குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

இந்திய கிரிக்கெட் அணியும் ஏதாவதொரு எலிமென்டரி ஸ்கூல் அணியும் மோதினா, ரிசல்ட் எப்படி மேட்ச் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலயே தெரியுமோ... அப்படித்தான், தேர்தல்ல தனிச்சு நிக்கிற காங்கிரஸ் நிலைமையும். பெருந்தலைகளான ப.சிதம்பரம், தங்கபாலு, ஞானதேசிகன், ஜி.கே.வாசன்னு பலரும் போட்டியிடாம ஒதுங்கிக்கிற அளவுக்கு வலுவில்லாம கிடக்கும் தமிழக காங்கிரஸ் பலம் பெறவும், இல்லாத... மன்னிக்கவும், இழந்த பெருமையை மீண்டும் அடையவும் சில ஐடியாக்கள்!

*  இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக - சொல்லப் போனால் தலைவியாக - நடிகை நக்மாவையோ, நடிகை ‘குத்து’ ரம்யாவையோ களம் இறக்க வேண்டும். இதனால் கட்சிக்கு புது உறுப்பினர்கள் கிடைக்காவிட்டாலும் பழைய உறுப்பினர்கள் வெளியேறாமல் தடுக்கலாம்.
* கட்சியில் சேரும், ஏற்கனவே இருக்கும் (?!) கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும், அவர்கள் 40 வயதுக்கு குறைவாக இருந்தால் மாதாமாதம் உதவித்தொகையும், 40 வயதுக்கு அதிகமாக இருந்தால் மாதா மாதம் ஓய்வூதியத் தொகையும் வழங்க ஏற்பாடு செய்யலாம்.
* அண்ணன் மைக்கோ எப்படி தனது தேர்தல் அறிக்கையில் இந்தியாவின் பெயரை  ‘United States of India’ன்னு மாத்தலாம்னு சொல்லி இருக்காரோ, அது போல தமிழக காங்கிரசும் தங்களின் எல்லா கோஷ்டிகளையும் இணைத்து ‘united கோஷ்டீஸ் of தமிழக காங்கிரஸ்’னு பெயர் மாற்றி பரிசோதனை செய்யலாம்.
* 50 புது உறுப்பினர்களை சேர்த்துவிட்டால் வட்டச் செயலாளர் பதவி, 100 உறுப்பினர்களை சேர்த்து விட்டால் சதுர செயலாளர் பதவி என அறிவிப்புகள் விட்டு ஆள் பிடிக்கலாம்.
* எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு பம்பரம், தேன் மிட்டாய், ஸ்கிப்பிங் கயிறு, சீடை, முறுக்கு என தந்து, இப்பொழுதே உறுப்பினராக்க முயற்சி செய்யலாம்.
* கட்சிக்கு நிதி வளம் அதிகரிக்க, ரொம்ப பெரிதாய் ஒண்ணும் செய்ய வேணாம். ஒவ்வொரு வேட்டி கிழிப்புக்கும், ஒவ்வொரு கொடும்பாவி எரிப்புக்கும், கட்சி நிதியாக பத்து ரூபாய் செலுத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கலாம். இதன் மூலம் மானம் போனாலும் வருஷம் பல கோடி ரூபாய் கட்சிக்கு வருமானம் கியாரண்டி.
* எல்லாவற்றையும் விட முக்கியமாக, டாஸ்மாக் பார் மேஜைகளிலும், சாலை வரை தம் கட்டி நடந்து வந்து பிளாட்பாரத்திலும் மட்டையாகிக் கிடப்பவர்களின் கைகளில், ‘இவர் காங்கிரஸின் சொத்து’ என்று பச்சை குத்திட்டா, அவங்கள வேற கட்சியில சேர்க்க மாட்டாங்க. அவங்களும் காங்கிரஸுக்கே வந்திடுவாங்க.

உலகத்து உயிரினங்கள்ல பாவமானவங்க ஆம்பளைங்க. அந்த ஆம்பளைங்கள்ல பாவமானவங்க லேடீஸ் டெய்லருங்கதான். உலகின் ஒட்டு மொத்த ஆம்பளைங்களும் அதிசயப் பிறவிங்கன்னா, இந்த லேடீஸ் டெய்லருங்க எல்லாருமே தெய்வப் பிறவிங்க. ஒரு பொண்ணுகிட்ட, அவ புருஷனைவிட அதிகமா திட்டு வாங்குறது நம்ம டெய்லருங்கதான். நல்லா ஜாக்கெட் தச்சு கொடுத்தாலும், ‘நாசமா போறவன், போன தடவை டைட்டா தச்சிட்டான்’னு ஃபிளாஷ்பேக் சொல்லித் திட்டுவாங்க.

