சகுனியின் தாயம்



‘‘இங்க பார், அஞ்சு நிமிஷத்துல பஸ் கிளம்பணும். இல்லைன்னா கேஸ் போடுவேன். புரிஞ்சுதா?’’ உறுமினார் சேட்ஜி. ‘‘ஒரு மணிக்கு சென்னைல இருப்போம்னு சொன்னதாலதான் டிக்கெட் வாங்கினேன். ஒன்னரைக்கு ஒரு அப்பாயின்மென்ட் இருக்கு. அதை என்னால மிஸ் பண்ண முடியாது.

அண்டர்ஸ்டாண்ட்...’’ அவரளவு மற்றவர்கள் கத்தவில்லையே தவிர, பயணிகள் அனைவரும் அவரைப் போல்தான் பொறுமை இழந்திருந்தார்கள். யாரும் காத்திருக்கத் தயாராக இல்லை. இப்பொழுதே மணி எட்டாகிவிட்டது. மலையிலிருந்து இறங்கி கீழே போய் சாப்பிட ஒன்பதாகிவிடும். பிறகு திருச்சானூர் போய், சென்னை திரும்ப...

டூரிஸ்ட் பஸ்ஸின் கைடு, கையைப் பிசைந்தான். ‘‘அவங்க ரெண்டு பேர்தான் வரணும். பாவம், அந்தப் பொண்ணும் குழந்தையும். குழந்தைக்கு மொட்டை போடணும்னு சொன்னாங்க. கொஞ்சம் வெயிட் பண்ணலாமே!’’‘‘நோ...’’ இன்னொரு பயணி சத்தமிட்டார். ‘‘எத்தனை நேரம் காத்திருக்க? நீ என்ன சொன்னே? தரிசனம், வேண்டுதல் எல்லாத்தையும் முடிச்சுட்டு கரெக்டா ஏழே முக்காலுக்கு இதோ இந்த இடத்துக்கு வந்துடணும்னு காட்டுக் கத்தல் கத்தின. நாங்க முப்பத்து மூணு பேர் வந்துட்டோமா,
இல்லையா? நாங்க எல்லாம் முட்டாளா?’’

டிரைவர் பஸ்ஸை எடுத்துக் கொண்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வந்தார். ‘‘எங்கயும் காணுமே...’’
‘‘சரி... சரி... அவங்க வேற பஸ் பிடிச்சு வர்றபடி வரட்டும். நாம கிளம்பலாம்...’’ எல்லா பயணிகளும் ஒருமித்த குரலில் சொல்லவே கைடுக்கு வேறு வழி தெரியவில்லை. பஸ்ஸில் ஏறிக் கொண்டான். ஆனால், வாசல்படியில் நின்றபடியே பார்வையால் சுற்றுப்புறங்களை அலசினான். எங்கும் அந்தப் பெண்ணும், குழந்தையும் தென்படவில்லை. இளைஞனான அவன் முகத்தில் கவலை ரேகைகள் பதிய ஆரம்பித்தன.

பஸ்ஸில் பேச்சுச் சத்தம் குறைந்தது. வேண்டுதலுக்குப் போன ஒரு பெண்ணையும் குழந்தையையும் நாம் பாட்டுக்கு விட்டுவிட்டு வந்து விட்டோமே என்ற உறுத்தல் எல்லார் மனத்திலும் இருந்ததுதான் காரணம். அடிவாரத்தை பஸ் அடைந்ததும் டிரைவரிடம் சென்று அந்த கைடு ஏதோ சொன்னான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அவர் ஓரமாக வண்டியை நிறுத்தினார்.
‘‘எல்லாருக்கும் வணக்கம்...’’ பஸ்ஸின் மத்தியில் நின்றபடி கைடு பேசினான். ‘‘இனி நேரா சென்னைதான். என் உதவி தேவையில்லை. டிரைவர் பத்திர மாய் உங்களை கூட்டிட்டு போவார். நான் இங்கயே இறங்கிக்கறேன்...’’

