீங்கள் செருப்பைக் கட்டலாம்?’’ என கோபப்பட்டார்கள். அந்தக் காட்சியை பாதியில் நிறுத்திவிட்டு, பின்னர் வேறு ஒரு ஆலமரத்தைத் தேடி காட்சியை எடுத்திருக்கிறார்கள்.
(சித்திரங்கள் பேசும்...)
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி