பரபரப்பான ஓட்டல்... வாடிக்கையாளர்கள் சாப்பாடு டோக்கனுக்கு முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். முதலாளி அறையில் அமைதியாக அமர்ந்திருந்த நண்பன் ராமுவைப் பார்க்கப் பெருமையாக இருந்தது சேகருக்கு. ‘‘குறுகிய காலத்துல பெரிய வளர்ச்சிடா உன்னோடது!’’ - பாராட்டிவிட்டு அமர்ந்தான் சேகர்.
‘‘இப்ப இந்த ஹோட்டல் மட்டுமில்லைடா... சொந்தமா கேட்டரிங் சர்வீஸ், இவன்ட் மேனேஜ்மென்ட் எல்லாம் பண்றேன். அதுக்காக வேன், ஆட்டோ எல்லாம் வாங்கிப் போட்டிருக்கேன்!’’ என்ற ராமு, மாலையிடப்பட்டிருந்த ஒரு பெரியவரின் புகைப்படத்தை நோக்கி வணங்கினான். ‘‘ராமு! இது... உன்னோட பழைய முதலாளிதானே? இவரைப் போய்?’’
‘‘புரியுது சேகர்... நூறு ரூபாய் சம்பள உயர்வு கேட்டதுக்கு, ‘அதெல்லாம் முடியாது’ன்னு என்னை வேலையிலிருந்து துரத்தியவர். அவர் போட்டோவை எதுக்கு மாட்டி வச்சிருக்கேன்னு கேக்குறே! அவர் முன்னாடி வளர்ந்து காட்டணும்னுதான் மாடா உழைச்சு இந்த ஹோட்டலை உருவாக்கினேன். இதை அவருக்குக் காட்டலாம்னு தேடிப் போனப்ப, அவர் இறந்துட்டதா சொன்னாங்க. அவர் மட்டும் அன்னைக்கு நூறு ரூபாய் உயர்த்திக் கொடுத்திருந்தா, இப்படியொரு வேகமும் வளர்ச்சியும் எனக்கு வந்திருக்காது. இப்பவும் அந்த வேகம் குறையாம இருக்கத்தான் இந்த போட்டோ’’ என்றான் ராமு.நண்பனின் வெற்றி ரகசியம் புரிந்தது சேகருக்கு!
மயிலை மாதவன்