‘‘ஏன்பா... எங்களோட நீயும் வரலாமே?’’ ஒரு அம்மாள் கேட்டாள்.
‘‘இல்லம்மா... ஒரு வேலை இருக்கு...’’
‘‘அப்படியென்னப்பா பொல்லாத வேலை...’’
‘‘திரும்ப மலைக்குப் போகணும். அந்தப் பெண்ணையும், பிள்ளையையும் கண்டு பிடிக்கணும். அவங்களை பத்திரமா சென்னைக்கு கூட்டிட்டு போகணும்...’’
‘‘அவ்வளவு அக்கறை உனக்கு எதுக்குப்பா...’’

‘‘ஏன்னா அவங்க ரெண்டு பேரும் என் உறவுக்காரங்க...’’
‘‘அடாடா. நெருங்கின சொந்தமா?’’ ‘‘ம்... என் பொண்டாட்டியும் மகனும்...’’ - சொன்ன கைடு இறங்கினான். ‘‘போகலாம் ரைட்...’’ டிரைவருக்கு குரல் கொடுத்தான்.
இதையெல்லாம் பார்த்த படியே யாருக்கோ ‘சிளிவிணி’ என தன் செல்போனில் மெசேஜ் அனுப்பினான் சேட்ஜி. பெருமூச்சுடன் டிரைவர் பஸ்ஸை கிளப்பினான். அது புள்ளியாக மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த அந்த கைடு, சாலையின் மறுபக்கத்துக்கு சென்றான். மலை பக்கம் செல்ல ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்க்கத் தொடங்கினான். வெள்ளை நிற பென்ஸ் கார் ஒன்று அந்தப் பக்கம் வந்தது. லிப்ட் கேட்கும் விதமாக தன் விரலை அசைத்து சைகை செய்தான்.

இதையெல்லாம் காருக்குள் இருந்தவன் கவனித்தான். தன் மொபைலில் வந்த மெசேஜை மீண்டும் ஒருமுறை படித்தான்.   ‘சிளிவிணி’  . பார்வையை உயர்த்தி இளைஞனை கவனித்தான். ‘‘டிரைவர்... அவன் பக்கத்துல வண்டியை நிறுத்து...’’வேகம் குறைந்த கார், கைடு முன்னால் நின்றது. காருக்குள் இருந்தவன் கண்ணாடியை இறக்கினான். ‘‘மலைக்கு போகணுமா? ஏறிக்க...’’ கதவைத் திறந்தான்.

கைடுக்கு ஆச்சர்யம். வெள்ளைக்காரன் அழகாக தமிழ் பேசுகிறானே? ‘‘தேங்க்ஸ் சார்...’’ கூச்சத்துடன் காருக்குள் நுழைந்தான். மலை மீது வண்டி செல்ல ஆரம்பித்தது.
‘‘ஐ அம் ஸ்காட் வில்லியம்ஸ்...’’ என்றபடி அந்த கைடை நோக்கி தன் வலக்கையை காருக்குள் இருந்தவன் நீட்டினான். ‘‘நான்... நான்... இளவரசன்...’’ கரங்களை பற்றியபடி குலுக்கினான் அந்த கைடு. ‘‘எங்க, சாமி கும்பிடவா?’’‘‘இல்லை சார். என் மனைவி மேல இருக்கா...’’‘‘ஐ ஸீ... அவங்க பேரு...’’
‘‘திவ்யா...’’

திருப்தியுடன் புன்னகைத்தான் ஸ்காட் வில்லியம்ஸ். அதே நேரம் -தர்மபுரி அருகே இருக்கும் ஒரு தலித் காலனிக்குள் ரங்கராஜனும் தேன்மொழியும் நுழைந்து கொண்டிருந்தார்கள்...
‘‘கூடங்குளத்தை சிலந்தி வலையால மூடிட்டேன்...’’ கத்தினான் ஸ்பைடர் மேன். ‘‘அது நல்லாவே தெரியுது. காட்ஸில்லாவை பாரு...’’ ஹாரி பார்ட்டர் உற்சாகமாக குரல் கொடுத்தான்.
ஆவேசத்துடன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த காட்ஸில்லாவின் வேகம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியிருந்து. ‘‘சூப்பர்... நம்ம வேலையை கச்சிதமா முடிச்சுட்டோம்...’’‘‘இல்லை ஸ்பைடர் மேன்...’’ குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்டான் ஹாரி பார்ட்டர். ‘‘இன்னும் பத்தே நிமிஷத்துல நாம கற்சிலையா மாறிடுவோம். அதுக்குள்ள இன்னொரு காரியத்தை முடிக்கணும்...’’
‘‘என்ன..?’’