 நல்லா தைக்காட்டியும் ‘வீணா போறவன், எப்பவும் இப்படி லூசாவே தைக்கிறான்’னு திட்டுவாங்க. 5 மாசம் கஷ்டப்பட்டா ராக்கெட் சயின்ஸ் கூட கத்துக்கலாம். ஆனா, 50 வருஷம் தச்சு கொடுத்தாலும் ஜாக்கெட் சயின்ஸ் மட்டும் கத்துக்கவே முடியாது. பூமில இருந்து போன வேகத்துல திரும்பி வந்த ராக்கெட்டுங்க கூட ஒண்ணோ ரெண்டோதான். ஆனா, தச்சு வாங்கிட்டு போன அரை நாளுல ஆல்ட்ரேஷனுக்கு திரும்பி வராத ஜாக்கெட்டுங்களே இல்லை.

ஒழுங்கான ஜாக்கெட் தைக்கவே டெய்லருங்களுக்கு உடம்பெல்லாம் உதருது. இதுல ஜாக்கெட்ல ஜன்னல் வையி, வென்டிலேட்டர் வையின்னு பொம்பளைங்க பண்ற இம்சையில, டெய்லருங்க பரம்பரையே பத்து திசையிலயும் சிதறுது. டெய்லருங்க மனசெல்லாம் மண்டியிட்டு கதறுது. பொண்ணுங்க டெய்லருங்கள படுத்தற கொடுமைய, மன்மோகன் சிங் கூட பத்து வருஷம் பட்டிருக்க மாட்டாரு. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்ல கூட கை இறக்கம் கம்மியா இருக்குன்னு ஆல்ட்ரேஷன் வந்த ஜாக்கெட்டுங்க ஏராளம். ஐம்பது தடவை பிரிச்சு தைச்சாலும் அறுபது ரூபாதான் தையற்கூலி, எந்த பெண்ணும் அதுல காட்டுறதில்ல தாராளம்.

இந்திய அரசியலில் சூப்பர் ஸ்டாராக அறிமுகமான அரவிந்த் கெஜ்ரிவால், கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அரசியலின் பவர் ஸ்டாராகிக் கொண்டிருக்கிறார். மீடியாக்களில் வரும் பப்ளிசிட்டி மட்டுமே அவரின் கெப்பாசிட்டி என்பது கொஞ்சங் கொஞ்சமாய் வெளுக்கிறது. தன்னை டெல்லியின் முதல்வராக்கிய மக்களுக்கு இதுவரை ஏமாற்றங்களை மட்டுமே தந்த கெஜ்ரிவால், இப்போது வாரணாசியில் மோடியை எதிர்த்து நின்று இந்தியாவிற்கு மாற்றம் தருவதாய் முழங்குகிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்டோவில் போகிறார், அரவிந்த் கெஜ்ரிவால் பஸ்ஸில் போகிறார், கெஜ்ரிவால் டிரெயினில் போகிறார், கெஜ்ரிவால் நடந்து போகிறார் என தனது ஒவ்வொரு செய்கையும் மீடியாக்களில் வர வேண்டுமென நினைக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், உண்மையில் வீண் விளம்பரங்களினால் வீணாய்ப் போகிறார். ஒரு படத்தில், ‘சார், ரம்பா சார்... சார், ரம்பா குளிக்குது சார்... சார், ரம்பா சிரிக்குது சார்... சார், ரம்பா கார்ல போகுது சார்’ என ஒவ்வொரு செய்கையையும் பார்த்திபன் விளம்பரப்படுத்துவார். அரவிந்த் கெஜ்ரிவால்கூட ஒரு ரம்பாதான்.

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்!

அ.தி.மு.க வேட்பாளர்கள் ‘24 மணி நேரமும் கரன்ட் இருக்கு’ன்னு பிரசாரம் செய்யறப்ப, டக்குன்னு கட்டாகி அவங்கள சிக்கலுக்கு உள்ளாக்கும் அந்த புத்தி கெட்ட மின்சாரம்தான்!