எந்த வகை நோ?



ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவிக்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த பாலியல் வன்கொடுமை, மனதை உருக்கியது. நீதித்துறையில் நம்பிக்கை வைத்திருக்கும், அந்தப் பெண் போராளிக்கு இனியேனும் சரியான நீதி கிடைக்க வேண்டும்!
 எம்.ரஜியா பேகம், சென்னை-91.நடிப்பு என்பதற்கு, தன்னை வருத்தி புதிய பொருள் தரும் விக்ரமின் உழைப்பு எப்படி வீணாய்ப் போகும்? ‘ஐ’ படம் அசத்தலான வெற்றியைப் பெறும் என்பதில் ‘ஐ’யமில்லை!
- த.சத்தியநாராயணன், சென்னை-38.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா பற்றிய செய்திகள் அனைத்தும் சுவாரஸ்யம். அங்கே வரிசை கட்டி நிற்கும் இலங்கைக் கொடிகள், ‘கச்சத்தீவு எங்களுக்கு மட்டுமே உரிமையானது’ என அழுந்தச் சொல்வது கண்டு கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டேன்!
- எஸ்.தமிழரசன், புதுச்சேரி.

இதுவரை எந்த அழகான ஹீரோயினும் நரைத்த தலை மேக்கப் போடவே இல்லையாக்கும். சமுத்திரக்கனி படத்துக்காக அமலா பால் போடும்போது மட்டும் உமக்கென்னய்யா அப்படி ஒரு கரிசனம்?
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையை ஒட்டியுள்ள கவுத்தி-வேடியப்பன் மலைத்தொடரில் இரும்புத்தாது வெட்டியெடுத்தால் ஏற்படும் பின்விளைவுகளைப் படிக்கப் படிக்க தலையே கிறுகிறுத்தது!
- சி.கொ.தி.முருகேசன், குன்னத்தூர்.

வடிவேலு என்கிற பிறவிக் கலைஞனைப் பற்றி ‘தெனாலிராமன்’ இயக்குனர் யுவராஜ் சொல்லச் சொல்ல அந்தப் படம் பற்றிய சுவாரஸ்யம் கூடிக்கொண்டே செல்கிறது. வெற்றியில் ‘தெனாலிராம’னும் ஒரு ‘இம்சை அரசன்’ ஆகட்டும்!
- மு.மதிவாணன், அரூர்.

‘மாணவர்களின் தகுதியைத் தீர்மானிக்க இவ்வளவு நெருக்கடிகள் தரும் ஒரு நாட்டில், ஆசிரியர்களின் தகுதியை நிர்ணயிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.
என்ற மனுஷ்யபுத்திரனின் ஆதங்கம் 100% நியாயம்!
- மா.மாரிமுத்து, ஈரோடு

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் ‘காதல் இல்லை’ என்று சொன்னாலே நிச்சயமாக உண்டு
என்றுதான் அர்த்தம்! விஷால் - லட்சுமிமேனன் சொல்லும் ‘நோ’வும் அந்த வகைதானா என்பதை காலம் தீர்மானிக்கட்டும்!
-ஓ.எஸ்பாலகிருஷ்ணன், கோவில்பட்டி

கலையுலகில் அடி வைத்திருக்கும் ஏவி.எம் சாம்ராஜ்யத்தின் அடுத்த தலைமுறைப் பெண்களை வாழ்த்தி வரவேற்கிறோம்!
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

எம்.ஜி.ஆரின் சாப்பாட்டுப் பழக்கத்தை சி.ஐ.டி.சகுந்தலா அருமையாக விவரித்திருந்தார். நன்றாகச் சாப்பிடுபவர்களை எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கும் என்பதும், தனியாக சாப்பிடுவதை அவர் தவிர்ப்பார் என்பதும் சுவாரசியமான தகவல்கள்!
- டி.கே. மேகலாகுமார், கடலூர்.