‘‘பதுமையை பாரு...’’
ஸ்பைடர் மேன் பார்த்தான். பூமாலையுடன் பதுமை அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. ‘‘மைகாட். இதை எப்படி தடுக்கறது?’’
‘‘சொல்றேன்...’’ என்றபடி ஹாரி பார்ட்டர் தன் பார்வையை திருப்பினான். வட்டத்துக்குள் ஆடாமல் அசையாமல் லேசான மயக்கத்துடன் வேதாளம் நின்றிருந்தது.
‘‘ஸ்பைடர் மேன்... இது சாதாரண பதுமை இல்லை...’’
‘‘தென்?’’

‘‘மதனாபிஷேகப் பதுமை...’’
‘‘அப்படீன்னா?’’
‘‘உன் மூஞ்சு. எதுவுமே உனக்குத் தெரியாதா?’’
‘‘சத்தியமா தெரியாது ஹாரி பார்ட்டர்...’’

‘‘உனக்கு விவரம் சொல்றதுக்குள்ள எல்லாம் முடிஞ்சுடும் போலிருக்கு. சரி... சரி... அழுது தொலையாத. இங்க பாரு. விக்கிரமாதித்த மகாராஜாவோட சிம்மாசனம் உச்சில இருக்கு. அதை அடைய 32 படிகள் ஏறணும். உண்மைல ஒவ்வொரு படியும் ஒவ்வொரு பதுமைகள்...’’
‘‘ஓஹோ...’’

‘‘ராகம் போடாம சொல்றதை மட்டும் கேளு. அதுல இரண்டாவது படில இருக்கிற பதுமைதான் மதனாபிஷேகப் பதுமை...’’
‘‘ம்...’’
‘‘காலம் காலமா வேதாளம் சொல்லிட்டு வர்ற இருபத்து நான்கு கதைகளும் இந்தப் பதுமை சொன்னதுதான்...’’
‘‘அதாவது மதனாபிஷேகப் பதுமை...’’

‘‘ஆமாம்டா. குறுக்க குறுக்க பேசாத. இந்தப் பதுமை மட்டும் கொஞ்சம் பவர்ஃபுல். ஸோ இதையும் நாம அடக்கணும். இல்லைன்னா காட்ஸில்லாவா இருக்கிற விக்கிரமாதித்த மகாராஜா நம்மை தோற்கடிச்சுடுவார்...’’
‘‘சிலந்தி வலையை மீறியா?’’
‘‘ஆமா... அது பெரிய இரும்பு வலை பாரு...’’
‘‘ஏய்...’’

‘‘ஓகே... ஓகே... உன்னோட சிலந்தி வலை இரும்பை விட கெட்டியானதுதான். போதுமா? இப்ப ஆக வேண்டியதை பார்ப்போம்...’’
‘‘அதுதான் என்ன விஷயம்...’’
‘‘அட தேவுடா. எப்படி நியூக்ளியர் ரியாக்டரை சிலந்தி வலையால மூடினியோ... அப்படி இந்தப் பதுமையையும் நகர முடியாம கட்டிப் போடு...’’
‘‘ரைட். செய்துடறேன். நீ?’’

‘‘அதான் என்கிட்ட சகுனியின் தாயம் இருக்கே... அதை வைச்சு என் வேலையை நான் காட்டறேன்...’’
‘‘ஓகே...’’
‘‘ரெண்டு பேரும் ஒரே சமயத்துல டார்கெட் பண்ணணும்...’’
‘‘டன்...’’
‘‘ரெடி... ஒன்...’’

ஸ்பைடர் மேனின் நெற்றியில் முகமூடியை மீறி வியர்வை
பூத்தது. தயாரானான்.
‘‘டூ...’’
பதுமையை பார்த்தான்.
‘‘த்ரீ...’’
சட். எல்லாம் முடிந்தது.

இருவரும் திருதிருவென விழித்தார்கள். அதற்குக் காரணம் இருந்தது. ஸ்பைடர் மேனாலும் தன் கைகளை உயர்த்த முடியவில்லை. ஹாரி பார்ட்டராலும் தன் கரங்களை நீட்ட முடியவில்லை. உள்ளங்கால் முதல் கல்லாக மாறிக் கொண்டிருந்தவர்கள், இப்போது இடுப்பைத் தாண்டி கற்சிலையாக காட்சி தந்தார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருமே தங்கள் கைகளை உயர்த்தாமல் இருந்தது தவறாகிவிட்டது.

