புதுமுகம்



சுபமி


‘‘என்ன? சொத்துக்களை எல்லாம் விக்கப் போறீங்களா..? நான் விடவே மாட்டேன்!’’ - பேயாட்டம் ஆடிய மனைவி பார்வதியை, அடியோ அடி என்று அடித்து, வீட்டை விட்டு வெளியேற்றினான் பரமசிவன்.அடுத்த இரண்டாம் நாளில் கோடிகளோடு அவன் கோடம்பாக்கத்தில்! ‘‘தம்பி, உதவி இயக்குநராவே எவ்வளவு காலம்தான் குப்பை கொட்டுவே? நான் உன்னை இயக்குநர் ஆக்குறேன். ‘நச்’னு ஒரு காதல் படம் எடுத்துக் கொடு..!’’ என்றதும் உதவி இயக்குநருக்குத் தலைகால் புரியவில்லை.

‘‘கேட்டுக்க தம்பி... படத்துக்கு பணம் போடறதால நான்தான் ஹீரோ. எனக்கு என்ன குறைச்சல்? அழகோ அழகா, இளசோ இளசா ஒரு புதுமுகத்தைக் கண்டுபிடிச்சி எனக்கு ஜோடியாக்குறதுதான் உன்னோட முதல் வேலை!’’‘‘அந்த வேலை முடிஞ்சிருச்சின்னு வச்சுக்கங்க சார். ஒரு புத்தம் புதுமுகம் நேத்துத்தான் கோலிவுட்டுக்குள்ள நொழைஞ்சது. ‘ஜில்’னு அப்பிடி ஒரு ஃபிகர்! ‘பாஜல்’னு பேர் வச்சோம்... பாருங்க இந்த போட்டோவை!’’

டூ பீஸ் ஸ்விம் சூட்டில் சுண்டி இழுப்பது போல் கண் சிமிட்டிக் கொண்டிருந்த பாஜலைப் பார்த்ததும் பரமசிவம் பேயடித்தவன் போல ஆனான்.  பின்னே? அவன் மனைவி பார்வதிதான் இந்த பாஜல் என்றால் அவன் அரண்டு போக மாட்டானா?