முகவை ராஜா
இரவு மணி பத்து... பாடிக் கொண்டிருந்த லதா, தன் எதிரே மனோகர் வந்து நின்றதும் திடுக்கிட்டாள். ‘‘மனோகர்... நீங்களா?’’‘‘நானேதான்’’ என்றவன், கூர்மையான கத்தியை எடுத்து அவள் வயிற்றில் ஆழப் பதித்தான். அப்புறம் நெஞ்சில்... கத்தியை எடுக்கவில்லை. அதில் சேகரின் ரேகை ஏற்கனவே பதிந்திருந்தது. கையில் இருந்த க்ளவுஸைக் கழட்டி பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். சேகரின் செல்போன், பேனாவை கீழே போட்டான்.

இரவு மணி 12. மனோகர் வீட்டுக்கு போலீஸ் வந்தது. ‘‘லதாவைக் கொலை செய்ததுக்காக உங்களைக் கைது செய்யறோம்!’’ “என்ன எவிடன்ஸ் இருக்கு?’’ - கூலாகக் கேட்டான் மனோகர்.இன்ஸ்பெக்டர் சொன்னார்... ‘‘சேகரின் மனைவி லதாவை கொலை செய்துட்டு சேகரை குற்றவாளி ஆக்குறதுக்காக அவரோட உடைமைகளைப் போட்டிருக்கே. ஆனா, உனக்கு நேரம் சரியில்ல. லதா பாட்டுப் பாடி குரலை பதிவு பண்ணிட்டிருக்கும்போதுதான் நீ அங்க போயிருக்கே.
‘மனோகர், நீங்களா?’ன்னு அவங்க கேட்டதும், ‘நானேதான்’னு நீ பதில் சொன்னதும் பதிவாகி இருக்கு. அதுமட்டுமில்ல... சாயந்திரமே சேகர் ஒரு ஆக்ஸிடென்ட்ல சிக்கி சுயநினைவில்லாம ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருக்கார்!’’ கன்னத்தில் இரண்டு ‘பளார்’ விட்டு, அவனை ஜீப்புக்குள் தள்ளினார் இன்ஸ்பெக்டர்.