‘‘டேய்... எல்லாமே போச்சுடா...’’ ஸ்பைடர் மேனின் குரல் நடுங்கியது. ‘‘நாம தோத்துட்டோம்...’’
ஹாரி பார்ட்டர் வாயே திறக்கவில்லை. நிலைகுத்திய பார்வையுடன் பதுமையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
‘‘என்னடா பேசாம இருக்க...’’
‘‘வேற என்ன செய்யச் சொல்ற?’’

‘‘உன்னோட மேஜிக் ஸ்கூல்ல நீ எவ்வளவு பாடம் படிச்ச? அதுல ஏதாவது ஒன்றை அப்ளை பண்ணு...’’
‘‘வாய்ப்பே இல்லை...’’
‘‘ஏன்டா...’’
‘‘நாம சிலையா மாறலை...’’
‘‘பின்ன..?’’

‘‘பதுமையா மாறிக்கிட்டு இருக்கோம்...’’
‘‘என்னது?’’
‘‘யெஸ்... 32 பதுமைகள்ல இப்ப நாமும் அடக்கம்...’’
கேட்ட ஸ்பைடர் மேன் அதிர்ச்சியுடன் குனிந்து பார்த்தான். ஹாரி பார்ட்டர் சொன்னது சரி. பதுமையாகத்தான் கழுத்து வரை மாறி
யிருந்தான்.

‘‘இப்ப என்னடா பண்ணறது?’’
‘‘ஒரேயொரு வழிதான் இருக்கு...’’
‘‘என்ன?’’

‘‘நம்ம சகா வந்தான்னா நாம தப்பிக்கலாம்...’’
‘‘யாரு?’’
‘‘எக்ஸ் மேன்...’’ என்று ஹாரி பார்ட்டர் சொல்லி முடிக்கவும், இருவரும் உதடு வரை பதுமையாக மாறவும் சரியாக இருந்தது.
அச்சத்துடன் பார்வையை பரிமாறிக் கொண்டார்கள்.
அப்போது -

தடதடவென ஓசை கேட்டது. பார்த்தார்கள். நெருப்பை கக்கியபடி புல்லட் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவன் எக்ஸ் மேன் அல்ல. பதிலாக ஒரு பாட்டி.
அதுவும் எந்தக் கோட்டைக்குள் இருக்கும் குகையில் இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறதோ... அந்தக் கோட்டைக்கு சொந்தக்காரி.
சூனியக்கார பாட்டி.

புதரை விட்டு வெளியே வந்த சோழ மன்னரை, ‘‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பெருநற்கிள்ளி...’’ என்ற குரல் தடுத்து நிறுத்தியது.
கண்கள் சுருங்க தன் முன்னால் நின்ற பெரியவரை உற்றுப் பார்த்தார். பனி விலகியது போலிருந்தது. இளமாறனும், பாண்டிய இளவரசரும் தப்பிக்க இவரா உதவியிருப்பார்?
பெருக்கெடுத்து ஓடிய பொன்னி நதி அவர் மனக்கண்ணில் எழுந்தது. அதில் பீப்பாயில் பயணித்த வயதான உருவம் மங்கலாகத் தெரிந்தது. அந்த உருவத்தை தன் முன்னால் நின்று கொண்டிருந்த பெரியவரிடத்தில் பொருத்தினார். கச்சிதமாக இணைந்தது. சுருங்கிய மன்னரின் இமைகளும் விரிந்தன.
‘‘யார் அதங்கோட்டாசானா?’’

‘‘அப்படித்தான் என்னை சோழ நாடு அழைக்கிறது...’’
‘‘கவலை வேண்டாம். இனி அதே நாடு உங்களை துரோகி என்று அழைக்கும்...’’
‘‘என்னையா?’’

‘‘ஆம். உங்களைத்தான். கரிகால் சோழனின் மகள் வயிற்றுப் பேரனான நீங்கள், எதிரிகள் தப்பித்துச் செல்ல துணை புரிந்திருக்கிறீர்கள். இதை அறியும்போது மக்கள் உங்களை அந்தப் பெயரிட்டுத்தான் விளிப்பார்கள்...’’
‘‘எனில், உன்னை எப்படி
கூப்பிடுவார்கள்..?’’
‘‘அதங்கோட்டாசானே...’’

‘‘குரலை உயர்த்தாதே. சீன சக்கரவர்த்தியுடன் நீ உரையாடியதை ஒன்றுவிடாமல் நான் கேட்டேன். உண்மையான தேச துரோகி நீதான். சொந்த லாபத்துக்காக சோழ நாட்டையே யவனர்களுக்கும் சீனர்களுக்கும் தாரை வார்க்கத் துணிந்திருக்கிறாய். வரலாறு உன்னை மன்னிக்காது...’’
‘‘எந்த வரலாறு? சரித்திரத்தை எழுதுபவர்களே மன்னர்கள்தான்...’’
‘‘இந்த அகம்பாவம்தான் உன்னை அழிக்கப் போகிறது...’’
‘‘சாபமிடுகிறீர்களா?’’

‘‘எச்சரிக்கிறேன். மக்களைக் காப்பது மன்னனின் கடமை. அதிலிருந்து விலகாதே...’’
‘‘விலகினால்..?’’
‘‘கரைந்து போவாய்...’’
‘‘அதையும் பார்ப்போம்...’’
‘‘ஒன்றை புரிந்து கொள். நீயும், யவன ராணியும், சீன சக்கரவர்த்தியும் நினைப்பது போல் இளமாறன் சாதாரண பாண்டிய வீரன் அல்ல...’’
‘‘அப்படியானால் அவன் யார்?’’

‘‘அதை நீயே விரைவில் புரிந்து கொள்வாய்...’’
‘‘எப்போது? அவனை சோழ வீரர்கள் சீன வணிக சாத்தில் கைது செய்த பிறகா?’’
‘‘சிறை செய்வதா... அவனையா..?’’ - கடகடவென சிரித்தார் அதங்கோட்டாசான். ‘‘ஆணவம் உன் கண்களை மறைக்கிறது. அதனால்தான் நடக்கப் போவதை நான் நிமித்தமாக சொன்ன பிறகும் சிரிக்கிறாய். ஒன்றும் பிரச்னையில்லை. சொல்லியவண்ணமே நிகழ்ந்த பிறகு சோழ நாடே உன்னைப் பார்த்து நகைக்கும். அப்போது நீயே சகலத்தையும் புரிந்து கொள்வாய்...’’ என்றபடி விடுவிடுவென நகர்ந்தார். புதருக்குள் மறைந்தார்.

இறுகிய முகத்துடன் அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார் பெருநற்கிள்ளி. இளமாறனை விலங்கிட்டு புகார் முழுக்க இழுத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் அதங்கோட்டாசானுக்கு புத்தி வரும். கறுவியபடியே மணிபல்லவத் தீவிலிருந்து புகாருக்கு வந்தார்.
அங்கே அவர் கண்ட காட்சி, சித்தத்தை குலைக்கும் விதமாக இருந்தது.

இந்திர விழாவுக்காக உருவாக்கியிருந்த தேரில் யவன ராணியை ஏற்றிக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத் தெருக்களில் பறந்து கொண்டிருந்தான் இளமாறன்...

‘‘மகளிரணித் தலைவி மேல தலைவருக்கு என்ன சந்தேகம்..?’’
‘‘அவர் வாங்கிக் கொடுத்ததுக்கும் அதிகமா புடவை வச்சிருக்காங்களாம்..!’’

‘‘கதவுல ஏகப்பட்ட நம்பர்கள் எழுதியிருக்கே... உங்க வீட்டுக்கு இவ்வளவு நம்பரா?’’
‘‘அது எல்லாம் எங்க வீட்ல உள்ளவங்களோட அதிர்ஷ்ட நம்பர்களாக்கும்..!’’

‘‘தலைவர் கட்சி ஆபீஸை ஏன் கோர்ட் மாதிரி அமைச்சிருக்காரு?’’
‘‘அவரோட வழக்கு விசாரணைக்கு இங்கே ஒத்திகை பார்த்துட்டுதான் கோர்ட்டுக்கே போவார்!’’
- அம்பை தேவா, சென்னை-116.

(தொடரும்)

கே.என்.சிவராமன்